(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)மனிதர்களுக்கு மட்டுமல்ல மற்ற எல்லாப் படைப்பினங்கள் மீதும் நலனை நாடுதல் என்பது பிரதிபலனாக அதிகதிகம் நன்மைகளை ஈட்டித்தரும் இவ்வாறு மட்டக்களப்பு நீதவான் என்.எம். அப்துல்லாஹ் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் நகர பிரதேச செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட புனித றமழான் நோன்பு துறக்கும் நிகழ்வு வியாழன் மாலை ஏறாவூர் வாவிக்கரையோர பொழுது போக்குப் பூங்காவில் இடம்பெற்றபோது பிரதம சொற்பொழிவாளராகக் கலந்து கொண்டு அவர் உரையாற்றினார்.
பிரதேச செயலாளர் எஸ்.எல். முஹம்மத் ஹனீபா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அங்கு தொடர்ந்து சன்மார்க்க உரை நிகழ்த்திய நீதிபதி அப்துல்லாஹ் கூறியதாவது,
ஆதரவற்ற ஒருவருக்கு எவரொருவர் நலனை நாடி நன்மை செய்கின்றாரோ அவருடைய முன்பாவங்கள் மன்னிக்கப்படும் என்பதை இறைதூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியிருக்கின்றார்கள்.
ஆகவே, எந்தவொரு விடயத்திலும் நலனை நாடிச் செயற்படுதல் என்பதில் அதிக நன்மை இருக்கின்றது. நோன்பு துறக்கும் நிகழ்வுகள் கூட பெருமைக்காக இல்லாமல் நலனைச் நாடிச் செய்தால் அதில் அதிகமதிகம் நன்மை இருக்கின்றது.
நலனை நாடியும், இறையச்சத்துடனும், இறை விசுவாசத்துடனும் ஒருவர் புனித றமழான் மாதத்திலே நோன்பை அனுஷ்டிப்பாராகில், அவருடைய முன் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும் என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் நவின்றுள்ளார்கள்.
மனிதர்களை இறையச்சமுள்ளவர்களாக ஆக்குவதற்காகவே நோன்பு விதியாக்கப்பட்டது என்று புனித அல்குர்ஆன் குறிப்பிடுகின்றது
இறையச்சம் என்றால் என்னவென்று அறிவதற்கு முள்ளிலே சீலை சிக்கி விட்டது என்றால் சீலை கிழியாமல் அதனை முள்ளிலிருந்து அகற்றி எடுப்பது போன்ற எளிமையான உதாரணத்தை நாம் பார்க்கலாம்.
புனித றமழான் என்பது ஒரு பயிற்சிக் களம். இந்த மாதத்திலே நாம் அடைந்து கொள்கின்ற பயிற்சிகளை நமது வாழ்நாள் பூராகக் கடைப்பிடித்தொழுக வேண்டும்;' என்றார்.
இந்நிகழ்வில் ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் எஸ்.எல். முஹம்மத் ஹனீபா, உதவிப் பிரதேச செயலாளர் எம்.ஏ.சி. றமீஷா, ஏறாவூர் நகரசபைச் செயலாளர் எச்.எம்.எம். ஹமீம், ஏறாவூர் ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் எம்.எச்.எம். தாரிக், ஏறாவூர் விவசாயப் போதனாசிரியை எம்.எச். முர்ஷிதா ஷிரீன் உட்பட அதிகாரிகள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


















