தாந்தாமலை கிராமத்தில் மீனவர் சங்க கட்டடம் திறந்து வைப்பு

(படுவான் பாலகன்) தாந்தாமலை கிராமத்தில் உள்ள மீனவர் சங்கத்தின் செயற்பாட்டிற்காக புதிய கட்டடம் ஒன்று அமைக்கப்பட்டு இன்று(02) வியாழக்கிழமை வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.

வேள்ட்விஸன் நிறுவன பட்டிப்பளை பிராந்திய அபிவிருத்தி திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட இக்கட்டடத்தினை மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் திருமதி சத்தியானந்தி நமசிவாயம் திறந்து வைத்ததுடன், மீனவர்கள் மீன்பிடிக்கும் புளுக்குணாவை குளத்திற்கு சென்று அவர்கள் தொழிலில் ஈடுபட்டிருப்பதையும் பார்வையிட்டு ஆலோசனையும் வழங்கினார்.

இதன் போது மட்டக்களப்பு நன்னீர் மீன்பிடி விரிவாக்கல் உத்தியோகத்தர் நெல்சன், வேள்ட்விஸன் நிறுவன திட்ட இணைப்பாளர் சி.நிருமிதன், அபிவிருத்தி உத்தியோகத்தர் கரதூசனன், மீனவர்கள், பொதுமக்கள் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

இங்கு மீனவர்களுக்கு வேள்ட்விஸன் நிறுவனத்தினால் வலைகளும் வழங்கி வைக்கப்பட்டது.

மீனவர்களின் நன்னீர் மீன்பிடியை ஊக்குவிக்கும் பொருட்டு தொடர்ச்சியாக பல பயிற்சிகளையும், ஆலோசனைகளையும், உதவிகளையும் நன்னீர் மீன்பிடி விரிவாக்கல் பிரிவும், பிரதேச செயலகமும், வேள்ட்விஸன் நிறுவனமும் வழங்கிக் கொண்டிருப்பதாகவும் மீனவ சங்கத்தின் நிருவாகத்தினர் குறிப்பிட்டனர்.