மட்டக்களப்பு மாவட்டம் ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள தளவாய்க் கிராமத்தில் திங்கள் பிற்பகல் இரு வயோதிபப் பெண்கள் மீது கத்தியால் வெட்டி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
பற்றைக் காடுகளுக்குள் விறகு சேகரித்துக் கொண்டு நின்ற பெண்கள் மீதே கத்தியால் வெட்டி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
ஐயன்கேணி நாகதம்பிரான் கோயில் வீதியைச் சேர்ந்த சித்திரவேல் ராசம்மா (வயது 63) மற்றும் கொம்மாதுறை ஒருமுழச்சோலை வாசியும் தற்போது தளவாய்க் கிராமத்தில் வசிப்பவருமான குணம் சீதேவிப் பிள்ளை (வயது 60) ஆகியோரே கத்தி வெட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
களுத்தில் கத்தியால் வெட்டப்பட்ட இந்த இரு பெண்களும் உடனடியாக ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக அவசர சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இரும்புக் கோபுரம் ஒன்றிலிருந்து இரும்புக் கம்பிகளை திருடிக் கொண்டிருந்த சிலரைக் கண்ட இந்தப் பெண்கள் அதுபற்றிக் கூக்குரல் எழுப்பவே ஆத்திரமடைந்த அந்த இரும்புத் திருடர்கள் இந்தப் பெண்களைக் கத்தியால் தாக்கியதாக விசாரணைகளில் தெரியவந்திருக்கின்றது.
இச்சம்பவம் பற்றி பொலிஸார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
சம்பந்தப்பட்ட தாக்குதலாளிகளைக் கைது செய்வதற்கான துரித நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.













