பொது மக்களாகிய நாமே இப்பொதுத் தேர்தலில் பிரதான பங்காளர்கள். இதனை நாம் அனைவரும் உணர்ந்துகொள்ள வேண்டும். அதிலிருந்து எம்மால் விலகி நிற்க முடியாது என்பதை புரிந்துகொள்ளவேண்டும்.
ஆகவே எமது பங்களிப்பை சரியாக செய்யவேண்டியது கட்டாயமாகின்றது. இந்த இடத்தில் எமது பங்களிப்பை எவ்வாறு செய்வது என்ற கேள்வியெழுவது சாதாரணமானதே
எமது எதிர்காலத்தை நிர்ணயம் செய்யப்போவது நாமே. எமக்குள்ள ஜனநாயக பலமான வாக்குகளே. உங்கள் வாக்குதான் உங்களது பிரதிநிதியை மத்திய அரசாங்கத்தைத் தீர்மானிக்கப் போகிறது.
எமது நாட்டில் வாக்குரிமை மிக முக்கியமானதொன்று. 18 வயதுக்கு மேற்பட்ட இலங்கைப் பிரஜையான, ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் முதலாம் திகதி ஒருவர் எந்த இடத்தில் சாதாரண வதிவாளராக இருக்கின்றாரோ அந்த இடத்தில் தனது வாக்கைப் பதிவு செய்து கொள்ளலாம். தேர்தல் ஒன்று வரும்போது அவர் வாக்களிப்பதன் மூலம் தான் அவரது உரிமை முழுமை பெறும். வாக்காளர் இடாப்பில் பெயர் பதிவு செய்யப்பட்டிருந்தும் தேர்தலில் வாக்களிக்காமல் இருந்தால், சந்தர்ப்பத்தை தவறவிட்ட ஒருவராக இவர் காணப்படுவார்.
எமது நாட்டின் அரசியல் அமைப்புச் சட்டத்தில் ஒரு பெரும் குறைபாடு உள்ளது. வாக்காளராகப் பதிவு செய்யப்படுவதும் அல்லது ஒருவருக்கு வாக்குரிமையைப் பெற்றுக்கொடுப்பதும் கட்டாயக் கடமையாக இருந்தாலும், அவ்வாறு வாக்குரிமையைப் பெற்றுள்ள ஒருவர் வாக்களிப்பது கட்டாயம் என்பது சட்டத்தில் இல்லை. இதனால், பெரும்பாலானவர்கள் வாக்களித்தாலும் ஒன்று, அளிக்காவிட்டாலும் ஒன்று, அது என்னுடைய முடிவு என இருந்து விடுகின்றார்கள்.
இதனால், இவர்கள் இலங்கை ஆட்சியில் பங்காளர்களாக ஆகவேண்டிய அரிய வாய்ப்பையும் இழந்து விடுகின்றனர்.
ஒவ்வொரு பிரஜையும் நிச்சயமாக தன் அடிப்படைக் கடமைகளில் ஒன்றான வாக்களிப்பதில் இருந்து தவற மாட்டான். ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை கிடைக்கும் சந்தர்ப்பத்தை சரியாகப் பயன்படுத்த வேண்டும். அதற்காக பொன்னான அறிவையும். நேரத்தையும் யாருக்கு வாக்கு அளிக்க வேண்டும் என்பதனை அலசி ஆராய பயன்படுத்தி நம் நாட்டிற்கு நல்ல தலைவர்களை தெரிவு செய்வதற்கு தங்கள் உரிமைகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
வாக்களிக்காவிட்டால் , விருப்பமில்லாத கட்சியையும் , விருப்பு வாக்கை அளிக்காவிடில் , விருப்பமில்லாத வேட்பாளரையும் தேர்ந்தெடுக்க காரணமாக அமையும்
காலையிலேயே வாக்களிப்பு சாவடிகளுக்கு சென்று ,தமக்கு விருப்பமான கட்சிக்கு வாக்களிப்பதுடன், விருப்பமான வேட்பாளரையும் தெரிவு செய்யவும்.
Battinews.com
சமூக சேவைப் பிரிவு













