இலங்கைத்தீவு
முழுவதிலும் பரந்துள்ள நிதிச்சேவைகள் மூலமான செயற்பாடுகளூடாகத் தனது பெறுமதிமிக்க, குறைந்த வருமானமுடைய வாடிக்கையாளர்களின் வாழ்க்கைத்தரத்தை அபிவிருத்தி செய்வதில்
முன்னின்று செயற்படும் முழு அரசுடைமையான பிரதேச அபிவிருத்தி வங்கியின் மூன்று
தசாப்தகால நிறைவைக் கொண்டாடும் விசேட வைபவம் இன்று (13) காலை பிரதேச அபிவிருத்தி
வங்கியின் அக்கரைப்பற்றுக் கிளையில் அதன் முகாமையாளர் வை.பி.அஷ்ரப் தலைமையில்
இடம்பெற்றது.
இலங்கை
முழுவதும் பரந்துள்ள பிரதேச அபிவிருத்தி வங்கியின் 265 கிளைகளிலும் இன்று
சமகாலத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இவ் உத்தியோகபூர்வ வைபங்களின் தொடர்ச்சியாக
அக்கரைப்பற்றுக் கிளையில் ஏற்பாடாகியிருந்த குறித்த நிகழ்வுக்கு பிரதம அதிதியாக
ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.ஜெகதீசனும், சிறப்பு அதிதியாக ஆலையடிவேம்பு பிரதேச
சபையின் செயலாளர் திருமதி.வி.கமலநாதனும் கலந்து சிறப்பித்தனர். மேலும் வங்கியின்
உத்தியோகத்தர்களும் பெருமளவான வாடிக்கையாளர்களும் கலந்துகொண்டதோடு நிகழ்வுகள்
யாவும் சமய அனுஸ்டானங்களோடு ஆரம்பித்துவைக்கப்பட்டன.
முகாமையாளரின்
தலைமையுரையில் பிரதேச அபிவிருத்தி வங்கியின் முப்பதாண்டுகால சேவைகளின் வரலாறு
குறித்து பங்குபற்றுனர்களுக்குத் தெளிவுபடுத்தப்பட்டதுடன், குறித்த கிளையின்
நீண்டநாள் வாடிக்கையாளரான ஓய்வுபெற்ற அதிபர் எஸ்.கோபாலபிள்ளை தனது உரையில், படிப்படியான
தனது குடும்பப் பொருளாதார வளர்ச்சியில் பிரதேச அபிவிருத்தி வங்கியின் சேவைகள்
எவ்வாறு தாக்கம் செலுத்தியிருந்தன என்பது குறித்துப் பேசியதுடன், மற்றுமொரு
வாடிக்கையாளரினால் வங்கி உத்தியோகத்தர்களின் சேவைகளைப் பாராட்டி வாழ்த்துப்பாவொன்றும்
கையளிக்கப்பட்டிருந்தது.
தொடர்ந்து
அதிதிகளின் உரையில் பேசிய ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர், கடந்த 25 வருடங்களாக பிரதேச
அபிவிருத்தி வங்கியின் கல்முனைக் கிளையில் சேவைகளைப் பெற்றுவருவதுடன் தனது குழந்தைகள்
உட்பட குடும்ப அங்கத்தவர்கள் அனைவரும் அதன் வாடிக்கையாளர்களாக இருப்பதில்
பெருமையடைவதாகக் குறிப்பிட்டார். அத்துடன் ஏனைய தனியார் வங்கிகளைப் போலல்லாது குறைந்த
வருமானமுடைய தனது வாடிக்கையாளர்களின் பொருளாதார முன்னேற்றத்தைக் கருத்தில்கொண்டு
செயற்படும் ஒரு மிகச்சிறந்த வங்கியாகப் பிரதேச அபிவிருத்தி வங்கியைக்
குறிப்பிட்டுப் பேசினார். அவரைத் தொடர்ந்து ஆலையடிவேம்பு பிரதேச சபையின் செயலாளர்
திருமதி.வி.கமலநாதனும் தனது வாழ்த்துரையை வழங்கியிருந்தார்.
அதனைத்தொடர்ந்து
குறித்த நிகழ்வின் சிறப்பம்சங்களாக முகாமையாளர் தலைமையில் அதிதிகளின்
பிரசன்னத்துடன் வங்கிக் கிளையின் நீண்டகால வாடிக்கையாளர்களிடமிருந்து
பணவைப்புக்களை ஏற்கும் வைபவமும், சுமார் ஐம்பதுக்கு மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்குக்
குழுக்கடன்களை வழங்கிவைக்கும் வைபவமும் இடம்பெற்றிருந்தன.



























