நோயாளர்கள் வலியின் காரணமாக சினந்து பேசினாலும் நாம் அன்போடு அரவணைக்க வேண்டும்

( சிவம் ) நோய்வாயப்பட்டு சிகிட்சை வேண்டி வைத்தியசாலைக்கு வரும் நோயாளர்கள் வலியின் காரணமாக சினந்து பேசினாலும் நாம் அன்போடு அவர்களை அரவணைத்து மலர்ந்த முகத்தோடு சிகிட்சையளிப்பதனால் அவர்களின் நோய் இலகுவில் குணமாகும் இதற்கு உதாரணமாகத் திகழ்ந்தவர் தாதியர் ஸ்தாபகி பிளரன்ஸ் நைற்றிங்கேல்.
இவ்வாறு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் உதவிப் பணிப்பாளர் வைத்தியக் கலாநிதி திருமதி எல்.எம். நவரட்ணராஜா.


சர்வதேச தாதியர் தினம் - 2015 ஐ முன்னிட்டு வைத்தியசாலையின் தாதியர் நலன்புரிச் சங்கம் ஏற்பாடு செய்த வைத்தியசாலையில் கடமைபுரியும்; தாதியர்களின் பிள்ளைகளில் கல்வியில் சிறந்த அடைவு மட்டத்ததைப் பெற்றவர்களுக்கான விருது வழங்கிக் கௌரவிக்கும் நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை (10) வைத்தியசாலையின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டு உதவிப் பணிப்பாளர் மேலும் கூறுகையில்
இத்தாலியின்  பிளரன்ஸ் மாநிலத்தில் பெரிய செல்வந்தக் குடும்பத்தில் பிறந்தவர் உலக மகா யுத்தத்தில் காயமுற்றவர்களுக்கு; யாருக்கும் தெரியாமல் இரவினில் சிகிட்சையளிக்கும் மனிதாபிமானப் பணியில் நைற்றிங்கேல் ஈடுபட்டதனால் தான் இன்று அந்தத் தாதியை நாம் நினைவு கூருகின்றோம். அவர் எமது சேவைக்கு சிறந்த உதாரணமாகும்.

நோயாளர்கள் 100 வீதம் பிழை விடுவார்கள் அதற்கு நாங்கள் அவர்களைக் கண்டிக்காமல் இன்முகத்தோடு சிகிட்சையளிக்கவேண்டும். வைத்தியசாலை சிறப்பாக இயங்குவதற்கு வைத்தியாகளை விட தாதியரின் பணி முக்கியமானது.

தற்காலத்தில் வைத்தியசாலைக்கு சிகிட்சை வேண்டி வரும் நோயாளர்களை தாதியர்கள் இன்முகத்தோடு சேவை அளிப்பதில்லை என்கின்ற குறைபாடு உள்ளதாக நிர்வாகத்தினராகிய எமக்கு முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன. இது எமது சேவைக்கு பெரும் இழுக்காகும். இந்த மனப்பான்மையை நாம் மாற்றிக் கொண்டால் சமுகத்தால் மதிக்கப்படும் சேவகர்களாக நாம் மிளிருவோம்.

இன்று பணத்திற்காக சிறந்த சிகிட்சையளிக்கும் பல தனியார் வைத்தியசாலைகள் உள்ளன. இதை எம்மால் மாற்ற முடியாது மட்டமன்றி அது காலத்தின் தேவையாகவுமுள்ளது. ஏழைகளிடத்திலே இறைவன் குடி கொண்டுள்ளான் எனவே இலவச வைத்திய சேவை தேடி வருபவர்களுக்கு எம்மால் முடிந்த சேவையை நாம் செய்ய வேண்டும் எனத் தெரிவித்தார்;