இதில் பிரதம அதிதியாக மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி.தவராஜா கலந்து கொண்டார். கௌரவ அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட திவிநெகும பணிப்பாளர் பி.குணரெட்ணம் பிரதேச அபிவிருத்தி வங்கியின் மட்டக்களப்பு மாவட்ட முகாமையாளர் கேசந்தானம், மட்டக்களப்பு மாவட்ட இந்து வர்த்தக சங்கத் தலைவர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
1985ஆம் ஆண்டு புளத் சிங்கள என்னுமிடத்தில் அப்போதைய நிதி அமைச்சர் ரொனி டி மெல் அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்ட வங்கியே பிரதேச அபிவிருத்தி வங்கியாகும்.
இலங்கை மத்திய வங்கியின் பொருளாதார ஆராய்ச்சி திணைக்கள ஆய்வுகளின் அடிப்படையில் இலங்கையின் சனத்தொகையின் 70 வீதமாக உள்ள கிராமிய மக்களை முன்னேற்றுவதற்காக 85ஆம் ஆண்டு களுத்துறை, குருநாகல், மாத்தறை மற்றும் அனுராதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஆரம்பிக்கப்பட்டது. இப்போது 17 மாவட்டங்களில் 268 கிளைகளைக் கொண்டு இயங்குகிறது.
2011ஆம் ஆண்டு பெப்பரவரி மாதம் 19ஆம் திகதி மட்டக்களப்பில் பணிகளை ஆரம்பித்த பிரதேச அபிவிருத்தி வங்கி மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள மக்களின் வருமான மேம்பாட்டுக்கான பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டக்களப்பு நகரம், ஏறாவூர், செங்கலடி, வாழைச்சேனை, காத்தான்குடி, களுவாஞ்சிக்குடி, கொக்கட்டிச்சோலை ஆகிய 7 கிளைகளைக் கொண்டு கடந்த 5 வருடங்களாக பணியாற்றுக்கிறது. அத்துடன் இந்த வருடத்தில் வாகரை, கிரான ஆகிய இடங்களில் இரண்டு கிளைகளையும் திறக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
பிரதேச அபிவிருத்தி வங்கியானது இலங்கையில் 3ஆவது பெரிய வலையமைப்பைக் கொண்டதும் அரசாங்கத்தின் ஒரேயொரு அபிவிருத்தி வங்கியாகவும் இருந்து செயற்படுகிறது.
இதன் 30ஆவது ஆண்டு நிறைவு விழாவானது நாட்டிலுள்ள அனைத்துக்கிளைகளிலும் நடைபெற்றதுடன், பிரதான வைபவம் கொழும்பிருலுள்ள டி.ஆர். விஜயவர்த்தன மாவத்தையிலுள்ள கண்காட்சிக் கூடத்தில் வங்கியின் தலைவர் பிரசன்ன பிரேமரத்ன தலைமையில் நடைபெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.












