இலங்கைத் தீவிலே நாங்கள் தேசிய இனம். எங்களால் தொடர்ந்தும்
இரண்டாம் தரப் பிரஜைகளாக வாழ முடியாது என தமிழ்த் தேசியக்
கூட்டமைப்பு மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் சீனித்தம்பி யோகேஸ்வரன்
தெரிவித்துள்ளார்.
வடக்கு, கிழக்கு இணைந்ததாக இருக்கும் போதுதான் எமது
அடையாளங்களைக் காப்பற்ற முடியும் என்ற அறிவுபூர்வமான
தீர்மானத்தின் அடிப்படையிலேயே இணைந்த வடகிழக்கு மாகாணத்தை நாம்
கோரிநிற்கிறோம் என்றும் கூறினார்.
கல்குடா தொகுதிக்குட்பட்ட கதிரவெளியில் நடைபெற்ற
மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர்
இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
எமது பாரம்பரிய தாயகமான வடக்கு, கிழக்கிலே எமது
குடிசன பரம்பலை பாதிக்கும் வகையில் அரசின் சிங்களக்
குடியேற்றங்களினால் எமது மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
1940 தொடக்கம் 1980 ஆண்டு காலப்பகுதியில் அரசினால் நடத்தப்பட்ட
திட்டமிட்ட சிங்களக் குடி யேற்றம் காரணமாக கிழக்கு மாகாணத்தின்
குடிசனப் பரம்பலில் பாரிய மாற்றம் ஏற்பட்டது. இலங்கை
சுதந்திரமடைகின்ற போது கிழக்கு மாகாணத்தில் 9 சதவீதமாகவிருந்த
சிங்கள மக்களின் சனத்தொகை தற்போது சுமார் 30 சதவீதமாக
அதிகரித்துள்ளது. 1833 ஆண்டு காலப்பகுதியில் 19 ஆயிரத்து 52 சதுர
கிலோமீற்றராக இருந்த கிழக்கு மாகாணத்தின் பரப்பளவு தற்போது
அரைவாசியாக குறைந்து 9 ஆயிரத்து 803 சதுர கிலோ மீற்றராக
சுருக்கப்பட்டுள்ளது. வடமத்திய மாகாணம், சப்ரகமுவ மாகாணம் போன்றன
கிழக்கு மண்ணை கபளீகரம் செய்துள்ளன. இந்த நிலையில்தான் நாங் கள்
இணைந்த வடக்கு, கிழக்கு பற்றி சிந்திக்கிறோம்.
வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைந்து இருக்கும்போது
எம்முடைய மண்ணும் இன அடையாளங்களும் காப்பாற்றப்படும் என்ற
அறிவுபூர்வமான தீர்மானத்தின் அடிப்படையில் வடக்கு, கிழக்கு இணைந்த
மாகாணத்தை நாங்கள் வலியுறுத்துகிறோம். இந்த சூழ்நிலையில் நாங்கள்
வடக்கு, கிழக்கு என பிரிந்திருக்க முடியாது. அவ்வாறு
பிரிந்திருப்பது நம்மை நாமே அழித்துக் கொள்வதாக அமையும்.
மட்டக்களப்பு மக்கள் எப்போதும் தமிழ் தேசியத்தை
நேசிப்பவர்கள். கடந்த காலத்தில் எமது தேசியத்தை சிதைத்தவர்கள்
மீண்டும் களமிறங்கியுள்ளனர். அவர்களின் போலி பிரசாரங்களுக்கு
எமது மக்கள் ஏமாந்துவிடக் கூடாது. எமது மாவட்டத்தைப் பொறுத்தவரை தமிழ்
தேசிய கூட்டமைப்பைத் தவிர எந்தவொரு தமிழரும் பாராளுமன்றம் செல்ல
முடியாது இது கடந்த கால வரலாறு. சிங்கள தேசிய கட்சிகளில்
போட்டியிடும் தமிழர்கள் முஸ்லிம்களுக்கு தமிழ் மக்களது வாக்குகளை
சேகரித்துக்கொடுக்கும் முகவர்களாக செயற்படுகிறார்கள். இவ்வாறு
எமது வாக்குகள் சிதறும் போது 74 சதவீதம் வாழுகின்ற தமிழர்கள்
இருக்கும் போது 24 சதவீதம் இருக்கின்ற முஸ்லிம்கள் இருவர் பாராளுமன்றம்
செல்வார்கள். இந்த நிலை மாறவேண்டுமானால் என்றால் தமிழ் மக்கள் தமிழ்த்
தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்து இம்முறை மட்டக்களப்பு
மாவட்டத்திலிருந்து 4 பிரதிநிதிகளை பாரா ளுமன்றம் அனுப்ப வேண்டும் என்றார்.













