(ஏ.எச்.ஏ. ஹுஸைன் )'இந்த நல்லாட்சியில் 13 வது திருத்தம் அமுல்படுத்தப் படவில்லையென்றால் இனி ஒரு போதும் நமக்கு அது கிடைக்கப்போவதில்லை. எனவே, நமது சிறுபான்மை அரசியல் தலமைகள் எல்லோரும் இணைந்து இதற்காக ஏகோபித்துக் குரல் கொடுக்க வேண்டும் என கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தெரிவித்தார்.
கிழக்கு மாகாண சபையின் வரலாற்றில் மாகாண சபை அமைச்சுக்களையும் அமைச்சர்களையும் உள்ளடக்கிய ஒரு நாள் இடம்பெயர் சேவை வியாழக்கிழமை (14.05.2015) மட்டக்களப்பு மாநகர சபை மண்டபத்தில் இடம்பெற்றது.
இதனை ஆரம்பித்து வைத்து கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் உரையாற்றினார்.
அதிகாரிகள் பொதுமக்கள் மத்தியில் தொடர்ந்து உரையாற்றிய முதலமைச்சர் கூறியதாவது,
பிரச்சினைகளும் தேவைகளும மக்களிடம் அதிகமாக இருந்த போதும் அரசியல் அதிகாரம் கொண்ட தலைமைகள் எந்தளவுக்கு மக்களின் தேவைகளை ஈடு செய்கின்யோம் என்ற கேள்வி எங்களில் எல்லோருக்கும் உண்டு.
மக்களுடைய பிரச்சினைகளை அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் தங்களுடைய சொந்தப் பிரச்சினைகள் என்றுணர்ந்து மனங்கொண்டு செயற்படத் தொடங்குகின்ற பொழுது பொதுமக்களுக்கான சேவைகள் 100 வீதம் திருப்தியளித்ததாகக் கொள்ளப்படும்.
மாகாண சபை நிருவாகத்திலே இரண்டு பிரச்சினைகள். ஒன்று எங்களது ஒட்டு மொத்த வரவு செலவுத் திட்டத்திலே சுமார் 87 சதவீதமான நிதிகள் நிருவாகச் செலவுகளுக்குப் போய் விடுகின்றது.
மிகுதி 13 சத வீத நிதியைக் கொண்டுதான் மாகாண அபிவிருத்தியைச் செய்து பொது மக்களுக்கான சேவைகளையும் ஆற்ற வேண்டியுள்ளது.
இது ஒரு பாரிய சவால். வெறுமனே சம்பளம் எடுத்துக் கொண்டு காலங் கடத்துகின்ற தனி நபர்களாக மாகாண சபை அதிகாரிகளும் மாகாண சபையை ஆளுகின்ற அரசியல் வாதிகளும் இருந்துவிட முடியாது.
மக்களின் பணத்தில் 87 சத வீதத்தைப் பெற்று அதில் வாழுகின்ற அதிகாரிகளும் அரசியல் வாதிகளும் மாகாண சபைகளி;ன் அதிகாரத்தையும் வளங்களையும் மக்களின் காலடிக்குக் கொண்டு சென்று சேவைகளை வழங்க வேண்டும் என்பதற்காகவே இந்த இடம்பெயர் சேவை ஏற்பாடு செய்யப்பட்டது.
இது ஒரு பரீட்சார்த்த முயற்சிதான். இந்த இடம்பெயர்சேவை வெற்றியளித்தால் நாம் இதனை கிழக்கின் ஏனைய அம்பாறை மாவட்டத்திற்கும் அல்லது கிழக்கின் ஒவ்வொரு தேர்தல் தொகுதிக்கும் பரவலாக்குவோம்.
மாகாண சபை என்று நாங்கள் பெரிதாக நம்பிக் கொண்டிருந்தாலும் எங்களுக்கு வழங்கப்பட்டிருக்கின்ற அதிகார மட்டுப்படுத்தல் பற்றி எங்களிடம் கேள்வியுள்ளது.
அரசியல் யாப்பின் 13 வது திருத்தம் எப்பொழுது முழுமையாக அமுல்படுத்தப் படுகின்றதோ அப்பொழுதுதான்; இந்த மாகாண சபை முழுமையான அதிகாரமுள்ள மாகா சபையாக மாற்றமடையும்.
ஒட்டு மொத்தமாக பொலிஸ் அதிகாரம் காணி அதிகாரம் உட்பட 13 வது திருத்தச் சட்ட மூலத்தை அமுல்படுத்துவதற்குத் தோதான ஒவ்வொரு நகர்வுகளையும் நாங்கள் மேற்கொண்டுள்ளோம்.
இந்த அதிகாரங்களை நாங்கள் அடையப் பெற்றால் இந்த மாகாணத்தில் காணப்படுகின்ற பிரச்சினைகளை நாங்களே தீர்த்துக் கொள்ள முடியும்.
இந்த நல்லாட்சிக் காலத்திலே சகல அதிகாரங்களும் பெற்ற மாகாண சபையாக கிழக்கு மாகாண சபை மிளிரவேண்டும் என்று நாம் ஆசிக்கின்றோம்.
இலங்கையின் அரசியல் வரலாற்றிலே மத்திய அரசில் எதிர்க்கட்சியும் ஆளுங்கட்சியும் சேர்ந்து அரசமைத்து நல்லாட்சி நடத்திக் கொண்டிருக்கின்ற அதிர்ஷ்டம் இப்பொழுதுதான் கிடைத்திருக்கின்றது.
எனவே, இந்த அருமையான காலகலட்டம் மாகாண சபைகளுக்கும் அதிகாரத்தைத் தருவதாகக் கைகூடி வரவேண்டும்.
மாகாண சபைகளுக்கு அதிகாரங்களைப் பெற்றுத் தரவேண்டிய பொறுப்பு நல்லாட்சியின் நாயகனான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்ஹ அவர்களுக்கும் உண்டு.
ஏனென்றால், அவர்களது நல்லாட்சிக்கு ஒட்டு மொத்தமாக ஓரணியில் நின்று வழிகோலிய இந்த வடக்கு கிழக்கு மலையக சிறுபான்மைச் சமூகத்திற்கான கைங்கரியமாக அவர்கள் இதனைச் செய்தாக வேண்டும்' என்றார்.
இந்ந இடம்பெயர் சேவையில் கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட், கிழக்கு மாகாண சுகாதார சுதேச வைத்தியதுறை அமைச்சர் எம்.ஐ.எம். மன்சூர், வீதி அபிவிருத்தி காணி அமைச்சர் ஆரியவதி கலபதி, கல்வி விளையாட்டுத்துறை அமைச்சர் எஸ். தண்டாயுதபாணி, விவசாய கால்நடைகள் அபிவிருத்தி அமைச்சர் கே. துரைராஜசிங்கம், கிழக்கு மாகாண சபை தவிசாளர் சந்திரதாஸ கலபதி மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள், அமைச்சுக்களின் செயலாளர்கள், மாவட்ட அரசாங்க அதிபர் சரோஜினிதேவி சார்ள்ஸ், மற்றும் பொலிஸ்மா அதிபர்கள், திணைக்கள அதிகாரிகள், அரச அதிகாரிகள் ஆகியோரும் பிரசன்னமாகியிருந்தனர்.























