வவுணதீவுப் பிரதேசத்தில் மழையினால் செங்கல் உற்பத்திகள் பாதிப்பு


(சிவம்)

வவுணதீவுப் பிரதேசத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (17) மாலை முதல் பெய்த கடும் மழை காரணமாக செங்கல் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக கல் உற்பத்தியாளாகள் கவலை தெரிவித்தனர்.

பச்சையாகவுள்ள களியில் கற்களை வெட்டி காய வைத்த பின்பு சுடுவதாகவும் வெட்டிய சூரிய ஒளியில் காய வைக்கும்போது  வரும் மழையினால் கற்கள் கரைகின்றன இதனால் உற்பத்தியில் 50 வீதம் பாதிப்பு ஏற்படுவதாகத் தெரிவித்தனர்.

மழை பெய்யும் போது பொலித்தீனைப் பாவித்து பச்சையான கற்களை தற்காலிகமாக மூடுவதாகவும் பாரிய மழை வரும் போது இதனையும் தாண்டி கற்கள் கரைவதாகக் கூறினர்.

மழை காலங்களில் பச்சையான கற்களைப் பாதுகாப்பதற்கு நிலையான கூடாரங்கள் அமைத்துத் தருமாறு அரசிற்கு வேண்டுகோள் விடுக்கின்றனர்.
வவுணதீவு பிரதேச செயலாளர்  பிரதேசத்தில் 75 கல் வாடிகள் உள்ளன எனவும் 20 வருடங்களாக இத் தொழிலை செய்து வருவதாகவும் உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.

குறித்த பிரதேசத்தில் செங்கல் உற்பத்திக்கு தேவையான மூலப் பொருளான களியை சிறந்ததாகக் காணப்படுவதனால் மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகமதன வாடிகள் இங்குள்ளன.

இவ்வாடிகளில் சுமார் 1000 பேர் வரையில் தங்களது ஜீவனோபாயத்திற்காக வேலை செய்வதாகவும் ஒரு கல் ரூபாய் 6 இற்கு மொத்தமாக விற்பனை செய்வதாகவும் கூறினர்.

வயல் வெளிகளிலிருந்து பெறப்படும் வைக்கோல் மற்றும் அருகிலி உள்ள அரிசி ஆலையிலிருந்து பெறப்படும் உமி என்பவற்றை எரிபொருளாகப் பாவித்து கற்களைச் சுடுகின்றமை குறிப்பிடத்தக்கது.