ஓந்தாச்சிமடம் விநாயகர் வித்தியாலய ஆசிரியரின் இடமாற்றம் முறையற்றதா?

ஓந்தாச்சிமடம் ஸ்ரீ விநாயகர் வித்தியாலயத்தின் கணித பாடத்திற்கான ஆசிரியரின் இடமாற்றமானது முறையற்றது எனத்தெரிவித்தும், இன்னும் சில விமர்சனங்களுடனும் பட்டிருப்பு வலய கல்விப்பணிப்பாளர் மீது குற்றம் சுமர்த்தி கடந்த 15.04.2015 அன்று வற்றிநாதம் எனும் இணையத்தளத்தில் செய்தி ஒன்று பிரசுரிக்கப்பட்டிருந்தது.

இச் செய்தியானது ஓந்தாச்சிமடம் விஸ்வப்பிரம்மகுல பொற்தொழிலாளர் சங்கத்தின் கடிதத் தலையில் அச்சிடப்பட்ட அறிக்கை ஒன்றின் மூலமாக அதன் இணைப்புடன் குறித்த இணையத்தளத்தில் பிரசுரிக்கப்பட்டிருந்தது.

இது தொடர்பாக குறித்த பொற்தொழிலாளர் சங்கத்தின் அங்கத்தவர்களால் எமது இணையத்தளத்திற்கு தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,
குறித்த பொற்தொழிலாளர் சங்கமானது மிக நீண்டகாலமாக இயங்காது வலுவற்ற நிலையில் உள்ளதென்றும், அதன் தலைவர் 3 வருடங்களுக்கு முன்னரே வெளிநாடு சென்றுவிட்டதாகவும் தெரிவித்துள்ள இவர்கள் இந்த குறித்த செய்தி தொடர்பாக இதன் பொருளாளருக்கோ அங்கத்தவர்களாகிய தங்களுக்கோ தெரியப்படுத்தாது குறித்த கடிதத் தலைப்பில் கையொப்பமிட்டுள்ள இரு நபர்களின் தனிப்பட்ட தீர்மானத்தின்படியே வெளியிட்டுள்ளனர் எனக் குறிப்பிட்டுள்ளனர்.

இது தொடர்பாக நாம் குறித்த பாடசாலையின் அதிபரை தொடர்பு கொண்டு கேட்ட போது, அவர் கருத்து தெரிவிக்கையில் ஆசிரியர் இடமாற்றம் என்பது வலய கல்விப் பணிப்பாளரதும், அவரது பணிமனையினதும் கடமையாகும். ஒரு அதிபர் என்றவகையில் நான் அதனை விமர்சிக்க முடியாது எனத் தெரிவித்தார்.

நாம் வலய கல்விப் பணிப்பாளரை தொடர்பு கொண்டு, இந்த இடமாற்றம் என்ன அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது எனக் கேட்ட போது,
குறித்த ஆசிரியர் 12 வருடங்களாக குறித்த பாடசாலையில் கடமையாற்றி வருகின்றார். இவருக்கு ஏற்கெனவே 4 தடவைகள் இடமாற்றம் வழங்கப்பட்டிருந்தும் அவர் பல்வேறு தரப்பினர் ஊடாக அந்த இடமாற்றங்களை இரத்து செய்து வந்துள்ளார்.
குறித்த பாடசாலையின் பெற்றோர்கள் இவருக்கு இடமாற்றம் வழங்குமாறு எழுத்து மூலம் எனக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். அத்துடன் மாகாண கல்விப் பணிபாளரும் இவருக்கு இதுவரை இடமாற்றம் வழங்காமை பற்றி வினவியுள்ளார். எனவேதான் இவருக்கான இடமாற்றத்தினை வழங்கியுள்ளோம். அதுவும் இவரின் சொந்த ஊரில் உள்ள பாடசாலைக்கே தற்போது இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. எனவே இது ஒரு சாதாரண இடமாற்றமே அன்றி இதில் எந்தவித முறைகேடும் இல்லை எனத் தெரிவித்தார்.

மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,
 இவ்வாசிரியர் இவ்விடமாற்றத்தினை இம்முறையும் இரத்து செய்வதற்கு  முயற்சிப்பதுடன், தேவையற்ற சில வழிகளையும் கையாண்டு வருகின்றார். அதில் ஒரு செயற்பாடே வற்றிநாதம் எனும் இணையத்தில் வெளிவந்துள்ள செய்தியாகும். இந்த இணையத்தளம் தொடர்ச்சியாக என்மேல் சேறுபூசும் நடவடிக்கையினை மேற்கொண்டு வருகின்றது. இது போன்று இன்னும் ஒரு சில JVPNEWS போன்ற இணையத்தளங்களும் இவ்வாறு செயற்பட்டு வருகின்றன. தனிப்பட்ட கோபதாபம் உள்ளவர்களின் தேவைகளை நிறைவேற்றும் மற்றும் பொய்யான செய்திகளை போட்டு  மக்களை ஏமாற்றும் ஊடகங்களாகவே இவைகள் செயற்பட்டு வருகின்றன. இவைகளுக்கெதிராக நான் சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளேன் எனத்தெரிவித்தார்.

ஆசிரிய சமூகமானது பல மைல்களுக்கு அப்பால் போக்குவரத்து வசதியற்ற பாடசாலைகளுக்கெல்லாம் அல்லலுற்றுச் சென்று கடமையாற்றிவருகின்ற நிலையில் ஒரு ஆசிரியர் தனது சொந்த வசிப்பிடத்தில் உள்ள பாடசாலைக்கான இடமாற்றத்தினை ஏற்காது முரண்டுபட்டு நிப்பது வியர்ப்புக்குரியதாகும்.

இந்த விடயத்தினை பெரிது படுத்தி அதிகாரிகள் மேல் குற்றம் சுமர்த்தி சேறு பூசும் பொறுப்பற்ற அனாமதைய இணையத்தளமாக இந்த வற்றிநாதம் எனும் இணையத்தளம் செயற்பட்டு வருகின்றது. அன்மையில்
இந்த இணையத்தளத்தில் வெளியான செய்தி, பின்னர் பொய்யென நிருபிக்கப்பட்டதுடன், இவ்விணையத்தளம் மீது விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

இவ்வாறான இணையத்தளங்களின் பொய்யான செய்திகளை இன்னும் சில இணையத்தளங்கள் பிரதி செய்து பிரசுரித்து வருகின்றன.
குறிப்பிட்ட இப்படியான இணையத்தளங்கள் வருகையாளர்களின் எண்ணிக்கையை கூட்ட வேணும் என்பதற்காக , இப்படியான பொய்யான செய்திகளையும் , கலாசாரா சீரழிவுகள் தொடர்பான செய்திகளையும் பிரசுரித்து மக்களை ஏமாற்றி வருகின்றனர் .
இவைகள் மக்களுக்கு என்ன செய்ய விளைகின்றன, ஏன் இவ்வாறு பிழையாக வழிநடாத்த முயற்சிக்கின்றன என்பது புரியவில்லை. இவைகள் தொடர்பாக மக்கள்தான் விழிப்பாக இருக்கவேண்டும்.