ஆலையடிவேம்பு பிரதேச சுற்றாடல் பாதுகாப்பு தொடர்பான கலந்துரையாடல்

ஆலையடிவேம்பு பிரதேசத்தில் காணப்படுகின்ற சுற்றாடல் பிரச்சனைகள் மற்றும் பாதுகாப்பு வழிமுறைகள் தொடர்பான திறந்த கலந்துரையாடலொன்று இன்று (10) காலை ஆலையடிவேம்பு பிரதேச செயலகக் கேட்போர் கூடத்தில் பிரதேச செயலாளர் வி.ஜெகதீசன் தலைமையில் இடம்பெற்றது.

மத்திய சுற்றாடல் அதிகார சபையின் சிரேஷ்ட சுற்றாடல் உத்தியோகத்தர் எஸ்.கோகுலன், பிரதேச சுற்றாடல் உத்தியோகத்தர் ஏ.ஏ.எம்.இர்பான், ஆலையடிவேம்பு பிரதேச சபையின் செயலாளர் திருமதி.வி.கமலநாதன், அக்கரைப்பற்று பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.எல்.எம்.ஜெமீல், ஆலையடிவேம்பு பிரதேச செயலகப் பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் கே.பாக்கியராஜா, பிரதேச வனத்துறை உத்தியோகத்தர் கே.நடேசன், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அக்கரைப்பற்று அலுவலக தொழிநுட்ப உத்தியோகத்தர் யூ.எல்.ஜெளபர் உட்பட ஆலையடிவேம்பு பிரதேச செயலகக் கிராமசேவை உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், நீர்ப்பாசனத் திணைக்கள அதிகாரிகள், ஆலையடிவேம்பு சுகாதார வைத்திய அதிகாரியின் பணிமனையில் கடமையாற்றும் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்ட இக்கலந்துரையாடலில் ஆலையடிவேம்பு பிரதேசத்தில் சட்டவிரோதமாக மேற்கொள்ளப்பட்டுவரும் மணல் அகழ்வுகள், விறகுக்காகக் காட்டு மரங்கள் அழிக்கப்படுதல், திண்மக்கழிவுகள் கொட்டப்படுதல், வடிகான்களில் நீர் தேங்கி நிற்றல் மற்றும் கடற்கரைகள் அசுத்தமாக்கப்படுதல் என்பன தொடர்பான சூழற்பிரச்சனைகள் கலந்துரையாடப்பட்டன.

இதன்போது பொதுத்துறை நிறுவனங்களின் பிரதிநிதிகள் தத்தமது கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டதுடன், பொலிஸ் உத்தியோகத்தர்களின் உதவியுடன் ஆலையடிவேம்பு பிரதேசத்தில் சூழல் பாதுகாப்பினை உறுதிசெய்தல் தொடர்பாக அக்கரைப்பற்று பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் தலைமையில் ஒரு விரிவான கலந்துரையாடல் இடம்பெற்றிருந்தது.

அதன் முடிவில் பொதுத்துறை நிறுவனங்களின் பிரதிநிதிகளை உள்ளடக்கிய ஓர் குழுவாக இணைந்து ஆலையடிவேம்பு பிரதேசத்தில் சூழற்பாதுகாப்பினை முன்னெடுப்பது தொடர்பில் இணக்கம் காணப்பட்டதுடன், பிரதேச செயலாளரின் தலைமையில் அக்குழுவானது தொடர்ச்சியாக செயற்படுவதற்குரிய பொறிமுறைகள் குறித்த தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டு, அவற்றின் முன்னேற்றங்கள் தொடர்பில் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை இதுபோன்ற கலந்துரையாடல்களை மேற்கொள்வது தொடர்பிலும் இணக்கப்பாடு காணப்பட்டது.