சுகாதார அமைச்சு அதிகாரிகள் குழு மட்டக்களப்புக்கு நேற்று 23ம் திகதி விஜயம் செய்து மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தின் கீழ் இயங்கும் ஆரோக்கிய நட்பு நிலையம் (Health Friendly Center - STD CLINIC) மற்றும் மார்புநோய் கிளினிக்கின் (CHEST CLINIC) செயற்பாடுகளையும் பார்வையிட்டனர்.
இதனைத் தொடர்ந்து, மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் நடைபெற்ற கலந்துரையாடலின்போது, ஆரோக்கிய நட்பு நிலையத்தினதும் மற்றும் இருதய கிளினிக் பிரிவினதும் குறைநிறைகளையும் இவர்கள் கேட்டறிந்துகொண்டனர்.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்திய கலாநிதி பி.ஜி.மஹிபால தலைமையிலான குழுவினருடனான சந்திப்பில் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் எஸ்.முருகானந்தம், மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் எஸ்.சதுர்முகம் உள்ளிட்ட சுகாதார அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
ஆரோக்கிய நட்பு நிலையத்தை பார்வையிட்ட பணிப்பாளர் நாயகம் வைத்திய கலாநிதி பி.ஜி.மஹிபால, அங்கு அவர்களின் செயற்பாடுகள் சிறந்தமுறையில் இடம்பெற்றுவருவதாக அந் நிலையத்தின் வைத்தியர் அனுஷா சிறிசங்கர் மற்றும் பொது சுகாதார பரிசோதகர் எம்.தயாளன் உள்ளிட்டோருக்கு பாராட்டு தெரிவித்தார்.

















