நுண்கலைத்துறையினர் நடாத்தும் பாரம்பரிய அரங்க விழாவில் முதன் நாள் இரவு நிகழ்வில் (08.08.2015) அலங்காரரூபன் தென்மோடிக் கூத்து சிறப்பாக அலங்காரம் செய்யப்பட்ட களரியில் நடைபெற்றது. இக்கூத்து நுண்கலைத்துறையினரால் தயாரிக்கப்பட்டது. இதன் பொறுப்பாசிரியராக விரிவுரையாளர் சு.சந்திரகுமார் செயற்பட்டார். இது சமகாலத்திற்குப் பொருத்தமான கதையம்சத்தைக் கொண்டது. இக்கூத்து மிக அழகாகவும் காத்திரமாகவும் அமைந்திருந்தது. இக்களரியேற்றத்தின்போது அரங்கியல் சார் பல விடயங்கள் பிரமாண்டமாக வெளிப்பட்டன.
நுண்கலைத்துறையின் மாணவர்கள் விரிவுரையாளர்கள் தமது திறன் ஆற்றல் நிபுணத்துவங்களை வெளிப்படுத்தி ஆடினர். கூத்தரங்கு அருகிவிட்டது அதனைப் பேணவேண்டும் எனும் பொருத்தமற்ற கற்பிதங்களை அதன் துறைசார் புலமையாளர்கள் கூறி கட்டமைத்து வரும் இச்சூழலில் இவ்வாறான செயற்பாடு அதனை கேள்வி கேட்பதாகவும் அமைகின்றது. தமிழர் பண்பாட்டை பிரதிநிதித்துவப்படுத்தும் கூத்தரங்கானது மக்களை ஒன்றிணைத்து கொண்டாடவைக்கவல்லது. சமஸ்கிருதமயமாக்கல் மற்றும் உலகமயமாக்கல் ஆகியவற்றின் ஆதிக்கத்தாலும்; அதிதீவிர முன்னெடுப்பாலும் அல்லலுறும் மனிதரை வாழ வழிப்படுத்தும் ஊடகமாக பாரம்பரிய நிகழ்வுகள் விளங்குகின்றன. இதன் வெளிப்பாட்டின் பலாபலன்களை அலங்காரரூபன் கூத்து களரியேற்ற நிகழ்வில் காணமுடிந்தது.
நாடகமும் அரங்கியலும் கற்றும் - கற்பிக்கும் பல்கலைக்கழக, பாடசாலை மாணவர்கள், விரிவுரையாளர்கள், ஆசிரியர்கள் ஆகியோரோடு சிறுவர்கள், பெண்கள், இளைஞர்கள், முதியவர்கள், யுவதிகள் எனப் பலரும் ஒன்றிணைந்து கூத்தைப் பார்த்து மகிழ்ந்து இன்புற்று அனுபவித்தமை வெளிப்பட்டது. சிலர் பழைய ஞாபகங்களை மீட்டுப்பார்த்தனர், சிலர் நடந்த கூத்துப் பற்றி பேசிக் கொண்டிருந்தனர். சிலர் ஆடலையும் பாடலையும், கதையின் விபரிப்பையும் பிறருக்கு ஞாபகப்படுத்திக் கொண்டிருந்தனர்.
சிறுவர்களும் பெரியோரும் கூடி இருந்து பார்த்து மகிழ்ந்ததோடு, தமது கையடக்கத் தொலைபேசியில் ஒலி ஒளிப் பதிவுகளையும் மேற்கொண்டனர். கூத்தாடிய நுண்கலைத்துறை மாணவர்களின் பெற்றோரும் அங்கு பங்குகொண்டிருந்தனர். அவர்கள் தமது பிள்ளைகளின் ஆட்டம், பாட்டு ஆகியவற்றின் திறன்களை மெச்சியதோடு, அதனைப் பார்த்து மகிழ்ந்து கொண்டிருந்தனர். நுண்கலைத்துறையின் முதுநிலை விரிவுரையாளர் கலாநிதி சி.ஜெயசங்கரும், கூத்து மீளுருவாக்கச் செயற்பாட்டில் உறுதுணையாக இருந்தவருமான சிவநாயகம் அவர்களும், விரிவுரையாளர் விவேகானந்தராசா, உதவி விரிவுரையாளர் திருச்செந்தூரன் ஆகியோரும் கூத்தர்களுடன் இருந்து உச்சாகமளித்தனர்.
கூத்தர்களின் ஆற்றுகை வெளிப்பாடு பார்ப்போரை கூத்தினுள் உள் நுழைய வைத்தது. கூத்தின் கதைக்கேற்ப வரும் சம்பவங்கள் சூழமைவுகள் ஆகியவற்றில் வரும் பாடல்கள், தருக்கள், விருத்தம், கொச்சகம், கொச்சகத் தரு, வசனம், தாழிசை, உலா ஆகியவற்றில் நடிப்பை வெளிப்படுத்திச் செய்து காட்டினர். ஆடல்களினுடனான நடிப்பு அவர்களின் முகபாவங்களில் வெளிப்பட்டன. அலங்காரரூபன், செகதனையாளி அரசன், அதிவீரசூரன் அரசன், அழகவல்லி, விறகுத்தலையன், செட்டி, அலங்காரரூபி, கள்ளன், தூதுவர்கள், சேனாதிபதி, மந்திரி ஆகிய கூத்துக்களைத் தாங்கி ஆடியோர் அக்கூத்தின் (பாத்திரத்தின்) வார்ப்பிற்கு ஏற்ப உணர்வு வெளிப்பாட்டினை நிகழ்த்திக் காட்டினர்.
இக்கூத்தின் அண்ணாவியாராக வே.தம்பிமுத்து அவர்களும் சபையோராக கு.பிரபாகரன், சி.கேதீஸ்வரன், ப.கதிர்காமநாதன் அண்ணாவியார், சீ.அலெக்ஸ்சாண்டர் அண்ணாவியார் ஆகியோரும் செயற்பட்டனர்.
உடுப்புக் கட்டுவதற்கு கூத்தாடும் மாணவ மணவிகள் தங்களுக்குத் தாங்களே கட்டிப் பழகிக் கொண்டதோடு, அண்ணாவிமாரான கதிர்காமநாதன், அலெக்ஸ்சாண்டார், கூத்தர் முத்துலிங்கம் ஆகியோரும் செயற்பட்டனர். முக ஒப்பனைகளை ஓவியர்களான திரு சு.நிர்மலவாசன், ஈ.குலராஜ் அவர்களும் பல்கலைக்கழக மாணவர்களும், ப.ராஜதிலகன் அவர்களும் மேற்கொண்டனர். களரி முகாமைத்துவத்தினை நுண்கலைத்துறை மாணவர்களான வார்ணன், கங்கைகோபாலன், சசி ஆகியோரும் சிறப்புற முன்னெடுத்தனர். இக்கூத்தின் முன்னீடுகாரர் பொறுப்பை விரிவுரையாளர் சு.சந்திரகுமார் முன்னெடுத்தார்.
அதன் ஏனைய நிர்வாகிகள் நுண்கலைத்துறையின் சிறப்புக் கற்கை நெறி மாணவர்கள் ஆவர். கலாநிதி சி.ஜெயசங்கர் இதற்கு ஆலோசனைகளைக்கூறி வழிப்படுத்தினார். மேலும் பல வழிகளிலும் உதவிபுரிந்தவர் நுண்கலைத்துறையின் தலைவர் கலாநிதி வ.இன்பமோகன் ஆவார்.
திரு.சு.சந்திரகுமார்,விரிவுரையாளர்,நுண்கலைத்துறை, கிழக்குப்பல்கலைக்கழகம்.
திரு.சு.சந்திரகுமார்,விரிவுரையாளர்,நுண்கலைத்துறை, கிழக்குப்பல்கலைக்கழகம்.




















