(சிவம்)விழிப்புலனற்ற தரிசனம் மாணவர்கள் சவால்களை எதிர்கொண்டு போட்.டிகளில் கல்வி, கலாசாரம், விளையாட்டு என்பவற்றில் சிறந்த அடைவு மட்டங்களைப் பெற்ற சாதனை படைக்கின்றனர்.
இவ்வாறு தரிசனம் விழிப்புலனற்றோர் பாடசாலையின் நிர்வாக உதவிச் செயலாளர் கே. கிருஷ்ணகுமார் தெரிவித்தார்.
மட்டக்களப்பு நொச்சிமுனை தரிசனம் விழிப்புலனற்றோர் பாடசாலையின் 23 ஆவது ஆண்டு விழா கலை நிகழ்வுகள் பாடசாலையின் மண்டபத்தில் இன்று சனிக்கிழமை (16) நடைபெற்றது.
பாடசாலையின் தலைவர் முருகு தயானந்தன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அவர் கலந்து கொண்டு அவர் மேலும் தெரிவிக்கையில்
இப்பாடசாலையில் இதுவரையில் 25 பேர் பல்கலைக் கழகம் சென்றுள்ளனர், 10 பேர் அரச திணைக்களங்களில் வேலை வாய்ப்புப் பெற்றுள்ளதோடு கலை கலாசார போட்டிகளிலும் பங்கு பற்றி வெற்றி பெற்றுள்ளனர்.
அத்தோடு கடந்த 2002 இல் நடைபெற்ற கிறிக்கட் சுற்றுப்போட்டி மற்றும் கடந்த மாதம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற பார்வையற்ற மாணவர்களுக்கிடையேயான கிறிக்கட் சுற்றுப் போட்டியில் வெற்றி பெற்றுள்ளனர்.
கல்வி கற்க முடியாத மாணவர்களுக்கு தொழில் பயிற்சி வழங்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு நீங்கள் உதவ வேண்டும் என கலந்து கொண்ட அதிகாரிகளிடம் வேண்டுகோள் வீடுத்தார்.
இன்நிகழ்வில் கலாபூசணம் மாஸ்டர் சிவலிங்கம் அவர்கள் கதைகள் சொல்லி சபையோரை மகிழ்வித்தார்.
கிழக்கு மாகாண சமூக சேவைத் திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர் கு. குணநாதன், மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் சா. அருள்மொழி, நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களப் பொறுப்பதிகாரி மா. வரதராஜன் ஆகியோர் அதிதிகளாகக் கலந்து கொண்டு மாணவர்களுக்கு விருதுகள் வழங்கிக் கௌரவித்தனர்.





















