மட்டக்களப்பில் சிரேஷ்ட ஊடகவியலாளர் தராக்கி சிவராம் அவர்களின் 10ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு

(வரதன், எஸ் .சதீஷ் ,லோகதக்சன், துசாந்தன்)
ஊடகவியலாளர் சிவராம் அவர்களின் 10ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று மட்டக்களப்பில் அனுஷ்டிக்கப்பட்டது.  வடக்கு கிழக்கு மற்றும் தென்னிலங்கை ஊடகவியலாளர் அமைப்புக்கள் ஒன்றிணைந்து மட்டக்களப்பு மாநகர மண்டபத்தில் இந்த நினைவாஞ்சலி நிகழ்ச்சியையும் நினைவு பேருரையையும் இன்று நடத்தினர்.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு யாழ்ப்பாணம் வவுனியா மற்றும் தென்னிலங்கை ஊடகவியலாளர்களும், கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் விரிவுரையாளர்களும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாகாணசபை உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் தமிழ் சமூகத்தில் ஊடகக்கல்வி வாய்ப்புக்களும் சவால்களும் என்ற தலைப்பிலான நினைவு பேருரையை கிழக்கு பல்கலைக்கழக திருமலை வளாக தொடர்பாடல் கற்கைகள் துறையின் தலைவர் கலாநிதி சி.ரகுராம் நிகழ்த்தினார்.

சிவராமுடனான நாட்கள் என்ற தலைப்பில் வீரகேசரி நிறுவன ஆலோசகர் வி.தேவராஜ் உரையாற்றினார். ஊடக சுதந்திரம் என்ற தலைப்பில் சுதந்திர ஊடக அமைப்பை சேர்ந்த சுனில் ஜயசேகர உரையாற்றினார்.
மண்முனை வடக்கு பிரதேச கல்விப்பணிப்பாளர் அ.சுகுமார், எழுத்தாளர் எஸ்.எல்.எம்.ஹனிபா ஆகியோரும் உரையாற்றினர்.