வாக்காளர்களுக்கு விழிப்புணர்வூட்டும் மகளிர் அமைதிப் பேரணி

( சிவம் ) புதிய அரசியில் கலாசாரத்தை உருவாக்குவதற்கு அணிதிரள்வோம் எனும் தலைப்பில் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வூட்டும் மகளிர் அமைதிப் பேரணி இன்று திங்கட்கிழமை (10) மட்டக்களப்பு காந்திப் பூங்கா எதிரில் நடபெற்றது.

மட்டக்களப்பு வாழ் தமிழ் முஸ்லிம் பெண்கள் இணைந்து இவ்விழிப்புணர்வு வேலைத் திட்டத்தை ஏற்பாடு செய்திருந்தனர்.

பாலியல் வன்புணர்வு பாலியல் துஸ்பிரயோகத்திற்கு எதிராக வாக்களியுங்கள்,  பெண் உரிமைகளை மதித்து நடக்கும் வேட்பாளருக்கு வாக்களியுங்கள், தனது அரசியல் லாபத்திற்காக கட்சி மாறாத வேட்பாளருக்கு வாக்களியுங்கள், காணாமல் போகச் செய்தல், படுகொலைகள், அச்சுறுத்தல், ஆட்கடத்தல் செய்யாத வேட்பாளருக்கு வாக்களியுங்கள் போன்ற வாசகங்களை தாங்கிய பதாதைகளை ஏந்தியிருந்தனர்.

இலங்கையின் அன்னையரும் புதல்வியரும் எனும் அமைப்பினால் பயங்கரவாதத்திற்கும், ஊழல்களுக்கும் இடமளிக்காத, பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் ஜனநாயக ஆட்சிக்கு எமது வாக்கு எனும் தலைப்பில் அச்சிடப்பட்ட துண்டுப்பிரசுரங்கள் வீதிகளில் பயணித்தோர்களுக்கு வழங்கப்பட்டன.