கூத்தரங்கைக் கற்றல்

பராம்பரிய சூழலில் பயிலப்பட்டுவரும் கூத்துக்களில் அரங்கியற் கூறுகளுடனும் அழகியல் அம்சங்களுடனும் பண்பாட்டு பரிமாணங்களுடனும் நெருங்கிய பரீட்சயத்தினை ஏற்படுத்திக் கொள்ளும்பொழுதே அவற்றுடனான தொடர்பாடல் அறிவு, உணர்வு ஆகியவை உணர்ச்சித்தளங்களில் நிகழத்தொடங்குகிறது. இவ்வாறான அறிவுபூர்வமானதும் உணர்வு பூர்வமானதுமான தொடர்பாடல் நிகழத்தொடங்கும்பொழுதே அதன் உள்ளிருந்து புரிதலுக்கான சாத்தியப்பாடுகள் ஆரம்பிக்கின்றன. ஆயினும் நவீன அறிவியற் பின்புலமும் அதன் பகுதியான அரங்க அறிவியற் பின்புலமும் இதனை அடைவதற்கான வழிமுறைகளை எந்த அளவிற்கு வழங்குகின்றன என்பது கேள்விக்குரியதாகும்.    கூத்துக்களைப் பேணுதல் என்பது அடிப்படையில் அதன் பயில்வுடன் சம்பந்தப்பட்டது. அது அதனைப் பயின்றுவரும் மக்களுடனும் மக்களது வாழ்வியலுடனும் தொடர்புடையது. அதனை ஆடல், பாடல் ஊடான வெறும் அளிக்கையாக மட்டும் அணுகுவது பொருத்தமற்ற மனோபாவமாகும். கூத்து சார்ந்து நவீன அரங்கச்சூழல் இந்தப் பார்வைத் தடைகளைத் தாண்டிவர முடியாததாகவே தொடர்ந்தும் இயங்கி வருகிறது. கூத்தரங்கை மேற்கத்தைய அரங்கப் பார்வையோடு பார்ப்பதிலிருந்து விடுபட்டு அதை அதற்குரிய இயல்பிலும் முழுமையிலும் காணமுற்படும்போது சமூக இயக்கத்திற்கான சாதனமாகக் கூத்தரங்கின் இருப்பைப் புரிந்துகொள்ளமுடியும்.  

ஈழக்கூத்துக்கள் சமுதாயத்தன்மை வாய்ந்ததாக இருப்பதன் காரணமாக இதன் தொடர்ச்சியான ஒத்திகைக் காலங்கள் ஒரு அரங்கச் செயற்பாட்டு முறைமையாகி திறந்த நிலையிலான மாற்றுக்கல்விச் சூழலாகவும் விழாக்கொண்டாட்டமாகவும் அமைந்து மகிழ்வூட்டலுக்கும் அறிவூட்டலுக்குமான களமாக அமைகிறது. இதுவும் நவீன கற்கை முறைமைகளின் உருவாக்கங்களுக்கான களங்களாகக் காணப்படுகின்றன. எனினும் அரங்கக் கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகளில் இத்தகைய விடயங்கள் கணக்கிலெடுக்கப்படுவதில்லை அல்லது கருத்திலெடுக்கப்பட்டுவிடக்கூடாது என்பதில் கவனமெடுப்பதாக இருந்துவருகின்றது.

கூத்து தன்னளவில் முழுமையானதும் முக்கியத்துவம் உடையதுமான அரங்கு என்ற அறிதலுக்கும், கூத்தர்கள் ஆற்றல்கள்மிக்க கலை ஆளுமைகள் என்ற புரிதல்களுக்கும் இடமற்றதாகவே கல்வித்திட்டங்களும் நடைமுறைகளும் காணப்படுகின்றன. கூத்தைச் செயன்முறையாகப் பயிற்றுவிக்கும் பயில்வுகளும் மிகவும் மேலோட்டமானதாகவே காணப்படுகின்றன. சில ஆட்டங்களை, அடவுகளை, பாடல்களை கூத்துருவாக்கத்துக்கு உரியவையாக அல்லாமல் அதற்கு வெளியே தனியாகப் பயிலுவனவாகவே காணப்படுகின்றன. கூத்தரங்கு தனித்துவமானது, முழுமையானது என்ற புரிதலுக்கு இடமற்றதாகவே கூத்துப்பற்றிய கற்கைகளும் பயில்வுகளும் நிகழ்ந்தேறி வருகின்றன.

நாடகமும் அரங்கியலும் பாடப்பரப்பில் கூத்தைக் கற்பிப்பவர்கள் மிகப்பெரும்பாலும் கூத்துப் பயில்முறையில் அனுபவம் அற்றவர்களாகவும் கூத்துப் பயில்முறைச் சூழலினை அறியாதவர்களாகவும் இருப்பதே யதார்த்தமாக இருந்துவருகிறது.

இந்நிலையில் கூத்துப்பற்றிய கற்றலில் அதன் பயின்முறைச்சூழலுடன் இணைந்து கற்பதற்கான சூழ்நிலைகளை உருவாக்குவதில் காணப்படுகின்ற இடைவெளிகள், தடைகள், தொடர்பின்மைகளின் காரணங்கள் அதன் பின்னின்றியக்கும் அதிகார அரசியல் நிலவரங்கள் என்பனவும் ஆராய்தலுக்குரியவையாகின்றன.
போட்டிப்பரீட்சையை மையப்படுத்தியதாய், காலனிய கல்விமுறை தகவமைத்த நோக்கு நிலை, படித்தவர் - பாமரர் என்ற மனப்பாங்கு, செய்தலினூடாகக் கற்றலில் பரிச்சயமின்மை போன்றவை மாணவர் தரப்பிலும், கூத்துக்கலைஞர்களுடன் இணைந்து இயங்குவதில் காணப்படுகின்ற ஆளுமைச்சிக்கல்கள் ஆசிரியர் தரப்பிலும் காணப்படுகின்ற காரணங்களாக இருக்கின்றன.

கூத்தரங்கின் ஆக்கபூர்வத்தன்மை பற்றிய எடுத்துரைப்பு மாணவர் மத்தியில் நிகழ்த்தப்படாமையின் விளைவாகவும் மேற்படி நிலைமையைப் பார்க்கமுடிகின்றது. 

      பாரம்பரியக் கலைவடிவங்களை கற்கைக்குரிய பொருளாக பல்கலைக்கழக மற்றும் பாடசாலைக் கல்விச் சூழலுக்குள் கொண்டுவந்ததன் அடிப்படையான நோக்கும் அதற்கான முன்னெடுப்புகளும் முக்கியமானவை. ஈழத்துத் தமிழ்ச்சூழலில் 80களில் நிகழப்பெற்ற இச்செயற்பாட்டிற்கு 60களில் கூத்தை அடிப்படையாகக் கொண்டு முன்னெடுக்கப்பட்டதாக அறியப்படும் கலைச்செயற்பாடுகளும் உந்துதலைக் கொடுத்துள்ளன. பேராசிரியர் சு.வித்தியானந்தனது பணி பாரம்பரியக் கூத்தரங்கின்  சமூக முக்கியத்துவத்தை நகர்த்தவர்கள் மத்தியிலும் கிராமத்தவர் மத்தியிலும் உணர்த்துவதாக இருந்தது. நகரப் பார்வையாளர்களைக் கருத்திற்கொண்டு கூத்தை படச்சட்ட மேடைக்குரியதாக தகவமைத்து நிகழ்த்துகைகளை பல்கலைக்கழகச் சூழலிலும் நகரங்களிலும் நடாத்திய பேராசிரியர் சு. வித்தியானந்தன் அவர்கள் மறுபுறம், கிராமங்கள் தோறும் சென்று கூத்தர்களைச் சந்தித்ததும் ஊக்குவித்ததும் அண்ணாவியார் மாநாடுகளை நடாத்தியமை, கூத்துப்பனுவல்களை பதிப்பித்தமை என்பன இங்கு நினைவிற்கொள்ளத்தக்கவை.

எனினும் அவருக்குப்பின் அத்தகைய பணி உரியமுறையில் தொடரப்படாமையின் விளைவுகளை அரங்க கல்விச்சூழலையும் வரலாற்றையும் மீட்டிப்பார்க்கையில் புலனாகின்றது. இத்தனை ஆண்டுகளுக்குப் பின்பு இன்றும் கூத்தரங்கை அதன் அரங்கவியல், சமூகவியல் தார்ப்பரியங்களுடன் கற்பதில், கற்பிப்பதில் நிலவும் சிக்கல்கள், முன்னெடுப்புகளுக்குப் போடப்படும் முட்டுக்கட்டைகள் மேலும் இதனைத் தெளிவாக்குகின்றன.

கூத்தரங்கின் நிகழ்கால சமூகத்தேவை பற்றிய விவாதம், கூத்தை நிகழ்காலத்திற்கு உரியதாக்கும் முறைமை பற்றிய உரையாடல்கள், முன்னெடுப்புக்கள் எனக் கூத்தரை மையப்படுத்திய செயற்பாடுகளின் இன்மை கூத்தின் ஆக்க பூர்வமான முன்னெடுப்புக்களின் அவசியத்தை உணராமல் செய்துள்ளது என்பது இன்று பரவலாக உணரப்படுகின்றது.

கூத்தரங்கின் இயல்புச்சூழல் தனித்துவமும் முக்கியத்துவமுடையதாக இருக்க, முழுக்க முழுக்க மக்களாதரவில் இருந்து வரும் கலையாகக் கூத்து இருந்து வருகின்ற பொழுதும் “செம்மையற்றது”, “அருகிவருகிறது” என்று தொடரும் கதையாடல்களின் அரசியலும் இங்கு ஆராய்ச்சிக்குரியது.

கூத்து அருகிவருகிறது, அது பேணப்படவேண்டும் என்று இயங்குகிற நகர்சார் சக்திகள் கூத்தை சமுதாயமயப்பட்ட இயக்கத்தின் மூலம் ஆற்றுகை நிலையில் வைத்திருப்பதன் அர்த்தப்பாட்டை உணராமல் இருப்பது, அல்லது உணர்ந்தும் நடைமுறைப்படுத்துவதற்கு மாற்றாக பேணுதல் எனும் பெயரில் ஆவணக்காப்பகங்களுக்கான, கண்காட்சிகளுக்கான உதிரிகளாக கூத்தை அணுகுவதும், நகர்சார் போட்டிகளுக்கான தகவமைப்புக்களை மேற்கொள்ளுவதுமான செயற்பாடுகளின்;   பொருத்தப்பாடின்மைகள் இங்கு உரையாடலுக்குரியவை. உண்மையில்  சமூகங்களின் உடமையாகவும் அவர்கள்தம் பயில்வில் இருப்பதுமான கூத்தை நிறுவனங்களதும் தனிநபர்களதும் உரிமமாக்கிக் கொள்வதும் பயில்வினைச் சிதைப்பதுமான முயற்சிகளே மேலோங்கிக் காணப்படுகின்றன. இத்தகைய நிலைமைகளையே அறிவாகவும் வரலாறாகவும் கல்விப்புலங்களில் பதியவைப்பதும் அவற்றை மேற்கொள்ளவே மாணவர்களை ஆற்றுப்படுத்துவதுமான நிலைமையும் தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றது.


நவீன அரங்கச்சூழலிலும், அரங்கு தொடர்பான கற்கைச் சூழலிலும் கூத்து மீதான அணுகல் என்பது  இரு வழிகளில் நிகழ்ந்ததாக தெரிகிறது. ஒன்று நவீன அரங்க, நாடக உருவாக்கங்களுக்கான கூறுகளாக கூத்தின் கூறுகளைப் பயன்படுத்திக் கொள்வது  மற்றையது தேசிய நாடக அரங்க உருவாக்கம் பற்றிய உரையாடல்களுக்கும் உருவாக்கங்களுக்கும் கூத்தை அடிப்படையாகக் கொள்வது. இவ்விரு நிலைகளிலும் பராம்பரியக் கூத்தரது இடம் என்ன? என்பதும் இங்கு மதிப்பீட்டுக்குரியது.

மறுபுறம் கூத்தைச் செம்மையாக்குவது, சாஸ்திரியமயப்படுத்துவது பற்றிய கருத்தும் பாமர மக்களது கைகளில் சிதைந்து சீரழிந்து கிடப்பதாகக் கருதப்படும் கூத்துக் கலையைப் பட்டை தீட்டிப் பாதுகாக்கப்படவேண்டியது என்ற அறிவுருவாக்கமும் நவீன அரங்கச் சூழலுக்குரியதாக இருந்துள்ளது. இதுவே பல்கலைக்கழக அறிவுருவாக்கமாகவும் இருந்து வந்திருக்கின்றது. நவீன அரங்கச் சூழலில் கூத்து என்பது ஆடலும் பாடலுமாகவும் பரத நாட்டியத்திற்கு மாற்றான கலையாகவுமே அணுகப்பட்டு வந்துள்ளது.

இப்பொதுநிலையில்தான் சமுதாய நிலைப்பட்டு கூத்தின் தொடர்ச்சியான முன்னெடுப்பிற்கான தேவைகளைப் பூர்த்திசெய்வதும், கூத்தின் விடயங்கள் சார்ந்து சமகாலப் பொருத்தப்பாடுகளைக் கவனத்திற்கொள்வதும் உரையாடலுக்கு உட்படுத்துவதும்  சமகாலத் தேவையாக இருக்கிறது. இன்றைய சூழலில் இதன் அவசியம் பல நிலைகளிலும் உணரப்படுகின்றது. இதற்கு அவசியமானதும், அடிப்படையானதுமாக அமைவது கூத்து எவ்வாறு இயங்குகிறது என்பதைப் புரிந்து கொள்வதாகும்.

இதனையே கூத்து மீளுருவாக்கம் என்கின்ற ஈழத்து தமிழரது அரங்கச் செயற்பாட்டாய்வும் முன்மொழிகின்றது. “கூத்தை சமுதாய நிறுவனமாகவும் அதன் அம்சங்களான பங்குபற்றல்தன்மை, செயல்மையம், நினைவாற்றல் என்பவை முதன்மைப்படுத்தப்பட்ட அரங்கச் செயற்பாடாகவும் பாரம்பரியமாகக் கட்டமைக்கப்பட்டு வந்த விழுமியங்களைச் சமகாலத்துக்குரிய வகையில் உரையாடலுக்குக் கொண்டு வந்து கூத்தர்களது சூழலில் கூத்தர்களையும் முதன்மைப்படுத்தி முன்னெடுக்கப்படும் கலைச் செயற்பாட்டு எத்தனந்தான் கூத்து மீளுருவாக்கம்” (ஜெயசங்கர்.சி,2011.ப.27.) 

அண்மைக்காலமாக பல்கலைக்கழகச் சூழலில் அரங்கத்துறை மாணவர்கள் பராம்பரியக் கூத்தர்களுடன் இணைந்து பல்கலைக்கழகச் சூழலில் கூத்தைக் கற்பது, ஆற்றுகைகளில் பங்கெடுப்பது, பல்கலைக்கழகங்களில் பராம்பரியக் கூத்தர்கள் பயிற்றுவிப்பாளர்களாகச் செயற்படுவது, மாணவர்கள் கூத்து நிகழும் ஊர்களுக்குச் சென்று ஆற்றுகைகளைப் பார்வையிடுவது, கூத்துச்சமூகம், மற்றும் ஆற்றுகைகளை மையப்படுத்தியதான பங்குகொள் ஆய்வுச் செயற்பாடுகளில் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் ஈடுபடுவது போன்ற செயற்பாடுகள் நிகழ்ந்து வருவது ஆரோக்கியமான விடயமாகின்றது.

கிழக்குப் பல்கலைக்கழக நுண்கலைத்துறை மற்றும் சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவக நடன நாடகத்துறையில் மாணவர்கள் மேற்படி செயற்பாடுகளில் ஈடுபட வழிப்படுத்தப்படுகிறார்கள்.

தமது கற்றலின் வெளிப்பாடாக கடந்த வருடங்களில் பல்கலைக்கழகச் சூழலிலும் நகரின் பல்வேறு சூழல்களிலும் ‘கண்டியரசன்’, ‘மழைபழம்’ (சிறுவர் கூத்து) முதலான கூத்தரங்க ஆற்றுகைகளை நிகழ்த்திய கிழக்குப் பல்கலைக்கழக நுண்கலைத்துறையினர், மாணவர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் இணைந்து ஆற்றுகையாளர்களாகப் பங்கெடுக்க பாரம்பரியக் கூத்தர்களின் நெறிப்படுத்தலில் உருவான ‘அலங்காரரூபன்’ தென்மோடிக் கூத்தினை கிழக்குப் பல்கலைக்கழக மைதானச்சூழலில் அமைக்கப்பட்ட வட்டக்களரியில் 21.07.2015 அன்று இரவு  நிகழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. நான்கு மணிநேரம் இடம் பெற்ற இக் கூத்தினை பல்கலைக்கழக கல்வி மற்றும் நிர்வாகம் சார் உத்தியோகத்தர்கள், மாணவர்கள், அவர்களது பெற்றோர்கள், நண்பர்கள், அயற்கிராமங்களைச் சேர்ந்த கூத்து ஆர்வலர்கள் எனப் பலரும் பார்த்து மகிழ்ந்து ஆற்றுகையாளர்களையும் பாராட்டியமை மகிழ்ச்சிக்குரியது.

சு. வி. அ. கற்கைகள் நிறுவகத்தின் நடன நாடகத்துறை இறுதியாண்டு மாணவர்கள் தமது பரீட்சையின் ஒரு பகுதியாய் அமைந்துள்ள ‘கூத்தைப் பேணுதல் மீளுருவாக்குதல்’ எனும் பாடநெறியின்பொருட்டு பராம்பரியக் கூத்தர்கள் மற்றும் விரிவுரையாளர்களது வழிப்படுத்தலில் நிறுவக திறந்த வெளிச்சூழலில் கூத்து அளிக்கைக்கான பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளார்கள். இது திறந்தநிலையில் மகிழ்வுடன் கூடிச் செயல்நிலையில் கற்கும் வாய்ப்பை மாணவர்களுக்கு வழங்கியுள்ளது. பாடநெறி தவிர்ந்த ஏனைய மாணவர்களும் இதில் ஆற்றுகையாளர்களாகவும், பார்ப்போராகவும் பங்கெடுக்கும் ஆரோக்கியமான சூழலாக இது வெளிப்படுகின்றது.

கூத்தைப் பேணுதல், கற்றல் என்பதன் பெயரில் கூத்துச்சார்ந்த பொருட்கள் சிலவற்றை காட்சிப்படுத்துவது, கூத்தர்களை தகவல் வழங்கிகளாக மட்டும் கொண்டு பிரச்சாரங்களையே அளவுக்கதிகமாக மேற்கொள்வது, கூத்தை ஓர் அரங்க நிகழ்வாக, அரங்க செயன்முறையாக அறிவதற்கு மாறாக கூத்தின் ஆடல், பாடல்களிலில் ஓரிரண்டை அரைகுறையாய்க் கற்று பரீட்சைக்காய் ஒப்புவிப்பது, ஆற்றுகைகளில் பயன்படுத்தி அவற்றை கூத்தாகவும் பறைசாற்றுவது போன்ற வழமையான செயற்பாடுகளுக்கு மாறாக கூத்தரங்கை அதன் முறைமையில் பயில முயற்சிப்பதென்பது ஆரோக்கியமானது. இது கூத்தரங்கைப் புரிந்துகொள்வதன் முதற்படிநிலையுமாகின்றது. இதில் ஈடுபடும்போது மேலதிகமாக அடுத்தநிலைகளில் என்னென்ன செய்யவேண்டும், எப்படி செய்வது, யார் செய்வது போன்றவை புரிய வாய்ப்பேற்படும்.

 எனவே இத்தகைய நிலைமைகள் ஊக்குவிக்கப்படுவதும் தொடர்ச்சியாகவும் பரவலாகவும் முன்னெடுக்கப்படுவதும் ஆக்கப+ர்வமான அரங்கச் செயற்பாடுகளை முன்னெடுக்க முயல்பவர்களதும் காத்திரமான மாணவ உருவாக்கங்களுக்காய் உழைப்பவர்களதும் கடமையும் பொறுப்புமாகின்றது.

த.விவேகானந்தராசா, விரிவுரையாளர், சு.வி.அ.க. நிறுவகம், கிழக்குப்பல்கலைக்கழகம்.