மனிதனாலேயே இந்த உலகில் பெருங் குழப்பங்கள் தோன்றுகின்றன - கல்வியியற் கல்லூரி விரிவுரையாளர் அப்துல் வாஜித்

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)
மனிதனே தான் ஏன் படைக்கப்பட்டான் என்பதைப் பற்றி வியாக்கியானம் செய்ய முற்பட்டதன் காரணமாக உலகில் பெருங் குழப்பங்கள் தோன்றுகின்றன இவ்வாறு மட்டக்களப்பு கல்வியியற் கல்லூரி விரிவுரையாளர் எம்.எல். அப்துல் வாஜித் தெரிவித்தார்.
மட்டக்களப்பு அஞ்சற் பயிற்சிக் கல்லூரியில் புதனன்று மாலை இடம்பெற்ற புனித றமழான் நோன்று துறக்கும் நிகழ்வில் மார்க்க உபந்நியாசம் நிகழ்த்துகையில் அவர் இதனைத் தெரிவித்தார்.


அங்கு தொடர்ந்து மார்க்க சொற்பொழிவாற்றிய அப்துல் வாஜித் கூறியதாவது,
உண்மையிலேயே மனிதன் பகுத்தறிவு கொடுக்கப்பட்ட ஒரு அற்புதப் பிறவி. மனிதனுக்கு இந்தப் பிரபஞ்சத்தின் அத்தனை கட்டமைப்புக்களும் இறைவனால் வசப்படுத்திக் கொடுக்கப்பட்டிருக்கின்றன.
இவ்வாறு ஆறறி கொடுத்துப் படைக்கப்பட்ட இந்த மனிதனால் இன்று உலகில் குழப்பங்களும் நெருக்கடிகளும் பயங்கரங்களும் தோன்றுகின்றன. மனிதன் மனிதனுக்கு மட்டும் கேடு செய்யவில்லை. இந்த ஒட்டு மொத்த உலகின் படைப்பினங்களுக்கும் தீங்கு செய்து கொண்டிருக்கின்றான்.
மனித செயற்பாடுகளால் இந்த உலகம் அமைதியிழந்து தடுமாறிக் கொண்டிருக்கின்றது.
இறைவனின் பிரதிநிதியாக உயர்ந்த அந்தஸ்தோடு படைக்கப்பட்டுள்ள இந்த மனிதன் இறைவனின் கட்டளைகளுக்கு அடிபணிந்து அவற்றை ஒழுகி நடக்க வேண்டும். இந்த உலகத்தை அவன் வளபப்டுத்தும்;பொழுதுதான் இந்த உலகம் எல்லா மனிதர்களும் மற்றைய இறைவனின் படைப்பினங்களும் சாந்தி சமாதானத்தோடு வாழும் அமைதிப் பூங்காவாக மாறும்' என்றார்.

அஞ்சற் பயிற்சி தபாலதிபர் பயிலுநர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் கிழக்குமாகாண பிரதி அஞ்சல் மா அதிபதி வி. விவேகானந்தலிங்கம், மட்டக்களப்பு அஞ்சற் பயிற்சி நிலைய பிரதம போதனாசிரியர் பி. நரேந்திரன், மட்டக்களப்பு பெரும்பாக அஞ்சல் அத்தியட்சகர் எஸ். ஜெகன், அஞ்சல் பயிற்சிப் போதனாசிரியர்களான பாத்திமா ஹஸ்னா, சிவானந்தி தேவதாஸன் அஞ்சல் தினைக்கள பிராந்திய கணக்காளர் சந்திரகலா ஜெயந்திரா உட்பட தபாலதிபர்களும் கலந்து கொண்டனர்.