சுவிஸ் உதயம் அமைப்பின் அனுசரணையில் ஏடு அமைப்பினால் உதவிகள் பெறுபவர்களுடனான விஷேட கலந்துரையாடல் மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை நல்லதம்பி மண்டபத்தில் இடம்பெற்றது.
கிழக்கு உதயம் அமைப்பின் தலைவரும் ஓய்வு நிலை பிரதிக் கல்விப்பணிப்பாளருமான எம்.விமலநாதன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வின்போது, சுவிஸ் உதயம் அமைப்பின் பொருளாளர் கே.துரைநாயகம், செயலாளரும் கோட்டக் கல்விப்பணிப்பாளருமான கே.பாலச்சந்திரன், உபதலைவரும் ஓய்வு நிலை அதிபருமான கலாபூஷணம் பாவாணர் அக்கரைப்பாக்கியன், ஏடு அமைப்பின் தலைவர் அருளானந்தம், ஏடு அமைப்பின் நிருவாகிகள், உறுப்பினர்கள், உதவிகள் பெறும் பாடசாலை, பல்கலைக்கழக மாணவர்கள், வாழ்வாதார உதவிகள் பெறும் குடும்பத்தலைவர்கள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வின்போது கலந்து கொண்டனர்.
இதன்போது உரையாற்றிய கே.துரைநாயகம் குறிப்பிடுகையில், இன்றைய தினத்தில் எமது அனுசரணையில் ஏடு அமைப்பின் மூலம் உதவிகள் பெறும் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சியடைகின்றேன்.
எமது அமைப்பின் தலைவர் தேவசகாயம் சுதர்சன், செயலாளர் வேலப்பன் ஜெயக்குமார் மற்றும் எமது அமைப்பின் உறுப்பினர்கள் அனைவரும் ஒருமித்த கருத்துடன் கிழக்கு மாகாணத்திலுள்ள எமது சமூகத்தின் உயர்ச்சிக்காக செயற்படுவதற்காக முனைப்புடன் உள்ளார்கள். நாங்கள் எவ்வாறான துன்பங்களை சந்தித்த போதிலும் வறுமை நிலையில் உள்ள எம்மவர்களுக்கு உதவியளிக்கும் முயற்சியினை கைவிடும் எண்ணம் எமக்கில்லை.
கடந்த காலங்களில் பல்வேறான இழப்புகளை எமது சமூகம் சந்தித்துள்ளது. கடந்த கால யுத்தத்தினாலும் அனர்த்தங்களினாலும் உறவுகளையும் உடமைகளையும் இழந்து நலிவுற்றுள்ளோம். இவ்வாறாக இழந்தவற்றை மீழப்பெற்றுக் கொள்ளும் ஆயுதமாக நாம் பயன்படுத்த வேண்டியது கல்வியை மட்டுமே. நமது சமூகம் இழந்தவற்றை பெற்றுக்கொள்ள கல்வியை பூரணமாக பயன்படுத்த வேண்டும். வறுமையை காரணமாக நினைத்து கல்வியைக் கைவிடக் கூடாது. இவ்வாறானவர்களுக்கு நாம் உதவியளித்து வாழ்வில் முன்னேற்றவே எமது அமைப்பு தன்னலம் பாராது செயற்பட்டு வருகின்றது. எமது அமைப்பின் மூலம் உதவிகள் பெற்றுக் கொள்ளும் மாணவர்கள் வாழ்வில் உயர்ந்து உங்களைப் போன்றவர்களுக்கு நீங்களும் உதவிகளை வழங்க முன்வர வேண்டும் என்றார்.












