மட்டக்களப்பு மாவட்டத்தின் பாதுகாப்பு தொடர்பிலான விசேட கலந்துரையாடல் ஒன்று நேற்று (28) மாலை மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் நடைபெற்றது.மட்டக்களப்பு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில், கிழக்குப் பிராந்தியத்துக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர் சன்ட்ரா நிமால் வாகிஸ்ட, மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் உபாலி ஜெயசிங்க, மேலதிக மாவட்டச் செயலாளர் எஸ்.கிரிதரன், மேலதிக மாவட்டச் செயலாளர் - காணி திருமதி ஜெயானந்தி திருச்செல்வம் ஆகியோரும் பங்கு கொண்டனர்.
இக் கலந்துரையாடலில், மட்டக்களப்பு மாவட்டத்தில் இந்த வாரத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம், அதனால் ஏற்பட்டுள்ள அச்ச நிலைமை, சட்ட விரோத நடவடிக்கைகள், அனுமதியின்றி மணல் அகழ்தல், சட்டவிரோதமான முறையில் மரம் வெட்டுதல், வீதி விபத்துக்கள், அவற்றால் ஏற்படும் பிரச்சினைகள், பாதுகாப்பான நடைமுறைகள் குறித்தும் ஆராயப்பட்டது.
அதே நேரம், பிரதான வீதிகளில் கட்டாக்காலி மாடுகள், ஆடுகளின் தொல்லைகள், மாவட்டத்தில் அதிகரித்துவரும் தற்கொலைகள், பாலியல் பிரச்சினைகள், யானைப்பிரச்சினைகள், மட்டக்களப்பு நகரப்பகுதிகளிலுள்ள பிரச்சினைகள் என பல்வேறு பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டன.
இதன் போது அனைவரது கருத்துக்களையும் அடிப்படையாக கொண்டு பிரச்சினைகளும் அவற்றுக்கான தீர்வுகளும் இனங்காணப்பட்டன. அவற்றுள் வீதி விபத்துக்கள் பெரும்பாலானவை கவனயீனத்தினாலேயே ஏற்படுகின்றன எனவும் , தற்கொலைகள் காதல் பிரச்சினைகள், கணவன் மனைவிகளுக்கிடையில் உள்ள குடும்பப்பிரச்சினைகள், குடும்பத்தில் கணவன் அல்லது மனைவி வெளிநாடுகளுக்குச் செல்லுதல் போன்ற பிரச்சினைகளால் நடைபெறுகின்றன எனவும் தெரிவிக்கப்பட்டது.
இவற்றையெல்லாம் குறைப்பதற்கு நாம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவற்றுக்காக மனோநலஞ் சார்ந்த ஆற்றுப்படுத்தல்கள் தேவைப்படுகின்றன. அத்துடன் மதத்தலங்கள் இந்த ஆற்றுப்படுத்தல் விடயத்தில் ஆன்மீக ரீதியான கட்டுப்பாடுகளை விளக்கங்களை மேற்கொள்ள வேண்டும் என மாவட்டச் செயலாளர் தெரிவித்திருந்தார் .













