ஆலையடிவேம்பு
பிரதேச செயலக சிறுவர் மற்றும் மகளிர் அபிவிருத்திப் பிரிவினால் ஆலையடிவேம்பு
பிரதேசத்தில் கடமைபுரியும் அரச உத்தியோகத்தர்களுக்காக ஒழுங்கு செய்யப்பட்ட உளவள
ஆலோசனை தொடர்பான விழிப்புணர்வு வைபவம் இன்று (14) காலை ஆலையடிவேம்பு பிரதேச செயலகக்
கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
பிரதேச
செயலக உளவள ஆலோசனை உத்தியோகத்தர் ஏ.எம்.சப்றினாவினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த
குறித்த வைபவத்திற்கு நிருவாக உத்தியோகத்தர் ஏ.சசீந்திரன் தலைமை வகித்ததுடன்,
பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் கே.பாக்கியராஜா மற்றும் கிராமசேவை நிருவாக
உத்தியோகத்தர் ஏ.தர்மதாஸ ஆகியோர் அதிதிகளாகக் கலந்து சிறப்பித்திருந்தனர்.
ஆலையடிவேம்பு
பிரதேச பாடசாலை ஆசிரியர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், சுகாதார வைத்திய
அதிகாரி பணிமனையின் உத்தியோகத்தர்கள் உட்படப் பல அரசசேவை உத்தியோகத்தர்கள் பங்குகொண்ட இவ்விழிப்புணர்வு வைபவம் இரண்டு பகுதிகளாக இரு வளவாளர்களைக்
கொண்டு நடாத்தப்பட்டதாய் அமைந்திருந்தது.
முதலாவது
பகுதியில் நாகரிக வளர்ச்சியடைந்த இன்றைய சூழலில் மனிதர்களுக்கு உள
ஆற்றுப்படுத்துகையின் தேவை குறித்த கற்பித்தலை சிரேஷ்ட உளவளத் துணையாளர் ஏ.ஏ.தீன்
மொஹமத் நடாத்தினார். இதில் உளவள ஆற்றுப்படுத்துகை என்பது என்ன?, அது ஏன் அரச உத்தியோகத்தர்களுக்கு
அவசியமாகிறது?, உளநலம் தொடர்பான பாதிப்புக்கள் எமது சமுகத்தில் எவ்வாறு
தோற்றுவிக்கப்படுகின்றன? போன்ற விடயங்களில் தனது கருத்துக்களைப்
பங்குபற்றுனர்களுடன் பகிர்ந்துகொண்டார்.
இரண்டாவது பகுதியில் இன்றைய சமுகங்களில் அசாதாரண உளவியல் போக்குகளை
அடையாளம் காணுதல் தொடர்பாக இடம்பெற்ற பயிற்சிச் செயலமர்வை புகழ்பெற்ற உளவியலாளரும்,
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் உளவியல் கற்கைகள் துறையில் வருகைதரும்
விரிவுரையாளராகக் கடமையாற்றுபவருமான கலாநிதி. தமிழ்நேசன் நடாத்தினார். இதில் உளவியல்
பிரச்சனைகள் தோற்றம்பெறும் சந்தர்ப்பங்கள், உளவியல் பிரச்சனைகளுக்கு
உள்ளானவர்களின் அசாதாரண நடத்தைக் கோலங்கள், அவர்களது எண்ணங்களின் தன்மைகள், அவர்கள்
தங்கள் துலங்கல்களை வெளிப்படுத்தும் விதங்கள் மற்றும் உளவியல் பிரச்சனைகளால்
பாதிக்கப்படுவோரது சமூகநிலை என்பன தொடர்பான விரிவான தகவல்களைப் பங்குபற்றுனர்களோடு
பகிர்ந்துகொண்டார்.
இவ்விழிப்புணர்வுச்
செயலமர்வினை நடாத்திய வளவாளர்களால் பங்குபற்றுனர்களுக்குத் தங்கள் உள்ளத்தை ஒருமுகப்படுத்தி,
அதைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் பயிற்சிகளும், உடல் அப்பியாசங்களும் பயிற்றுவிக்கப்பட்டமை
இங்கு குறிப்பிடத்தக்க சிறப்பம்சமாக அமைந்திருந்தது.












