(SUBAJAN)மட்டக்களப்பு மாவட்டம் ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள கொம்மாதுறை படை முகாமுக்கருகில் சனிக்கிழமை பகல் மோட்டார் ஷெல் ஒன்று மீட்கப்பட்டதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
மேற்படி படை முகாமுக்கருகிலுள்ள சித்தி விநாயகர் வித்தியாலய விளையாட்டுத் திடலைச் சூழவுள்ள முட்கம்பி வேலிப் பற்றைக்குள் இந்த மோட்டார் ஷெல் காணப்பட்டுள்ளது.
மோட்டார் ஷெல் ஒன்று வெளித்தெரிவதாக தங்களுக்கு கிடைத்த தகவலின்படி உடனடியாக ஸ்தலத்திற்குச் சென்று மோட்டார் குண்டை மீட்கும் பணியில் ஈடுபட்டதாக பொலிஸார் கூறினர்.
குண்டு செயலிழக்கச் செய்யும் படை அதிகாரிகள் வரவழைக்கப்பட்டு இந்த மோட்டார் ஷெல் மீட்கப்பட்டது.
குண்டு செயலிழக்கச் செய்யும் படையினர் மேற்படி மோட்டார் ஷெல்லை மீட்டு பாதுகாப்பாக செயலிழக்கச் செய்வதற்காக அங்கிருந்து கும்புறுமூலை படை முகாமுக்கு எடுத்துச் சென்றனர்.
இது விடயமாக ஏறாவூர் பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.


















