மாமாங்கேஸ்வரர் ஆலயத் திருவிழாச் சூழலில் கிழக்குப் பல்கலைக் கழக நுண்கலைத் துறையினரால் நடாத்தப்படவுள்ள பாரம்பரிய அரங்க விழா 2015.



கிழக்குப் பல்கலைக் கழக நுண்கலைத்துறை பாரம்பரியக் கலைகளின் சமகாலத் தேவைகளையும் அவற்றின் முக்கியத்துவத்தினையும் அறிந்து கொள்ளும் வகையில் அரங்கக் கலைஞர்களுடனும், சமூகங்களுடனும் இணைந்த வகையில் முன்னெடுத்து வருகின்ற கல்விச் செயற்பாடுகளில் பாரம்பரிய அரங்க விழா ஐந்தாவது வருடமாக இம்முறையும் மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத் திருவிழா முற்றத்தில் ஐந்து நாட்களுக்கு (08.08.2015 – 12.08.2015) இரவு பகலாக நடாத்துவதற்குத் தயார்படுத்தப்பட்டுள்ளது.

இந்த வருடம் பாரம்பரிய அரங்க விழாவானது 08.08.2015 அன்று சனிக்கிழமை மாலை 5 மணிக்கு ஆலய முன்றலில் அமைக்கப்படவுள்ள கூத்துக் களரியிலே ஆரம்மாகவிருக்கின்றது.

இதில் பாரம்பரிய இசைக் கருவிகளின் காட்சிப்படுத்தல், ஆற்றுகைகள், செய்து காட்டல், உரையாடல் என்பனவும் மாலை, இரவு வேளைகளில் கூத்துக் களரியிலே ஆற்றுகைகளும் இடம்பெறவுள்ளன.

மட்டக்களப்பின் பல்வேறு பகுதிகளில் பயில் ;நிலையிலிருக்கின்ற வசந்தன் கூத்து,  கரகம், புலிக்கூத்து,  பறைமேளக் கூத்து ஆகியவையும் நிகழ்த்திக் காட்டப்படவுள்ளன.

அத்துடன் இரவு வேளைகளில் கூத்தாற்றுகைகளும் இடம்பெறவிருக்கின்றன. இதில்  கிழக்குப் பல்கலைக் கழக நுண்கலைத்துறையினரது அலங்கார ரூபன் தென்மோடிக் கூத்து ஊர்களில் ஆடப்பட்ட சில முழு இரவுக் கூத்துக்களும் நிகழ்த்தப்படவுள்ளன.

இப்பாரம்பரிய அரங்க விழாவில் பாரம்பரிய இசைக் கருவிகளை உருவாக்குபவர்கள்,  இணக்குபவர்களது சந்திப்பும் , கலந்துரையாடலும் இடம்பெறும்.

இச்செயற்பாட்டின் போது வாத்தியக் கருவிகளை இணக்கும் கலைஞர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள்ääசவால்கள் தொடர்பாகவும் உரையாடல்கள் முன்னெடுக்கப்படவுள்ளதுடன் பாரம்பரிய இசைக்கருவி உருவாக்குபவர்களும் மாண்பு செய்யப்படவுள்ளனர்.

அத்துடன் கூத்து மீளுருவாக்கமும் கருத்துருவாக்கமும் சார்ந்த கலந்துரையாடல்கள்; இவ் எண்ணக் கருவினை முன்வைத்த கலாநிதி சி.ஜெயசங்கர் அவர்களின் இணைப்பாக்கத்தில் இரு தினங்களுக்கு நடைபெறும்.

06.08.2015 அன்று வெள்ளிக்கிழமை காலை வேளையிலே ஆற்றுகைக்கான களரியமைக்கும் செயற்பாடு மற்றும் தோரணம் செய்யும் வேலைகள் ஆரம்பமாகவிருக்கின்றன.

இவற்றினைச் செயன்முறை ரீதியாகப் பயில்வதற்கும் அத்துடன் அவற்றினைக் காணாதவர்கள் பார்த்து மகிழ்வதற்குமான சந்தர்ப்பம் இங்கு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இன்றைய நவீன அறிவுப் புலத்தில்  மனிதர் தம்மை மறந்து அல்லது தேவை கருதி இயந்திரமாக மாறித் தம் வாழ்க்கையினை ஓட்டிச் செல்லும் காலத்திலே இவ்வாறான சமூகம் தழுவிய செயற்பாடுகள் கிழக்குப் பல்கலைக் கழக நுண்கலைத் துறையினரால் பரந்த சூழலில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமையானது முக்கியமான விடயமாகும்.

ஆலயம் என்பது மக்கள் பலரும் வந்து செல்கின்ற இடம். குறிப்பாகத் திருவிழாக் காலங்களில் பல பிரதேசங்களிலிருந்தும் வரும் மக்கள் ஒன்று கூடுவர். இவர்களுக்கு பாரம்பரிய அரங்கவிழாவினைக் காண்பதற்குச் சந்தர்ப்பம் கிடைக்கின்றது.

இணைய வலைத் தளங்களையே உலகம் என நம்பி தங்களின் நிலை மறந்து மூழ்கித் தடுமாறும் இன்றைய தலை முறையினருக்கும்,  புறச்சூழலுடன் பரிச்சயமற்ற விதத்தில் வடிவமைக்கப்படும் நகர்ப்புறத்துப் புதிய தலைமுறைகளுக்கும் எமது பாரம்பரியங்களையும்,  அதன் ஆற்றுகை வடிவங்களையும் பார்வையிடுகின்ற,  அறிந்து கொள்கின்ற சந்தர்ப்பமானது இதனூடாக வாய்க்கப் பெறுகின்றது.

கடந்த காலங்களைப் போன்று இவ்வருடமும் சிறுவர், இளைஞர், முதியோர் எனப் பலதரப்பட்டவரும் வந்து ஆற்றுகைகளைப் பார்த்துச் செல்ல முடியும்.

அழகியல் என்பது பல்வகைத் தன்மையானது வித்தியாசங்கள் கொண்டது என்பதற்கமைவாகவும், கலைகள் உயர்வானது, தாழ்வானது என்கின்ற வேறுபாடுகள் இல்லை என்பதனை விளங்கிக் கொள்ளும் வண்ணமும் இவ்வருடமும் வாத்தியங்களது இசை முழக்கமும் நடைபெறவுள்ளது.

இதிலே சிறப்பம்சம் யாதெனில் வாத்தியக் கருவிகளை இசைப்பதில் பரிச்சயமான கலைஞர்கள், பார்வையாளர்கள்,ஆர்வலர்கள் யாராகிலும் களரியிலே சென்று தங்களது ஆற்றலை வெளிப்படுத்துவதற்குமான களம் அமைத்தும் கொடுக்கப்பட்டுள்ளது.

செயன் முறையானதும், சமுதாய மயப்பட்டதும்,நடைமுறை வாழ்க்கையை எதிர் கொள்வதற்கான கல்வி முறையாகவும் அமையும் பாரம்பரிய அரங்க விழா வடிவமைக்கப்பட்டு முன்னெடுக்கப்படுகின்றது.

இக்கலைத் திருவிழா கிழக்குப் பல்கலைக்கழக நுண்கலைத் துறையினரால் முன்னெடுக்கப்படுகின்றமை உன்னதமான கலைச் செயற்பாடாக அமைகின்றது.

 



நவசுகன் துலக்சனா.
நுண்கலைத்துறை.
கிழக்குப் பல்கலைக் கழகம்.