மட்டக்களப்பு YWCA நிறுவனத்தினால் நடாத்தப்படும் TINY TREASURES பாலர் பாடசாலையின் வருடாந்த விளையாட்டுப்போட்டி


(சித்தேஸ்)
மட்டக்களப்பு YWCA நிறுவனத்தின் வழிகாட்டலில் நடாத்தப்படும் TINY TREASURES பாலர் பாடசாலையின் வருடாந்த விளையாட்டுப்போட்டி சனிக்கிழமை 11.04.2015 அன்று மட்டக்களப்பு கோட்டமுனை மெதடிஸ்த தேவாலய முன்றலில் YWCA தலைவி திருமதி. ஏஞ்சலா பிலிப் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வின் பிரதம அதிதியாக கிழக்குப் பல்கலைக் கழக முகாமைத்துவத்துறை சிரேஸ்ட விரிவுரையாளர் திருமதி. பாரதி கென்னடி அவர்களும் விசேட அதிதிகளாக முன்னால் முன்பள்ளி உதவிக் கல்விப் பணிப்பாளர் திருமதி. ராஜேஸ் ஸ்ரீநிவாசன் அவர்களும் சனச அபிவிருத்தி வங்கி முகாமையாளர் திருமதி. வானதி ஜெகன் அவர்களும் கலந்து கொண்டனர். 

இந்நிகழ்வில் பாலர்களுக்கான வினோத உடைப்போட்டி, முச்சக்கர வண்டி ஓட்டப்போட்டி, பால் குடித்தல் மற்றும் பல விளையாட்டு நிகழ்வுகளும் இடம்பெற்றதுடன் பெற்றோர் மற்றும் YWCA உறுப்பினர்களுக்கான விளையாட்டுக்களும் இடம்பெற்றன. மேலும் போட்டியில் வெற்றி பெற்ற பாலர்களுக்கு பரிசிகள் அதிதிகளால் வழங்கிவைக்கப்பட்டன.

YWCA ஆனது  அரச சார்பற்ற கிறிஸ்தவ பெண்கள் நிறுவனமாகும். 1970ம் ஆரம்பிக்கப்பட்ட இந்நிறுவனம் அர்ப்பணிப்புள்ள பெண்களால் மட்டக்களப்பில் பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் சிறுவர்கள் மத்தியில் சேவையாற்றி வருகின்றது. இந்நிறுவனத்தின் செயற்பாட்டுக்கு தேசிய YWCA நிறுவனமும் ஜெனிவாவில் உள்ள உலக YWCA நிறுவனமும் உதவியும் வழிகாட்டலும் வழங்கிவருகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்