நெல் வயல்களில் “இராணுவப் புழுத்” தாக்கம் விவசாயிகளை எச்சரிக்கிறது விவசாயத் திணைக்களம்

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)
மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை மற்றும் கிரான் விவசாய போதனாசிரியர் பிரிவுகளுக்குட்பட்ட நெல் வயல்களில் 'இராணுவப் புழுத்' (Army Worms) தாக்கம் காணப்படுவதாக மட்டக்களப்பு விவசாயத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நெற்செய்கை பண்ணப்படும் பட்டியடிவெளி, சேம்பையடி, தவணை, காட்டுக்கட்டு போன்ற கண்டங்களிலுள்ள  ஒருசில வயல்களில் கடந்த சில நாட்களாக இந்த 'இராணுவப் புழுவின்' (Army Worms) தாக்கம் அவதானிக்கப்பட்டுள்ளது.



இந்த இராணுவப் புழு பொதுவாக 5-6 CM  சென்ரி மீற்றர் நீளமான கறுப்பு அல்லது சாம்பல் நிறமானது
அத்துடன் அதன் முதுகுப் பக்கம் இளமஞ்சல் நிற கோடுகளுடனும் காணப்படும். பொதுவாக இவை இரவு நேரங்களில் வயலில் தாக்கம் ஏற்படுத்தும். இதனால் நெல்வயல்களில் நீர் மட்டத்துக்கு மேலுள்ள தாவரப் பகுதிகளை தாக்குவதனால் அங்கு  'கால்நடைகள் மேய்ந்ததுபோல்' தோற்றமளிப்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது விவசாய திணைக்கள உத்தியோகத்தர்களின் களவிஜயம், தெளிவூட்டல் பயிற்சி போன்ற நிகழ்வுகள் மூலம் பெரும்பாலும் இந்தப் புழுவின் தாக்கம் ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
மேலும் விவசாயிகள் இது தொடர்பான கட்டுப்பாடு மற்றும் ஏனைய விபரங்களை பெறவேண்டுமாயின் அப்பகுதி விவசாய போதனாசிரியர்களான ரீ. ரவிவர்மன் (தொலைபேசி 0772734411) எம். கலைமோகன் (தொலைபேசி 0767222412) ஆகியோரை நாடலாம் என்று மட்டக்களப்பு விவசாயத் திணைக்களம் விவசாயிகளைக் கேட்டுள்ளது.