இத்தேர்தல் வெறுமனே மக்களை உணர்ச்சி வசப்படுத்தி வாக்குகளை வேட்டையாடும் முயற்சி அல்ல

தமிழ்த் தேசியத்துக்கும் தமிழர்தம் நீண்ட கால அரசியல் மற்றும் வாழ்வியல் உரிமைக்கும் ஏற்பட்டுள்ள ஒரு சத்தியசோதனையாகவே நடைபெறப்போகும் நாடாளுமன்றத் தேர்தலை நான் நோக்குகின்றேன் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற வேட்பாளர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்.


மட்டக்களப்பிலுள்ள அவரது அலுவலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (10)  நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு தொடர்ந்து அவர் தெரிவிக்கையில்,    இத்தேர்தல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இருப்பினை தக்க வைப்பதற்கான தேர்தலோ அல்லது போட்டியிடும் என்னை போன்ற வேட்பாளர்களின் வெற்றியினை மையமாகக் கொண்ட தேர்தலாகவோ நான் நோக்கவில்லை. அவ்வாறு நோக்கவும் முடியாது.
மாறாக தமிழர்தம் நீண்டகால அரசியல் போராட்ட வரலாற்றில் குறிப்பாக அகிம்ஷை மற்றும் ஆயுத போராட்டங்களால் ஏற்பட்ட மாற்றங்கள், திருப்பங்கள் அவற்றின் எதி;ர்விளைவால் எம் மக்கள் வாழ்வில் ஏற்பட்ட மறக்க முடியாத துன்பியல் நிகழ்வுகள் அனைத்துக்கும் ஒர் சரியான தீர்க்கமான எம்மக்களால் ஏற்றுக் கொள்ளத்தக்கதான தீர்வினை முன் வைக்க கூடிய ஆத்மபலத்தினை எம்மக்களிடம் இருந்து பெறுவதற்கான அதுவும் தமிழ்த்; தேசியத்தின் ஏக குரலாக என்றும் ஒலிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு தமிழத்; தேசிய வாழ் மக்கள் வழங்கும் ஆணையாகவே இந்த தேர்தலை நான் காணுகின்றேன்.

  ஸ்ரீ லங்காவின் இன்றைய  அரசியல் களநிலைமை நாமும் எமது மக்களும் சரியான தெளிவான பாதையினை தெரிவு செய்ய வேண்டிய நாற்சந்தியில் எம்மையும் எமது மக்களையும் நிறுத்தியுள்ளது.

இந் நிலையில் சரியான வழிகாட்ட வேண்டிய ஒரு பக்க பொறுப்பு எம்மிடமும் சரியான பாதையை தெரிவு செய்ய வேண்டிய மறுபக்கப் பொறுப்பு எம் மக்களிடமும் உள்ளது.   எனவே சம்பந்தப்பட்ட இருதரப்பும் தமிழ் தேசியத்திற்காக தமது வரலாற்றுக் கடமையைச் செய்வதற்காக தமிழ் தேசியத்துடன் இணைய வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

 இத்தேர்தல் வெறுமனே மக்களை உணர்ச்சி வசப்படுத்தி வாக்குகளை வேட்டையாடும் முயற்சி அல்ல. கடந்த காலங்களில் தமிழ் தேசியம் எதிர்கொண்ட தேர்தல்கள் அனைத்தும் அது உள்ளூராட்சி தேர்தலோ அது கடந்த கால தேச வர்த்தமானச் சூழல் பொறுத்து ஏதோ ஒரு செய்தியை தேசியத்திறகும் சர்வதேசத்திறகும் உரத்துக் கூறவேண்டிய தேவையை எமக்கு ஏற்படுத்தி உள்ளது.

 அது போலவே இத்தேர்தலும் எமது ஒற்றுமையின் சக்தியினை உள்ளூருக்கும் சர்வதேசத்திற்கும் உரத்துக் கூறவேண்டிய காலத்தின் கட்டாயத்தேவையாகவுள்ளது.   தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒற்றுமையை சிதைப்பதை மட்டும் குறிக்கோளாக கொள்ளும் ஒரு சிலர் தவிர்ந்த எமது மக்கள் அனைவரும் காலத்தின் கட்டாயத் தேவையை உணர்ந்து தமிழ் தேசியத்தின் உரமாக மாறுவீர்கள் என்ற நம்பிக்கையில் இத்தேர்தலை நானும் எனது குழுவினரும் எதிர்கொள்கின்றோம் என்ற எதிர்பார்ப்பை உங்களிடம் சமர்ப்பிப்பதில் மகிழ்வடைகின்றோம் என்றார்.