(காரைதீவு நிருபர் )சர்வதேச தொழிலாளர் தினமான மே முதலாம் திகதியன்று மனித அபிவிருத்தித்தாபன அனுசரணையுடன் தொழிலாளர் ஒத்துழைப்புச் சங்கத்தின் ஏற்பாட்டில் பல்வேறுபட்ட 14 தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து மாபெரும் மேதின பேரணியையும் பொதுக்கூட்டத்தையும் இன்று நடாத்தியது.
பல தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து பாரியளவில் ஜக்கிய மேதின நிகழ்வை கல்முனையில் நடாத்தியது இதுவே முதற்றடவையாகும்.
உரிமையில் மலர்ந்த அனைத்துலக தொழிலாளர் தினமான மே 1ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 9.00 மணிக்கு கல்முனை பஸ் டிப்போ வீதியில் ஆரம்பமான பல தொழிற்சங்கங்களின் பங்கேற்புடன் இடம்பெற்ற நீண்ட மேதின பேரணியானது நேராக கல்முனை கிறிஸ்ரா இல்லத்தை சென்றடைந்தது.
தொழிற்சங்கங்கள் அவர்களது கோரிக்கைகளடங்கிய சுலோக அட்டைகளைத்தாங்கியவண்ணம் பேரணியில் கலந்துகொண்டனர்.
இது தொழிலாளருக்குரிய தினம். வெறும் பகட்டுக்காகவும் விளம்பரத்திற்காகவும் அரசியல் சார்ந்த எந்தகோரிக்கையையும் நாம் முன்வைக்கவில்லை என்று ஏற்பாட்டாளர் ஸ்ரீகாந் தலைமையுரையிலே குறிப்பிட்டார்.
பொதுக்கூட்டத்தில் தொழிற்சங்கங்களின் சார்பாக தென்கிழக்குபல்கலைக்கழப சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி அனுசியா சேனாதிராஜா பி.பி.சிவப்பிரகாசம் வி.ரி.சகாதேவராஜா ஜெஸ்மிமூசா கே.ஜெயபால் எம்.றபீக் நஜீமுன்நிசா ஆகியோர் உரையாற்றினர்
மீனவ வலைப்பின்னல் அமைப்பு பெருந்தோட்டத் தொழிலாளர்கள் முன்பள்ளி ஆசிரியர்களின் வலைப்பின்னல் விவசாயசங்கங்கள் இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கம் கிழக்கு இந்து ஊடகவியலாளர் ஒன்றியம் அம்பாறை மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனம் மகளிர் அமைப்புகள் மொழிச்சங்கங்கள் இளைஞர் அமைப்புகள் போன்ற பல தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து ஜக்கிய மேதின பொதுக்கூட்டத்தை நடாத்தியமை குறிப்பிடத்தக்கது.
அவர்களது கோரிக்கைகள் அடங்கிய மகஜரொன்றும் கையளிக்கப்பட்டது.




















