ஆலையடிவேம்பில் இடம்பெற்ற போதைப்பொருள் பாவனைகளுக்கெதிராக விழிப்புணர்வு கருத்தரங்கு

தேசிய போதைப்பொருள் தடுப்பு மாதத்தினையொட்டி ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.ஜெகதீசனின் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மாபெரும் விழிப்புணர்வு கருத்தரங்கொன்று இன்று (13) காலை ஆலையடிவேம்பு பிரதேச செயலகக் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

கல்முனைப் பிராந்திய மதுவரித் திணைக்கள உத்தியோகத்தர்களும், அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய அதிகாரிகளும் கலந்துகொண்ட இக்கருத்தரங்கில் ஆலையடிவேம்பு பிரதேசத்திலுள்ள கிராமமட்ட அபிவிருத்திக் குழு உறுப்பினர்கள், மாதர் கிராம அபிவிருத்திச் சங்கப் பிரதிநிதிகள், பொதுமக்கள் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர்.

பிரதேச செயலாளரின் தலைமையுரையைத் அடுத்து குறித்த நிகழ்வுக்கு வளவாளராக வருகை தந்திருந்த ஆலையடிவேம்பு சுகாதார வைத்திய அதிகாரி ஏ.எம்.முனவ்வர் சிறப்பானமுறையில் இக்கருத்தரங்கைத் தொடர்ந்து நடாத்தியிருந்தார்.

மல்டிமீடியா தொழில்நுட்ப உதவியுடன் விளக்கப்படங்கள் மற்றும் விரிவுரைகள் மூலம் நடாத்தப்பட்ட இக்கருத்தரங்கில் பேசிய அவர், சரியாகத் திட்டமிடப்பட்டதொரு குடும்பப் பொறிமுறை மூலமாகவே சமுகத்தில் போதைப்பொருட்களின் பாவனையை முடிவுக்குக் கொண்டுவரலாம் எனக் குறிப்பிட்டதுடன், தற்போதைய காலகட்டத்தில் இளைஞர் சமுதாயத்தை இலக்குவைத்து மேற்கொள்ளப்படும் சட்டவிரோத போதைப்பொருள் விற்பனைகளைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள்மீது அதிக கவனம் செலுத்தப்படவேண்டியதன் அவசியம் குறித்தும் தனது கருத்துக்களைத் தெரிவித்திருந்தார்.