இலங்கை
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நூறுநாள் அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் புனர்நிர்மாணம்
செய்யப்பட்ட வீதிகளைப் பொதுமக்களின் பாவனைக்குக் கையளிக்கும் நிகழ்வும்,
கிராமத்துக்கு ஒரு வேலைத்திட்டம் நிகழ்ச்சி நிரலின்கீழ் குடும்பப் பொருளாதார
அபிவிருத்தியை ஊக்குவிக்கும்வகையில் வாழ்வாதார உதவிப் பொருட்களைப்
பகிர்ந்தளிக்கும் வைபவமும் இன்று (25) காலை ஆலையடிவேம்பில் இடம்பெற்றன.
ஆலையடிவேம்பு
பிரதேச செயலாளர் வி.ஜெகதீசன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுகளுக்கு அவரது அழைப்பின்பேரில்
பாராளுமன்ற உறுப்பினரும், விவசாய நீர்ப்பாசனப் பிரதியமைச்சருமான திருமதி. அனோமா
கமகே பிரதம அதிதியாகக் கலந்துசிறப்பித்ததுடன், அவரது அம்பாறை மாவட்ட இணைப்பாளரும்
அக்கரைப்பற்று உரமானிய நெற்சந்தைப்படுத்தல் சபையின் மேலதிக இணைப்பு
உத்தியோகத்தருமான எம்.எம்.எம்.நிஸாம் மற்றும் கிழக்கு மாகாண தேசிய இளைஞர் சங்கத்
தலைவரும் பொறியியலாளருமான எஸ்.பர்ஷாத்கான் ஆகியோர் சிறப்பு அதிதிகளாகவும்
வருகைதந்திருந்தனர்.
முதலில் கொங்கிறீட்
இடப்பட்டு செப்பனிடப்பட்ட கண்ணகிகிராமம் - 2 கிராமசேவகர் பிரிவிலுள்ள பாமங்கை வீதி
மற்றும் வாச்சிக்குடா கிராமசேவகர் பிரிவிலுள்ள குழந்தை வீதி ஆகியவற்றைப் பிரதியமைச்சர்
நாடாவை வெட்டித் திறந்துவைத்ததுடன் பெயர்ப்பலகைகளையும் திரைநீக்கம்
செய்துவைத்தார். தொடர்ந்து அப்பிரதேசப் பொதுமக்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வரவேற்பு
வைபவத்தில் உரையாற்றிய அவர், அம்பாறை மாவட்டத்திலேயே முதன்முதலாக ஜனாதிபதி
மைத்திரிபால சிறிசேனவின் நூறுநாள் அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் புனர்நிர்மாணம்
செய்யப்பட்ட வீதிகளாக குறித்த இரண்டு வீதிகளையும் தான் திறந்துவைப்பதில் பெருமகிழ்ச்சியடைவதாகக்
குறிப்பிட்டதுடன், பொதுமக்களின் பங்களிப்புடன் செப்பனிடும் வேலைகளை விரைவாகச்
செய்துமுடித்த பிரதேச செயலாளரையும் உத்தியோகத்தர்களையும் பாராட்டிப் பேசினார்.
தொடர்ந்து பொதுமக்களால் முன்வைக்கப்பட்ட அவர்களது நீண்டகாலக் கோரிக்கைகளைச்
செவிமடுத்த அவர் அவற்றைத் தனது அபிவிருத்தி வேலைத்திட்டங்களில் உள்வாங்கி விரைவாகப்
பூர்த்தி செய்துதருவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தார்.
அதனைத்
தொடர்ந்து ஆலையடிவேம்பு பிரதேச செயலக வளாகத்திலுள்ள ஸ்ரீ மகா கணபதி ஆலயத்துக்கு
விஜயம் செய்த பிரதியமைச்சர் திருமதி. அனோமா கமகே அங்கு இடம்பெற்ற விசேட பூஜை
வழிபாடுகளில் கலந்துகொண்டார்.
அடுத்து ஆலையடிவேம்பு
பிரதேச செயலகக் கேட்போர் கூடத்தில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த கிராமத்துக்கு ஒரு
வேலைத்திட்டம் நிகழ்ச்சி நிரலின்கீழ் சிறுகைத்தொழில்கள் மற்றும் குடிசைக்
கைத்தொழில்களை ஜீவனோபாயமாகக் கொண்டுள்ள வருமானம் குறைந்த குடும்பங்களுக்கு வாழ்வாதார
உதவிப் பொருட்கள் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்ட அவர், தெரிவுசெய்யப்பட்ட
குடும்பங்களுக்கு தையல் இயந்திரங்கள், நீரிறைக்கும் இயந்திரங்கள், மா அரைக்கும் இயந்திரங்கள், நீர்க்குழாய்கள், உணவு தயாரிக்கும் பாத்திரங்கள், மீன்பிடி உபகரணங்கள், வாளிகள், சைக்கிள்கள்
உள்ளிட்ட பல பொருட்களை ஏனைய அதிதிகளோடு இணைந்து வழங்கிவைத்தார்.
அங்கு
உரையாற்றிய அவர், அம்பாறை மாவட்டத்தில் யுத்தத்தால் பாதிக்கப்பட்டு குடும்பத் தலைவனை
இழந்த பெண்கள் தலைமைதாங்கும் குடும்பங்களைப் பொருளாதார ரீதியாக அபிவிருத்தி
செய்வதில் தான் மிகுந்த அக்கறை கொண்டுள்ளதாகவும், அவ்வாறான குடும்பங்களை
இலக்காகக்கொண்டு பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களைத் தான் செயற்படுத்திவருவதாகவும்
குறிப்பிட்டதுடன், தனது ஒத்துழைப்புத் தேவைப்படும் எந்தத் தருணத்திலும் தனது
இணைப்பாளரூடாக பொதுமக்கள் தன்னைத் தொடர்புகொண்டு உதவிகளைப் பெற்றுக்கொள்ள முடியும்
எனவும் குறிப்பிட்டார். மேலும் பல்வேறு இன்னல்களால் பாதிக்கப்பட்ட ஆலையடிவேம்பு
பிரதேசப் பொதுமக்களுக்காக பிரதேச செயலகம் ஆற்றிவருகின்ற இவ்வாறான அளப்பரிய
சேவைகளுக்காகத் தனது பாராட்டுக்களைப் பிரதேச செயலாளருக்கும் உத்தியோகத்தர்களுக்கும்
தெரிவித்ததுடன், அம்பாறை மாவட்டத்திலுள்ள ஆலையடிவேம்பு உள்ளிட்ட தமிழ்ப்
பிரதேசங்களில் தனதும், தனது கணவரான கிழக்கு மாகாணசபை உறுப்பினர் தயா கமகேயினதும்
பெயர்களைக் கூறிக்கொண்டு படித்த, வேலையற்ற இளைஞர், யுவதிகளுக்கு அரச நிறுவனங்களில்
தொழில் பெற்றுத் தருவதாகக் கூறிக்கொண்டு பொதுமக்களிடம் பெருமளவில் பணம் பறிக்கும்
வேலைகளில் சில விஷமிகள் ஈடுபட்டுவருவதாகக் குறிப்பிட்ட அவர், அவ்வாறானவர்களை நம்பி
ஏமாறாமல் பொலிசாருக்குத் தகவலளித்து அவர்களைக் கைது செய்வதற்கு ஒத்துழைப்பு
வழங்குமாறு பொதுமக்களைக் கேட்டுக்கொண்டார்.












