கிழக்குப் பல்கலைக்கழக நுண்கலைத்துறையினரின் ஏற்பாட்டில் 5 வது முறையாக மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலய முன்றலில் பாரம்பரிய அரங்க விழா இன்று மாலை 5 மணியளவில் கிழக்குப் பல்கலைக்கழக நுண்கலைத்துறையின் தலைவர் கலாநிதி வ. இன்பமோகன் அவர்களின் தலைமையில் ஆரம்பமானது.ஆரம்ப நிகழ்வாக அதிதிகளை மலர்மாலை அணிவித்து வட்டக்களரியினுள் வரவழைத்தன் பின்னர் மங்கள விளக்கேற்றலுடன் இந்நிகழ்வு ஆரம்பமானது.
இப்பாரம்பரிய அரங்க விழாவில் கிழக்குப் பல்கலைக்கழக கலை கலாசார பீட பீடாதிபதி கலாநிதி க. இராஜேந்திரம், சு. வி. அ. க. நிறுவக பதில் பணிப்பாளர் பேராசிரியர் அம்மன்கிளி முருகதாஸ், மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் திரு. M. உதயகுமார், மாமாங்கர் ஆலய வண்ணக்கர் திரு. ம. அரசரெட்ணம் போன்றோர் அதிதிகளாகப் பங்குபற்றினர்.
அத்தோடு அண்ணாவிமார்கள் கூத்துக்கலைஞர்கள், விரிவுரையாளர்கள், மாணவர்கள் ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் போன்றோர்கள் பங்குபற்றினர்.
கிழக்குப் பல்கலைக்கழக நுண்கலைத்துறையின் முதுநிலை விரிவுரையாளர் கலாநிதி சி. ஜெயசங்கர் அவர்கள் பாரம்பரிய அரங்க விழா பற்றிய அறிமுகரையினையினை சிறப்புற வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து கி. ப நுண்கலைத்துறை தலைவர். கலாநிதி வ. இன்பமோகன் அவர்களின் தலைமையுரை இடம்பெற்றன. அடுத்து கி.ப நுண்கலைத்துறை விரிவுரையாளர் துஸ்யந்தி அவர்கள் தனது முதுகலைமானிப்பட்ட ஆய்வுச் செயற்பாட்டின் ஒரு பகுதியாக மட்ஃ கல்லடி வேலூர் சக்தி வித்தியாலய மாணவர்களின் பங்கெடுப்பில் முன்னெப்பில் வசந்தன் கூத்து ஆற்றுகை நிகழ்த்தப்பட்டது.
அத்தோடு அதிதிகளின் உரைகள் இடம்பெற்றன. அதிதிகள் தங்கள் உரைகளின் போது இத்தகைய பாராம்பரிய விழாக்களின் சமகால முக்கியத்துவம் குறித்து தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொண்டதோடு விழாவினை நடாத்தும் நுண்கலைத்துறையிரையும் பாராட்டின.
அதனைத் தொடர்ந்து சு. வி. அ. க. நிறுவகத்தின் இசைத்துறை விரிவுரையாளர் திரு.வே. சிறிதரன் மற்றும் இசைத்துறை மாணவர்கள் இணைந்து வழங்கிய வாத்திய இசை முழக்கம் இடம்பெற்றன.
அதனைத் தொடர்ந்து பாரம்பரிய அரங்க விழாவின் ஓர் பகுதியாகவிருந்த பாரம்பரிய வாத்தியங்களின் கண்காட்சி கூடம் கி.ப கலைகலாசார பீட பீடாதிபதி கலாநிதி க. இராஜேந்திரம் அவர்களினால் திறந்து வைக்கப்பட்டதோடு அதிதிகள் மற்றும் ஆர்வர்களினால் பார்வையிட்டு கலந்துரையாடினர்.
தொடர்ந்து இடம்பெற்ற நுண்கலைத்துறை விரிவுரையாளர் திரு சு. சந்திரகுமார் அவர்களின் நன்றியுரைடன் பாரம்பரிய அரங்க விழாவின் 2015இன் தொடக்க நிகழ்வுகள் இனிவாக இடம்பெற்றது.
ச. தனேஸ்வரன்





























