பாரம்பரிய அரங்க விழாவின் கொண்டாட்டமும் சமூக ஒன்று கூடலும் - 2015

தனியன்களாக்கப்பட்ட நுகர்வுப் பண்பாட்டுச் சூழலில் மனிதர் வெறும் பிண்டங்களாக ஆதிக்க அதிகார சிந்தனைகளால் கட்டமைக்கப்பட்டு வருகின்றர். உணர்வுகளை பகிர்ந்து கொள்ள, உறவுகளை வலுப்படுத்திக் கொள்ள அணுவளவும் சந்தர்ப்பம் இல்லாத இன்றைய நெருக்கடிச் சூழலில் பாரம்பரிய கலைகளும் அதன் ஆற்றுகைகளும் மனிதர் தம்மை தாமே ஆற்றுப்படுத்திக் கொள்ளும் சக்தி வாய்ந்த தொடர்பூடக சாதனங்களாக விளங்குகின்றன. பாரம்பரிய அரங்குகளும் அதன் வாழ் ஆற்றுகைகளும் சமூகத்தை ஒருங்கிணைக்க வல்லது. மனிதர் வாழ்ந்து மகிழ்ந்து கொண்டாடும் களமாக இவை தொழிற்பட்டு வருகின்றன.
இப்பின்னணியில் பாரம்பரிய கலைகள் குறித்த தீவிர கவனத்தைச் செலுத்தி வருகின்ற கிழக்குப் பல்கலைக்கழக நுண்கலைத்துறை பாரம்பரிய அரங்குகள் குறித்து பல்வேறு முனைப்பான செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது. இதில் வருடா வருடம் மாமாங்கேஸ்வரர் ஆலயத் திருவிழாவில் தொடர்ந்து ஐந்து வருடங்களாக பாரம்பரிய அரங்கத் திருவிழாவினை நடாத்தி வருவது குறிப்பிடத்தக்கது. இவ்வருடம் நுண்கலைத்துறை தலைவர் கலாநிதி வ.இன்பமோகன் அவர்களின் தலைமையில் கலாநிதி சி.ஜெயசங்கர் அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலில் நுண்கலைத்துறை விரிவுரையாளர்கள் மற்றும் மாணவர்கள் இணைய சமூக ஒன்று கூடலுடன் பெருவிழாவாக கொண்டாடப்பட்டது. அத்தோடு, நிகழ்ச்சி ஒழுங்குபடுத்தல்களையும் இணைப்பாக்குச் செயற்பாடுகளையும் முகாமை செய்து செயற்படுத்தியவர் விரிவுரையாளர் சு.சந்திரகுமார் ஆவார்.

பாரம்பரிய கலைகள் கொண்டாடப்படவும் ஆற்றுகை செய்யப்படவும் பொருத்தமான சூழல் திறந்த வெளிகளாகும். பல்வேறு சமூகங்களும் ஒன்றுக் கூடி தமது உணர்வுகளை பகிர்ந்து ஆறுதல் அடைய, நிம்மதி காண இப்பொது வெளிகளே களம் அமைத்துக் கொடுக்கின்றன. திறந்த வெளிகளுக்கே சொந்தமான பாரம்பரிய ஆற்றுகைகள் அதற்குரிய வெளியில் அந்த சுதந்திர சூழலில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருவதால் 'சமூக ஒன்று கூடல்' என்பது இங்கு சாத்தியப்பாடாகின்றது. இதுவே இப்பாரம்பரிய அரங்க விழாவின் பிரதான நோக்கமாகவும் உள்ளது.
இவ்வகையில் நான்கு நாட்கள் கொண்டாடப்பட்ட இவ்விழாவில் பாரம்பரிய அடையாளங்களை வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்ற வடமோடி, தென்மோடிக் கூத்துக்கள், புலிக்கூத்து, வசந்தன் கூத்து, கரகம், பாரம்பரிய வாத்திய கருவிகளின் இசை முழக்கம்,  பாரம்பரிய வாத்திய கருவிகளின் காட்சிப்படுத்தல், களரி, தோரணம் என்பன  சமூக ஒன்று கூடலுடன் இணைந்த கொண்டாட்டமாக வெளிப்பட்டன.
கூத்தரங்கு சமகாலத்தில் பேசப்பட வேண்டும். உலகமயமாக்கலின் சவால்களை எதிர்கொள்வதற்கான பெறுமதியான, வலுவான சாதனமாக கூத்தரங்குகள் காணப்படுகின்றன. கூத்தரங்கு இன்றைய சூழலில் விடுதலைக்கான ஓர் அரங்காக தொழிற்படுகின்றமையை நாம் மறுப்பதற்கில்லை. மாமாங்கேஸ்வரர் ஆலய முன்றலில் அழகாய் அலங்கரிக்கப்பட்ட தோரணத்துடன் மிக நுணுக்கமாக கட்டப்பட்ட வட்டக் களரியில் அலங்காரரூபன் தென்மோடிக் கூத்து நுண்கலைத்துறை விரிவுரையாளர் சு.சந்திரகுமார் அவர்களின் இணைப்பு மற்றும் பங்காற்றுகையோடு நுண்கலைத்துறை மாணவர்கள் இணைந்து வே.தம்பிமுத்து அண்ணாவியாரைக் கொண்டு ஆற்றுகை செய்யப்பட்டது. பிற்பாட்டுக்களை ஊர்க் கூத்து கலைஞர்களான பிரபாகரன், கேதீஸ்வரன், அண்ணாவியார் ப.கதிர்காமநாதன் ஆகியோர் பாடியிருந்தனர். பாரம்பரிய அழகியலோடு ஆற்றுகை செய்யப்பட்;ட அலங்காரரூபன் தென்மோடிக் கூத்து ஊர்மக்களின் நல்ல வரவேற்பையும் பாராட்டையும் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.
அதேபோல ஊர்க் கூத்துக் கலைஞர்களால் வட்டக்களரியில் ஆற்றுகை செய்யப்பட்ட வைகுந்தம் வடமோடிக் கூத்து, பவளக்கொடி வடமோடிக் கூத்து என்பனவும் குறிப்பிடத்தக்கன. அதில் வைகுந்தம் மகிழடித் தீவு கண்ணகி கலா மன்றத்தினாலும் பவளக்கொடி சொர்வாமுனை வேல் விழி கலாமன்றத்தினாலும் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தன. ஊர் ஒன்று கூடலும் சமூக இணைவும் கூத்து எப்படி மக்களை ஆற்றுப்படுத்துகிறது என்பதும் இவ்வாற்றுகைகளினூடாக எம்மால் கற்றுணர முடிந்தது. நவீன அறிவுப் பரப்பின் ஒரு வெளிப்பாடான கற்பித்தலில் கட்டமைக்கப்பட்டுள்ள கூத்துப் பற்றிய பொய்யான கற்பிதங்கள் உடைத்தெறியப்பட வேண்டும் என்ற புரிதல் நிலை எமக்கு கிடைத்தது.
கூத்தாடுபவர்கள் மட்டுமன்றி கூத்துப் பார்க்கும் ஊரவர்கள் கொண்ட மகிழ்ச்சிக்கு அளவில்லாது இருந்தது. கூத்துப் பற்றிய உரையாடலும் கூத்தாடப்படும் கதை, அதன் பாட்டுக்கள், தருக்கள், ஆட்டக் கோலங்கள் பற்றிய அவர்களது இயல்பான பேச்சுகளும் அபிப்ராயங்களும் தாராளமாக வெளிப்பட்டன. கூத்தில் பாடலிலோ அல்லது ஆடலிலோ சிறு பிழையேற்பட்டாலும் அவர்கள் முகம் சுளிப்பதையும் தமது விமர்சனங்களை சத்தமாக கூறுவதையும் அங்கு காணமுடிந்தது. களுவங்கேணியைச் சேர்ந்த (தற்போது பால்ச்சேனையில் வசிப்பவர்) அரசம்மா 'கூத்தென்டா எங்களுக்கு நிறைய விருப்பம் மனே. விடிய விடிய கூத்தப் பார்ப்பம். எங்கட அவரும் நல்ல கூத்துக்காரர். எல்லா கஷ;டங்களையும் மறந்து இங்க தான் நிம்மதியா இருக்கலாம்' என்று கூறியதோடு தான் நீண்ட நாட்களாக காண முடியாதிருந்த தன் உயிர் சினேகிதியை இங்குதான் கண்டதாகவும் இப்போது தான் சந்தோசமாக இருப்பதாகவும் கூறியமை இங்கு குறிப்பிடத்தக்கது.
இவ்வாறான பல உரையாடல்களையும் வெளிப்பாடுகளையும் இங்கு காணக் கூடியதாய் இருந்தது. இதற்கு பிரதான காரணம் இதன் வெளியே (சூழல்) ஆகும். இதனாலேயே கூத்தரங்கு சக்தி வாய்ந்த  ஓர் ஊடகமாக கொண்டாடப்படுகின்றது. பல இடையூறுகள்  வந்த போதும் கூத்தர்கள் தமது ஆற்றுகையை எவ்வித தளர்வுமின்றி வெளிப்படுத்தினர். கோயில் வெளியில் சினிமாப் பாடல்கள் நாதஸ்வரத்தில் வாசிக்கப்பட்ட போது கூடியிருந்தவர்கள் பாட்டு விளங்கவில்லை என்று கவலைப்பட்டதும் ஆதங்கம் கொண்டதும் இதனைப் புரிந்து கொண்டு கூத்துக் கலைஞர்களும் பிற்பாட்டுக்காரர்களும் பாடல்களை இன்னும் சத்தமாக எடுத்து பாடியதும் கூத்தின் மீது அவர்கள் கொண்டுள்ள ஓர்மத்தை எங்களால் புரிந்து கொள்ள முடிந்தது. கூத்துக்களிலும் ஆடல், பாடல், நடிப்பு என்பன சிறப்பாகவும் சுதந்திரமாகவும் வெளிப்பட்டன. பாராட்டுக்கள். ஊர் கூத்துக்களை போலவே நுண்கலைத்துறையினரால் ஆற்றுகை செய்யப்பட்ட அலங்காரரூபன் தென்மோடிக் கூத்தினையும் ஊரவர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தமையானது மட்டில்லா மகிழ்ச்சியை எமக்களிப்பதாய் இருந்தது.
மேலும் ஊர்களில் சிறுவர்களால் ஆடப்பட்டு வருகின்ற வசந்தன் கூத்து இம்முறை ஆண்கள், பெண்கள் இணைய நுண்கலைத்துறை விரிவுரையாளர் ச.துஷ;யந்தின் அவர்களின் ஆய்வு செயற்பாடாக ஸ்ரீ சக்தி வித்தியாலய மாணவர்களால் ஆற்றுகை செய்யப்பட்டதோடு நுண்கலைத்துறை மாணவர்களாலும்  வட்டக்களரியில் ஆற்றுகை செய்யப்பட்;டது. அண்ணாவியார் தேணூரான் அரசரெட்ணம் அவர்களைக் கொண்டு பழக்கப்பட்ட இவ்வசந்தன் கூத்து இருவேறு முறைகளில் ஆற்றுகை செய்யப்பட்ட அதேநேரம் பால்நிலை சமத்துவத்தை மொழியும் ஆற்றுகையாகவும் அமைந்தது.
மேலும் வாகரை அம்மந்தனாவெளி கலைஞர்களால் புலிக்கூத்து திறந்த வெளியில் ஆற்றுகை செய்யப்பட்டது. 'ஊருக்குள் கூத்துக்கள் இல்லை', 'அவை அருகிவிட்டன', 'இவ்வளவு தான் மட்டக்களப்பு கூத்துக்கள்' என்கின்ற கருத்துருவ கட்டமைப்புச் சூழலில் தான் புலிக்கூத்;து என்ற ஓர் கலை வடிவம் காலங்காலமாக ஆடப்பட்டு வந்தது, வருகின்றது என்ற உண்மை கண்டறியப்பட்டது. இப்போது இதன் ஆற்றுகை பரவலாக இடம்பெற்று வருகின்ற நிலையில் மாமாங்கேஸ்வரர் கோயில் முன்றலிலும் ஆற்றுகை செய்யப்பட்டது. அவர்கள் பல சிரமங்களுக்கும் மத்தியில் வந்து தம் கலையினை ஆற்றுகை செய்தமை சிறப்பானதாகும். புலிக்கூத்து அண்ணாவியார் பொ.அருமைநாயகம் 'புலிக்கு ஆடுற ஆக்கள் வரல்ல. வேடருக்கும் வேடுவிச்சிக்கும் ஆடுற ஆக்களுக்கும் வர முடியாது போயிட்டு. ஆனாலும் இருக்கிற ஆக்கள வச்சிக் கொண்டு நாங்க சிறப்பா செய்யலாம்' என்று கூறிய அவரது ஓர்மம் பாராட்டத்தக்கது. இந்நிலை கலைஞர்கள் எப்போதும் தம் கலையை கொடுக்க தயாராக தான் உள்ளனர் என்பதும் அவர்களுக்கான சந்தர்ப்பத்தையும் சூழலையும் ஒழுங்கு செய்வதும் ஊக்குவிப்பதும் கௌரவிப்பதுமே எமது கடமை என்பதும் புரிதலுக்குரியது.
மேலும் இங்கு சின்னஞ்சிறார்களால் ஆற்றுகை செய்யப்பட்ட கரகம் காண்போரின் மனதை பறித்துக் கொண்ட அற்புதமான ஆற்றுகையாக அமைந்தது. அம்பிளாந்துறை வைரவா கலைக்கழத்தினூடாக கொண்டு வரப்பட்ட கரக ஆற்றுகையில் முருகன் வள்ளியை திருமணம் முடித்த கதை இனிமையான பாட்டுக்களுக்கூடாகவும் அழகான ஆட்டங்களுக்கூடாகவும் சொல்லப்பட்டது. அதற்கேற்ப முகத்தில், உடம்பில் பாவங்களை, அசைவுகளை அதற்கேற்ற உடை ஒப்பனையோடு வெளிப்படுத்திய குழந்தைகளின் ஆற்றல்கள் நெஞ்சில் நீங்காத இடத்தினைப் பெற்றுக் கொண்டன. எவ்விதமான கூச்சம், அச்சமின்றி சுதந்திரமாக ஆற்றுகை செய்ததைப் பார்க்க குழந்தைகள் விளையாடுகின்றனர் என்ற உணர்வை எமக்கு ஏற்படுத்தியிருந்தனர். பாரம்பரிய களங்கள் சிறுவர்களுக்கு பொருத்தமான, மகிழ்ச்சிகரமான சூழலை ஏற்படுத்தி கொடுக்க வல்லது என்பது அவதானத்திற்குரியது.  
அடுத்த முக்கிய ஆற்றுகை பாரம்பரிய வாத்தியங்கள் வட்டக்களரியில் இசைக்கப்பட்டதாகும். மிருதங்க வித்துவான் வே.ஸ்ரீதரன் அவர்களின் வழிகாட்டலில் அவரது மாணவர்களால் பாரம்பரிய வாத்தியக் கருவிகளை பிரதானமாக கொண்ட ஆற்றுகை நிகழ்த்தப்பட்டது. வௌ;வேறு வாத்தியக் கருவிகளினூடாகவும் வௌ;வேறு இசை லாவகமாக வாசிக்கப்பட்டு வித்தியாசமானதோர் அனுபவத்தை ஏற்படுத்தியது. அதேபோல கிட்ணன் அவர்களின் தப்பு இசை நிகழ்த்தப்பட்டது.  நிகழ்வுகளின் ஆரம்பத்திற்கு பறை அடிக்கப்பட அது மக்களை அத்தளத்திற்கு ஒன்று சேர்த்தது.
இங்கு எவ்வித ஏற்றத் தாழ்வுகளுமின்றி எல்லா விதமான வாத்தியங்களும் வாசிக்கப்பட்டன. கடந்த வருடம் பறையுடனான ஊர்வலம் இவ்விடத்தில் நினைவு கொள்ளத்தக்கது. அதற்கான விமர்சனங்கள் தொடர்ந்தும் ஆதிக்க நிலையிலுள்ளவர்களால் முன்வைக்கப்பட்டு வருகின்றமையானது வேதனையை அளிக்கின்றது. கலைகள் சமூகத்திற்கானது. சமூகத்தின் சமத்துவத்தை பேணக் கூடியது. ஆனாலும் குறிப்பிட்ட 'சாதியினரது' என்று பொருள் சுட்டி இன்னும் ஓரங்கட்டி வரும் நிலை தான் பெரும் ஆபத்தான விடயமாக உள்ளது. 
நல்ல கலைஞருக்கும் அவரது கலையாக்க செயற்பாடுகளுக்கும் விமர்சனங்கள் வருவது சகஜமன்றோ! எனவே இவ்வாறான பல வழிகளில் பல தடைகளையும் இடையூறுகளையும் தாண்டி பாரம்பரிய அரங்க விழா கொண்டாடப்பட்டமை பெருமைக்குரியது.
இவற்றோடு பாரம்பரிய கருவிகளின் காட்சிக் கூடமும் காண்போரின் கவனத்தை ஈர்த்தது. இதில் கவனிக்க வேண்டிய முக்கிய விடயம் என்னவென்றால் தமிழர் என்று மார்புதட்டி கொள்ளும் எம்மில் பலருக்கும் அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்த எமது பாரம்பரிய அடையாளங்களைக் கூறும் வாத்தியக் கருவிகளில் சில என்னவென்றே தெரியாத அவல நிலைதான். குறிப்பாக கொம்பு, சவணிக்கை இவற்றோடு தவில்  தெரியாதவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இந்நிலைக்கு யாரை குறை சொல்வது? யாரில் பரிதாபம் கொள்வது? என்ற குழப்பமான சிந்தனையை நாம் குறிப்பாக நான் பெற்றுக்கொண்டேன்.
ஆனால், பறைமேளத்தை குறிப்பிட்ட சாதியினரது என மேனிலை வர்க்கம் ஒதுக்கி வைத்தாலும் பறைமேளம் தான்  எல்லோருக்கும் தெரிந்த, பழக்கப்பட்ட வாத்தியமாக இருந்தது என்பது தான் முக்கியமானதும் சிந்திக்கப்பட வேண்டியதுமான விடயமாகும். இது தனியான புரிதலுக்கும் சந்தோசத்திற்குமுரியது.
பாரம்பரிய வாத்தியங்கள் பாரம்பரிய கலையாற்றுகையில் முக்கிய பங்கு வகிக்கின்றன. உதாரணமாக கூத்தில் மத்தளமும் தாளமும் கூத்தின் ஆட்டக் கோலங்களைத் தீர்மானிப்பதில் பிரதான பங்கேற்கின்றன. பாரம்பரிய கலை வடிவங்களின் உருக்களுக்கு உயிர் கொடுப்பதாய் பாரம்பரிய வாத்திய கருவிகள் தொழிற்படுகின்றன. எனவே இவை குறித்த கவனம் முக்கியம். இன்றைய சூழலில் நுற்றுக்கும் மேற்பட்ட அண்ணாவிமார்கள் இருந்தும் இவர்களிடம் இருக்கும்  மத்தளங்களின் எண்ணிக்கை பத்தோ இருபதோ தான். காரணம் மத்தள உருவாக்கத்தில் சமூக, பொருளாதார, அரசியல் ரீதியாக அவர்கள் பல பிரச்சினைகளுக்கு ஆளாகின்றனர். உதாரணமாக பொருத்தமான தோல், மரக்குற்றிகளைப் பெற்றுக் கொள்ள சட்ட ரீதியான தடைகளை கூறலாம். எனவே இருப்பதை வைத்துக் கொண்டு தமது வசதிக்கேற்ப மத்தளங்களை தயாரித்து வைத்துள்ளனர். இந்நிலையில் மத்தள வாசிப்பில் செம்மையில்லை எனவும் இம்மத்தளத்தை மிருதங்கத்தோடு ஒப்பிட்டும் பரவலாக பல புரிதலற்ற கற்பிதங்களை பரவி, பரப்பப்பட்டு வருகின்றன.
இதனை கருத்திற் கொண்டு பாரம்பரிய வாத்தியக்கருவிகள்  உருவாக்குவது தொடர்பான காத்திரமான கலந்துரையாடல்கள் இடம்பெற்றன. இதன்போது பாரம்பரிய வாத்தியக் கருவிகள் தயாரித்தல், தயாரித்தலின் போது எதிர்கொள்ளும் சவால்கள், பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டன. இது குறித்த சில முக்கியமான விடயங்களை கலாநிதி வ.இன்பமோகன் அவர்கள் முன்வைத்திருந்தார். அத்தோடு விரிவுரையாளர் த.விவேகானந்தராசா இது பற்றி பூரண விளக்கம் தந்தமை குறிப்பிடத்தக்கது.
மற்றொரு காத்திரமான உரையாடலாக கூத்து மீளுருவாக்கம் அமைந்தது. இன்றைய சூழலில் கூத்து மீளுருவாக்கத்தின் தேவைப்பாடு, அதன் பரவலாக்கம், கூத்து மீளுருவாக்க செயற்பாட்டின் போது எதிர்கொள்ளும் சவால்கள், நவீன அறிவுப் பரப்பில் கூத்து மீளுருவாக்கம் பற்றிய அப்பட்டமான பொய்யான, பிழையான கற்பித்தல்கள் என்பன பற்றி ஆழமான கலந்துரையாடல்கள் இடம்பெற்றன. கூத்து மீளுருவாக்கம் என்பது பாரம்பரிய தளத்தோடு நின்று சமூகத்திற்கு பொருத்தமான, தேவையான கருத்தியல்களை சமூகத்தோடு இணைந்து சமூகத்திற்கு சொல்வதாகும். சாதி ஒடுக்குமுறை, பெண்கள் அடக்குமுறை, சிறுவர் வன்முறை, யுத்த வன்கொடூரம் என்பவற்றுக்கு எதிராக குரல் கொடுக்கும் வலுவான ஓர் சக்தி ஊடகமாக பாரம்பரிய கூத்தரங்கில் நின்று பேசுகின்றது. இது கூத்தரங்கின் பலம், பலவீனம் என்பவற்றை அறிந்து அதில் தொடர்ச்சியாக தொழிற்பட்டு வருகின்றது. கூத்து மீளுருவாக்கம் பற்றிய ஆய்வு தனியாக ஆராயப்பட, பேசப்பட வேண்டியதாகும்.
கூத்து மீளுருவாக்க எண்ணக் கருவின் மூல பிதா கலாநிதி சி.ஜெயசங்கர் அவர்களும் தொடர்ந்தும் இக்காத்திரமான செயற்பாட்டில் தொழிற்பட்டு வருகின்ற து.கௌரீஸ்வரன், சு.சந்திரகுமார் ஆகியோர் இது பற்றிய தெளிவினை எமக்கு தர கூத்து மீளுருவாக்கம் பற்றிய புரிதலும் அதில் தொடர்ந்து செயற்பட வேண்டும் என்ற ஆர்வமும் எமக்கு ஏற்பட்டது.
மேலும் பாரம்பரிய அரங்குகள் கற்றல் கற்பித்தலுக்கான சிறந்த ஊடகங்களாகும். அதன் வெளி அனுபவங்கள் சிறந்த எதிர்காலத்தைக் கொடுக்க வல்லது. இப்பாரப்பரிய அரங்க விழா அதற்கான தளத்தினையிட்டுச் செல்கின்றது. இவ்வகையில் பாரம்பரிய அரங்கவிழாற்கான முகாமைத்துவ பணிகளை பல்வேறு வகையிலும் பொறுப்பேற்று ஒழுங்குப்படுத்தி செயற்பட்ட விரிவுரையாளர் சு.சந்திரகுமார் அவர்களின் பணி இங்கு பொருத்திப் பார்க்கத்தக்கது.  சமூகத்தை ஒழுங்கிணைத்தல் என்ற நோக்கம் கொண்ட இப்பாரம்பரிய அரங்க விழாவில் பாரம்பரிய கலைஞர்களை ஒருங்கிணைத்தல், அவர்களை அறிமுகப்படுத்தி அவர்களுக்கூடான தொடர்பை ஏற்படுத்தல், அவர்களின் நிபுணத்துவங்களை பற்றி மாணவர்களுக்கு எடுத்துரைத்தல், பாரம்பரிய அரங்க விழாவின் முக்கியத்துவத்தைப் பற்றிய புரிதலை ஏற்படுத்தல், நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தல் என்பவற்றைச் செய்ததோடு, களரி மற்றும் தோரண உருவாக்கத்திற்கு பொறுப்பாக நின்று தொழிற்பட்டமை என்பன இவரது முக்கிய செயற்பாடுகளாக அமைகின்றன. 'பாரம்பரிய தளத்தில் தொடர்ச்சியாக விருப்பத்தோடு, செயற்படுகின்றமையும் அதற்கூடாகப் பெற்ற கற்றல் - கற்பித்தல் அனுபவங்களுமே இதற்கான காரணம்' என்பது இங்கு கவனத்திற்குரியது. 
இத்தகைய முக்கியமான சிறப்பம்சங்களைத் தாங்கி பாரம்பரிய அரங்கத் திருவிழா (2015) அமைந்தது. பாரம்பரிய அரங்கத் திருவிழா வெற்றிகரமாகக் கொண்டாடப்பட்டது என ஒற்றை வார்த்தையில் கூறிவிடலாம். ஆனால் அவ்வெற்றிக்காக எதிர்நோக்கிய சவால்களும் பிரச்சினைகளும் இங்கு முக்கியம். இது தனியான ஆய்விற்குரியது. எனவே இவ்விழாவின் ஆலோசகரும் வழிகாட்டுணருமான கலாநிதி சி.ஜெயசங்கர் அவர்களுக்கும் தலைமை வகித்த கலாநிதி வ.இன்பமோகன் அவர்களுக்கும் மற்றும் பல்வேறு வழிகளிலும் நின்று செயற்பட்ட நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் விரிவுரையாளர் சு.சந்திரகுமார் அவர்களுக்கும் பல உதவிகளை செய்த விரிவுரையாளர் த.விவேகானந்தராசா அவர்களுக்கும் மற்றும் அரங்க ஆர்வலர்களான ராஜதிலகன், தனேஷவரன் ஆகியோருக்கும் அண்ணாவிமார்களான ப.கதிர்காமநாதன், சீ.அலெக்சாண்டர் ஏனைய உதவி விரிவுரையாளர்களுக்கும் மாணவர்களுக்கும் நண்பர்களுக்கும் நன்றிகளும் பாராட்டுக்களும் உரித்துடையன. மேலும் இப்பாரம்பரிய அரங்க விழாவிற்கு பக்க பலமாய் இருந்து ஆதரவளித்த மக்களுக்கும் மாமாங்க கோயில் நிர்வாகத்திற்கும் எமது நுண்கலைத்துறை சார்ந்து நன்றிகள்.

Foe;ijNty; Qhdts;sp

tpLif tUlk;

Ez;fiyj;Jiw
fpof;Fg;gy;fiyf;fofk