சிறுவர் விபத்துக்களைக் குறைக்கும் சமூக மட்டத்திலான செயற்றிட்டம்.

(ஹுஸைன்)
சிறுவர்களுக்கேற்படும் விபத்துக்களைக் குறைப்பதற்கான சமூக மட்ட செயற்றிட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக யுனிசெப் நிறுவனத்தின் சிறுவர் காயங்களுக்கான திட்டத்தின் மட்டக்களப்பு அம்பாறை முகாமையாளர் எஸ். பன்னீர்ச்செல்வம் தெரிவித்தார்.



இது தொடர்பாக மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள தெரிவு செய்யப்பட்ட எட்டு முன்னணி நகரப் பாடசாலைகளைச் சேர்ந்த சுமார் ஐந்நூறு மாணவர்களுக்கு விளக்கமளிக்கும் நிகழ்வுகள் வியாழக்கிழமை மட்டக்களப்பு புனித சிசிலியா உயர்தரப் பாடசாலையில் இடம்பெற்றன.
பாதை ஒழுங்கு விதிகள் மற்றும் சிறுவர்களால் அனுசரிக்கப்பட வேண்டிய போதனைகளை வினைத்திறனுள்ள மட்டத்தில் விஸ்தரிப்பது குறித்து இந்த நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன.
வீதி விபத்துக்களைக் குறிக்கும் மாணவர்களால் தயாரிக்கப்பட்ட நாடகம், சித்திரம், செய்திக் குறிப்பெழுதல் போன்ற போட்டி நிகழ்வுகளும்  இடம்பெற்றன.
இப்போட்டிகள் அனைத்திலும் புனித சிசிலியா பெண்கள் உயர்தரப் பாடசாலை மாணவிகள் முதலிடத்தைத் தக்கவைத்துக் கொண்டனர்.
போட்டிகளில் வெற்றியீட்டிய மற்றும் பங்குபற்றிய மாணவர்களுக்கு பரிசுகளும் வழங்க்பட்டன.
இலங்கையில் பொதுவாக பாதை நடைமுறைகளை வளர்ந்தோர் சிறியோர் எவருமே பின்பற்றாததால் நாளாந்தம் அதிக விபத்துக்கள் சம்பவிப்பதாக இங்கு இடம்பெற்ற நிகழ்வுகளில் சுட்டிக்காட்டப்பட்டது.
வீதியருகில் நடக்கும் போது எதிரே வரும் வாகனங்களும் இன்னபிற போக்கு வரத்துச் சாதனங்களும் கண்ணுக்குத் தெரியும் படியாக நடந்து செல்வதே அறிவார்ந்ததும் சட்டரீதியான பயணமுமாகும். அதற்காக நடைப் பயணிகள் பாதையில் தமது வலப் பக்கத்தைப் பயன்படுத்த வேண்டும்.
ஆனால், இலங்கையில் இந்த பாதை ஒழுங்கு முறையை பெரும்பாலானோர் பின்பற்றுவதில்லை என்ற விழிப்பூட்டலும் இடம்பெற்றது.
எனவே, இது குறித்து முதலில் பாடசாலைச் சமூகத்திற்கு அறிவூட்ட வேண்டும் அதற்கமைவாக பாடசாலை மட்டத்திலிருந்து ஆசிரியர்களும் மாணவர்களும் பயிற்றுவிக்கப்படவேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
சிறுவர் விபத்துக்களைக் குறைக்கும் சமூக மட்டத்திலான இந்த செயற் திட்டத்தை யுனிசெப் நிறுவனமும் சர்வோதய இயக்கமும் அமுலாக்கம் செய்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கை அபிவிருத்திக்கான ஒன்றிணைவு திட்டத்தின் கீழ் இச் செயல் திட்டம் அமுலாக்கப்படவுள்ளது.
இந்நிககழ்வில் மட்டக்களப்பு கல்விப் பணிப்பாளர் கே. பாஸ்கரன், சர்வோதய இயக்கத்தின் கிழக்கு மாகாண இணைப்பாளர் ஈ.எல். அப்துல் கரீம், யுனிசெப் நிறுவன சிறுவர் பாதுகாப்பு அதிகாரி எஸ். ரவீந்திரன், மாவட்ட செயலக சிறுவர் மேம்பாட்டு அலுவலர் வி. குகதாஸன், சர்வோதய சிறுவர் பாதுகாப்பு கண்காணிப்பு வெளிக்கள இணைப்பு உத்தியோகத்தர் பத்மா சந்திரகுமார் உட்பட இன்னும் பல அதிகாரிகளும், ஆசிரியர்களும், மாணவர்களும் கலந்து கொண்டனர்.