தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் அரசியல்வாதிகளின் நிறுவனமாக அடையாளம் காட்டிக் கொள்ளக் கூடாது

(- ஏ.எச்.ஏ. ஹுஸைன், எஸ். சதீஸ்)
தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் அரசியல்வாதிகளின் நிறுவனமாக அடையாளம் காட்டிக் கொள்ளுமளவுக்கு அதன் நடவடிக்கைகள் அமைந்து விடக் கூடாது என மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் பி. செல்வராசா தெரிவித்தார்.


மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 430 இளைஞர் கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கிவைக்கும் பிரதான நிகழ்வு மட்டக்களப்பு இந்துக் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் சனிக்கிழமை ஆரம்பித்து வைத்த பின்னர் யோகேஸ்வரன் எம்பி உரையாற்றினார்.

தொடர்ந்து அங்கு உரையாற்றிய யோகேஸ்வரன் எம்பி
இளைஞர் சேவை மன்றம் எப்பொழுதும் இளைஞர்களின் முன்னேற்றம் நோக்கிய பாதையில் செல்லவேண்டும் கடந்த அரசாங்க காலத்தில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் அப்போதைய ஆட்சியாளர்களின் அரசியல் நடவடிக்கைகளுக்காக முழுமையாகப் பயன்படுத்தப்பட்டது.
இளைஞர்களின் அபிவிருத்தி கருதி ஒதுக்கப்பட்ட நிதிகள்  இளைஞர்களின் நடவடிக்கைளுக்கு பயன்படுத்தப்படாமல் அரசியல் நடவடிக்கைகளுக்காகவே பயன்படுத்தப்பட்டது.

இப்பொழுது அந்த நிலைமை மாற்றப்பட்டுள்ளது. அதனால் இனிவரும் காலங்களில் இளைஞர்களின் முன்னேற்றத்திற்கு தேவையான சகல நடவடிக்கைகளையும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் மேற்கொள்ளும் என நம்புகின்றோம்.

கடந்த காலத்தில் செயலிழந்த ஒரு அமைப்பாக இருந்து வந்த தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் செயற்பாடுகள் பற்றி நாடாளுமன்றத்திலும் பிரஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் நிகழ்வுகளுக்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்காத நிலையே கடந்த கால ஆட்சியில் இருந்துவந்தது இன்று அந்த நிலைமை மாறியுள்ளது என்றார்.
இளைஞர் கழகங்களை வலுவூட்டும் இந்த நிகழ்ச்சித் திட்டத்தின் நிகழ்வுகளில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவி பணிப்பாளர் எம்.என். நைறூஸ் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான எம்.எஸ். சுபைர், ஷிப்லி பாறூக், மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் சேவைகள் அதிகாரி நிசாந்தி அருள்மொழி, இளைஞர் சேவை அதிகாரிகள், மாவட்ட இளைஞர் சம்மேளன உறுப்பினர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.