பாதிக்கப்பட்ட மக்களுடக்கு வீடமைத்துக் கொடுப்பதில் சுவீடன் மக்கள் மனமுவந்து உதவுகின்றார்கள் - இலங்கைக்கான பணிப்பாளர் சுபாஷி

 (- ஏ.எச்.ஏ. ஹுஸைன், எஸ். சதீஸ்-)
பாதிக்கப்பட்ட மக்களுக்கு வசிப்பதற்கு ஒரு வீட்டை அமைத்துக் கொடுப்பதில் சுவீடன் மக்கள் தாராளத் தன்மையுடன் உதவுகின்றார்கள் என சுவீடன் கூட்டுறவு நிலையத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் சுபாஷி திஸாநாயக்க தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டம் கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பேரில்லாவெளி கிராமத்தில் போரினால் பாதிக்கப்பட்டு வறுமைக் கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களுக்கு வீடமைப்புத் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.

சுவீடன் கூட்டுறவு நிலையத்தின் கிழக்கு மாகாண இணைப்பாளர் ரீ. மயூரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய சுபாஷி திஸாநாயக்க கூறியதாவது,
சுவீடன் கூட்டுறவு நிலையத்தின் ஐந்தாவது வீடமைப்புத் திட்டமாக இந்தக் கிராமம் தெரிவு செய்யப்பட்டுள்ளதையிட்டு சுவீடன் கூட்டுறவு நிலையமும் கிராம மக்களுமாக இருசாராருக்கும் மகிழ்ச்சிதான்.
சுவீடன் மக்கள் வழங்கும் லொத்தர் சீட்டிழுப்பு  நிதியுதவியைக் கொண்டு இந்த விடமைப்புத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
இந்தப் பகுதியில் வீடற்ற நிலையிலுள்ள ஏராளமான மக்களுக்கு வீடுகள் தேவையாக உள்ளது.


ஆயினும் எம்மிடம் தற்போதைக்கு மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே நிதி வபசதி உள்ளதால் எல்லாக் கிராமங்களையும் தெரிவு செய்யமுடியாத நிலையில் அதிர்ஷ்ட வசமாக உங்கள் கிராமம் தெரிவு செய்யப்பபட்டுள்ளது.
இந்த வீடுகளை அமைத்துக் கொடுப்பதற்காக அரச அதிகாரிகளின் ஆதரவும் எமக்குக் கிடைத்திருக்கின்றது.
இதன் மூலம் ஒரு வீட்டடை அடைந்து கொள்ள வேண்டும் என்ற உங்கள் கனவு இன்று நனவாகியிருக்கின்றது.

இந்த வீடுகளை செம்மையாகக் கட்டி முடிப்பதற்கு பயனாளிகளான உங்களது ஆதரவும் எமக்கு முழுமையாகத் தேவைப்படுகின்றது.
நீங்கள் தனித்து இயங்காமல் கிராம மக்கள் எல்லோருமாக சேர்ந்து குறிப்பாக இந்த வீடுகள் கிடைத்த 28 குடும்பங்களும் அனைவரும் ஒன்றாக இயங்கினால் இந்த வீட்டுத் திட்டம் வெற்றியளிக்கும். ஒவ்வொரு வீடுகளும் தலா ஏழு இலட்சத்து 20 ஆயிரம் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்படவுள்ளன.' என்றார்.

இந்நிகழ்வில் கிரான் பிரதேச செயலாளர் கே. தனேஸ்வரன், சுவீடன் கூட்டுறவு நிலையத்தின் கிழக்கு மாகாண இணைப்பாளர் ரீ. மயூரன்,  மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர் ஆர். நெடுஞ்செழியன், சுவீடன் கூட்டுறவு நிலையத்தின் திட்ட இணைப்பாளர் கே. பிரசாத், திட்ட உதவியாளர் எம். ஜெயசீலன், தொழினுட்ப உதவியாளர் ஏ. தேவரவி, மட்டக்களப்பு கால்நடை வளர்ப்போர் கூட்டுறவுச் சங்கத்தின் பொது முகாமையாளர் எம். நவறஞ்சன் உட்பட இன்னும் பல அதிகாரிகளும் பயனாளிகளும் கிராம மக்களும் கலந்து கொண்டனர்.