மட்டக்களப்பு மாநகர சவால் கிண்ணத்திற்கான மாபெரும் கால்பந்தாட்டப் போட்டி கோலாகலமாக ஆரம்பம் முதல் போட்டியில் யங்ஸ்டார் வெற்றி


(கௌரீசன்) லண்டன் நம்பிக்கை ஒளி அமைப்பின் அனுசரணையுடன் மட்டக்களப்பு மாநகர சபையுடன் இணைந்து இணைக்கும் இதயங்கள் அறக்கட்டளை நடத்தும் மட்டக்களப்பு மாநகர சவால் கிண்ணத்திற்கான மாபெரும் கால்பந்தாட்டச் சுற்றுப் போட்டி இன்று (02.05.2015) பிற்பகல் மட்டக்களப்பு பாட்டாளி புரம் மைதானத்தில் மாநகர ஆணையாளர் திரு.எம். உதயகுமார் அவர்களின் தலைமையில் கோலாகலமாக ஆரம்பமாகியது.


இன்றைய ஆரம்ப வைபவத்திற்கு பிரதம அதிதியாக மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் திரு.வெ.தவராஜா அவர்களும், சிறப்பு அதிதிகளாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் கிழக்கு மாகாணப் பணிப்பாளர் திரு.வை.தர்மரெட்ணம அவர்களும்,  மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் திரு.கே.பாஸ்கரன் அவர்களும், இணைக்கும் இதயங்கள் அறக்கட்டளையின் தலைவர் திரு.எஸ்.சிவகாந்தன் அவர்களும், மட்டக்களப்பு மாவட்ட கால்பந்தாட்டச் சங்கத்தின் தலைவர் திரு.எஸ்.உதயராஜ் அவர்களும் கலந்து கொண்டார்கள்.

முதலில் தேசியக் கொடி, மாநகரக் கொடி, கால்பந்தாட்டச் சங்கக் கொடி, அனுசரணை அமைப்புக்களின் கொடி, பங்குபற்றும் கழகங்களின் கொடிகள் ஏற்றப்பட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டதைத் தொடர்ந்து வலயக்கல்விப் பணிப்பாளரினால் உத்தியோக பூர்வமாக அறிவுப்புச் செய்யப்பட்டு மாநகர சவால் கிண்ணத்திற்கான கால்பந்தாட்டச் சுற்றுப் போட்டி ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இன்றைய முதலாவது போட்டியில் A குழுவைச் சேர்ந்த நாவலடி கோல்ட்பிஸ் அணியும் சீலாமுனை யங்ஸ்டார் அணியும் ஒன்றையொன்று எதிர்த்தாடின முதல்பாதி ஆட்டம் நிறைவுபெறும் வரை இரு அணிகளும் எவ்வித பேறுகளையும் பெறாத நிலையில் போட்டி சமநிலையில் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றது.

இரண்டாவது பாதியில் யங்ஸ்டார் அணியின் முன்கள வீரர் ஞா.கமலன் முதலாவது கோலை அடித்து பாட்டாளி புரம் மைதானத்தில் முதலாவதாக நடைபெற்ற கால்பந்தாட்டத்தில் முதலாவது கோலைப் போட்ட வீரர் எனும் வரலாற்றுப் பதிவைப் பெற்றார்.

தொடர்ந்து யங்ஸ்டார் வீரர் கீ.டிலக்ஸன் மேலும் ஒரு கோலைப் போட்டு யங்ஸ்டாரின் வெற்றி வாய்ப்பை அதிகப்படுத்த, மீண்டும் யங்ஸ்டார் வீரர் நா.மயூரன் மேலும் ஒரு கோலைப் போட யங்ஸ்டாரின் பேறுகள் மூன்றாக உயர்ந்தன இவ்வேளை கோல்ட்பிஸ் வீரர் எஸ்.சாணு அவர்களும் ஒரு கோலைப் போட 3:1 எனும் பேறுடன் போட்டி நடைபெற்று போட்டி முடிவடையும் வரை இப்பேறு நிலையே காணப்பட்டது.