விவசாயிகளுக்கு வழங்கப்படும் மானிய உரத்தை மோசடி செய்த 5 பேர் கைது

(ஏ.எச்.ஏ. ஹுஸைன் )
மானிய உரத்தை மாற்றிப் பொதியிடும் மோசடி உரத்தொழிற்சாலை சுற்றி வளைக்கப்பட்டபோது அவ்வாறான மோசடி வேலைகளில் ஈடுபட்ட ஆலை உரிமையாளருடன் 5 பேர் கைது செய்யப்பட்டதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

அரசாங்கத்தினால் மானியமாக குறைந்த கட்டணத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் உரத்தை விவசாயிகளிடமிருந்து மிகக் குறைந்த விலைக்குப் பெற்று அதன் பொதியை மாற்றி அதிக விலைக்கு விற்பனை செய்யும் தொழில் நீண்டகாலமாக இடம்பெற்று வந்திருக்கின்றது.


இது தொடர்பாக மட்டக்களப்பு குற்றத் தடுப்பு புலனாய்வுப் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலை அடுத்து வெள்ளிக்கிழமை ஏறாவூர் மீராகேணி கிராமத்திலுள்ள அரிசி ஆலையொன்று தீடீரென சுற்றி வளைக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வேளையில் மானிய உரப்பொதிகள் மாற்றப்பட்டு வேறு பொதிகளில் உரம் வேறு பொதிகளில் நிரப்பப்பட்டிருந்ததையும் பொலிஸார் கண்டு பிடித்தனர்.
மோசடியாகப் பொதி செய்யப்பட்ட ஒரு தொகை உரமும் அந்த உரத்தை ஏற்றியிறக்கப் பயன்படுத்தப்பட்;ட  லொறியும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது விடயமாக குறித்த அரிசி ஆலையின் உரிமையாளர் உட்பட தொழிலாளிகள் மூவரும், லொறிச் சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.