(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள மிச் நகர் கிராமத்தில் நள்ளிரவு வேளையில் வீட்டுக் கூரையால் உள் நுளைந்து பணம் நகைகள் என்பன திருடப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
மிச் நகர் கிராமத்தைச் சேர்ந்த காசிம்பாபா காதர் முஹைதீன் என்பவரின் வீட்டிலேயே செவ்வாய் நள்ளிரவு திருட்டு இடம்பெற்றுள்ளதாக ஏறாவூர் பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது பற்றி அவரது மகள் காமில் பஸ்மியா கூறுகையில் அதிகாலை 3.30 மணிக்கு விழித்துக் கொண்டு எனது தலையணை அருகிலிருந்த அலைபேசியைத் தேடினேன் அது காணாமல் போயிருந்தது.
எழுந்து அடுக்களைப் பக்கம் சென்றேன். அங்கு கூரை ஓடுகள் கழற்றப்பட்டிருந்தன.
அப்பொழுதுதான் விபரீதத்தை உணர்ந்து நகைகளைத் தேடிய பொழுது எனது தங்க மாலைகள் 2, வளையல்கள் 2, மோதிரம் 1 எல்லாமாக எட்டரைப் பவுண் நகைகளும் எனது 40 ஆயிரம் ரூபா பணமும் தங்கையின் பணம் 10 ஆயிரமும் கொள்ளையிடப்பட்டிருந்தது தெரிய வந்தது. அத்துடன் சம்சுங் 20 ஆயிரம் ரூபாய் பெறுமதியான கைப்பேசியும் சாதாரண கைப்பேசியும் திருடப்பட்டுள்ளது என்றார்.
இச்சம்பவம் குறித்து பொலிஸார் விசாரித்து வருவதாகத் தெரிவித்தனர்.
















