கல்குடா கல்வி வலய பிரதிக் கல்விப்பணிப்பாளர் தி.ரவி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வின்போது சுவிஸ் உதயம் அமைப்பின் பொருளாரும் சமூக சேவையாளருமான கே.துரைநாயகம் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார். அதிபர் க.பகீரதன், ஆசிரிய நிலைய முகாமையாளர் வ.பஞ்சலிங்கம், ஓய்வு நிலை அதிபரும் கிழக்கு உதயம் அமைப்பின் உப தலைவருமான பாவாணர் அக்கரைப்பாக்கியன், சேவைக்கால ஆசிரிய ஆலோசகர் த.தர்மபாலன், கண்ணகி கலை இலக்கியக் கூடல் அமைப்பின் தலைவர் செங்கதிரோன் த.கோபாலகிருஸ்ணன் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் அதிதிகளாகக் கலந்து கொண்டனர்.
இதன்போது சித்தாண்டி மத்திய மகா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் சித்தாண்டி, மாவடிவேம்பு, ஈரளக்குளம், திகிலிவெட்டை, சந்திவெளி போன்ற கிராமங்களைச் சேர்ந்த வறுமைக் கோட்டின்கீழ் உள்ள சுமார் 70 மாணவர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். இம்மாணவர்களுக்கு கல்குடா கல்வி வலயஇன்றைய நிகழ்வின்போது கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்ட்டன.
இதன்போது கே.துரைநாயகம் உரையாற்றுகையில், இப்பாடசாலையில் கல்வி பயிலும் ஐந்து கிராமங்களைச் சேர்ந்த தெரிவு செய்யப்பட்ட வறுமை நிலையில் உள்ள 70 மாணவர்களுக்காக எமது அமைப்பின் மூலம் மாதாந்தம் 45 ஆயிரம் ரூபா நிதியுதவி கற்றல் மேம்பாட்டுக்கென வழங்கப்படவுள்ளதோடு, ஐந்தாண்டுத்;திட்டத்தில் இப்பாடசாலையில் கல்வி பயிலும் தரம் 9 முதல் 13 வரை உள்ள தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள் நன்மை பெறவுள்ளனர்.
எமது சமூகம் கடந்த கால அசாதாரண சூழல் காரணமாக பல்வேறான இழப்புக்களைச் சந்தித்துள்ளது. நாம் இழந்தவற்றை மீளவும் பெற்றுக் கொள்ளத் தக்கதாக எம்மிடம் இருப்பது கல்வி மாத்திரமே. இவ்வாறாக எம்மிடம் உள்ள ஆயுதமான கல்வியினை சிறப்பாகக் கற்று வாழ்வில் முன்னேற்றம் காண வேண்டிய தேவை எமக்கு கட்டாயமானதாகும்.
மாணவர்கள் கல்வியை சிறப்பாக கற்றுக் கொள்வதுடன் ஒழுக்கமுள்ளவர்களாகவும் திகழ வேண்டும். ஒழுக்கமில்லாதவர்கள் மத்தியில் கல்வி நிலைத்து நிற்காது. கல்வி மூலம் ஒருவர் உயர் நிலை அடைந்த போதிலும் அவரிடத்தில் பணிவு இருக்க வேண்டும். இவ்வாக பணிவு ஒருவரிடத்தில் காணப்படுமானால் அவர் வாழ்வில் உயர்ந்து கொண்டே செல்வார்.
கடல் கடந்து உறவுகளை பிரிந்து உணர்வுகளுக்கு கடிவாளமிட்டு துன்பங்கள் பலவற்றைச் சந்தித்து நாம் உழைக்கும் ஒரு தொகைப் பணத்தினை எமது அமைபிற்கு வழங்கி அதன்மூலம் நமது நாட்டின் கிழக்கு மாகாணத்தில் வாழும் வறுமை நிலை மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்காகவும் வாழ்வாதார உதவிக்கெனவும் உதவி வருகின்றோம். எமது அமைப்பின் தலைவர் தேவசகாயம் சுதர்சன், செயலாளர் வேலப்பன் ஜெயக்குமார் மற்றும் எமது அமைப்பின் உறுப்பினர்கள் அனைவரும் எமது கிழக்கு மாகாண மக்களின் வாழ்வாதாரத்தைக் கல்வி மூலம் கட்டியெழுப்பும் வகையில் பாரியளவில் செயற்பட்டு வருகின்றோம். இவ்வாறாக தன்னலம் பாராமல் செயற்படும் எமக்கு கைமாறாக கிடைப்பது நமது சமூக மாணவர்கள் கல்வி மூலம் உயர் நிலை பெற்று உங்களைப் போன்றவர்களுக்கு நீங்களும் உதவி செய்ய வேண்டும் என்பதே ஆகும் என்றார்.












