உலகமயமாக்கலினாலும்
அதன் நிறுவன உற்பத்திப் பொருட்களினாலும்
அடிமையாக்கப்பட்டு நுகர்வுச் சமூகமாக இருந்து கொண்டிருக்கும்
ஆபத்தான சூழலாகவே இன்றைய நிலை காணப்படுகின்றது.
பல்தேசிய நிறுவனங்கள் ஊர் சார்ந்த சுய
உற்பத்திகளை தம்சார் ஆதிக்க அதிகாரிகளால்
கட்டுப்படுத்தி தமது நிறுவன உற்பத்திகளுக்குப்
பரிச்சயமாக்கி சொல்லொண்ணா நோய்களையும், மன உளைச்சல்களையும் ஏற்படுத்தி
வருகின்றன. மனிதரை மனதில் கொள்ளாது
பணத்தை நோக்கி அலைந்து, சேமித்ததை
வாழ்க்கையின் இறுதிக் கட்டத்தில் மருத்துவப்
பரிசோதனைக்கு கொடுத்து அழிப்பதாகவே அமைகின்றது. ஏன், யாருக்காக வாழ்கின்றோம்
எனத் தெரியாது, பல்வகைமை மாயைகளில் வீழ்ந்து அதுவே உலகம் என
திக்கித் திணறுகின்றோம். மீண்டும் மகிழ்வான வாழ்கையை நோக்கி நகரும்போது வாழமுடியாது
எமது ஆயுட்காலம் முடிந்து விடுகின்றது. வாழ்தல் மகிழ்விற்கே, கொண்டாடுதலுக்கே,
நிம்மதிக்கே அது கொலைக்கயிறாக உருவெடுப்பதுதான்
ஆபத்தானது. நவீன
அறிவும் அதன் ஆதிக்கமும் காலனிய
சிந்தனைகளின் ஒடுக்குதல்களும் எம்மவர்கள் சிலரால் உள்வாங்கப்பட்டு வழிப்படுத்துவதே
பெரும் ஆபத்தாக அமைகின்றன.
ஈழத்தமிழரின்
பாரம்பரிய கலைவடிவங்களில் குறிப்பிடத்தக்கது கரகமாகும். இது மட்டக்களப்பில் பல்வேறு
கிராமங்களிலும் வாழ்ந்து மனிதரை வாழவைக்கின்றது. அம்பிளாந்துறைக்
கிராமத்திலும் இதன் போக்கை சிறப்பாகக்
காணலாம். பல கலைகளின் வாழ்விடமான
அம்பிளாந்துறையின் கூத்து கலைஞர்களால் ஒழுங்கமைக்கப்பட்டு
இது நிகழ்த்தப்பட்டது. பாரம்பரிய கலைகளை நவீன அறிவின்
ஆதிக்கத்தினாலும் நவீன அரங்கின் பார்வையினாலும்
நோக்கி, பாரம்பரிய அரங்கின் உண்மைத் தன்மையை அறியவிடாது
பொருத்தமற்ற கற்பிதங்கள் கூறி, கட்டமைத்த சில
அரங்கப் புலமையாளர்களின் எண்ணத்தின் ஆபத்தை வெளிப்படுத்துவதாகவும் இவ்வாறான ஆற்றுகைகள்
அமைகின்றன. கரகம் கூத்தரங்கின் தொடர்
செயற்பாட்டின் வாழ்தலைப்போல் ஊர்களில் அதன் அண்ணாவிமாரால் முன்னெடுக்கப்படுவதாகும்.
தொடர்சியாக அதன் இயல்பான திறந்தவெளியில்
ஊர்மக்கள் இணைய பழகி சதங்கையணிவிழா
செய்து அரங்கேற்றுவதாகும். அவ்வாறு அம்பிளாந்துறையில் செய்து
இரண்டாம் களரியேற்றப்பட்டதே 10.08.2015 அன்று மாமாங்க பாரம்பரிய
அரங்க விழாவில் நிகழ்த்தப்பட்ட கரகமாகும்.
கரகத்தைப்
பழக்கியவர்கள் பேரின்பம், கார்த்தி, விநாயகம், விசிமன் ஆவர். இளம்
வயதுடைய சிறுவர்களால் இக்கரக ஆற்றுகை இடம்பெற்றது.
கோயிலில் திருவிழா பார்க்க வந்த பக்தர்களாலும்,
ஊர் மக்களாலும், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், மாணவர்களாலும் பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்களாலும்,
சிறுவர்கள், பெரியவர்கள், இளைஞர்கள், யுவதிகள் எனப் பலரால் பார்த்து
மகிழ்ந்து அனுபவிக்க வைத்த ஆற்றுகையாக இது
அமைந்தது. சிறுவர்களின் ஆற்றுகையைப் பார்த்து தம்மை மறந்துபோய் பார்வையாளர்கள்
பார்த்துக் கொண்டிருந்தனர். இந்த கரகத்தின் நிகழ்வை
தமது ஊரில் ஆடப்படும் கரகத்தோடு
ஒப்பிட்டுப் பார்த்தனர். நாடக அரங்க மாணவர்கள்
பாடப்புத்தகத்தில் சொல்லப்பட்டவற்றுள் ஒப்பிட்டும் அந்த ஆற்றுகையையும் இவ்வாற்றுகையும்
சரிபார்த்தனர். இளமையில் பார்த்த கரக ஆற்றுகைகளின்
முறைமை, ஆட்கள், சொந்தங்கள் எனப்பலரை
ஞாபகப்படுத்தி உரையாடிக் கொண்டிருந்தனர். கரகத்தைப் பார்க்காதவர்கள் அதனைக் பார்ப்பதற்கான சந்தர்ப்பமாக
அமைந்ததோடு, பார்த்தவர்கள் ஞாபகப்படுத்துவதற்குரிய இடமாகவும் அமைந்தது. கற்றல் கற்பித்தலையும் இதனுள்
நிறைவேற்றினர்.
கரகத்தில்
நிகழ்த்துகை மிகவும் காத்திரமாகவும் சிந்தனையைத்
தூண்டுவதாகவும் அமைந்தது. தொடக்கம், இடை, முடிவு என
முழு ஆற்றுகைகளின் ஓட்டத்தில் சிறப்புற அமைந்ததோடு ஆற்றுகைகளின் உள்ளிருக்கும் ஓட்டமும் சிறப்புற அமைந்தது. 'வள்ளியம்மன் கலியாணம்' எனும் கரகமே நிகழ்த்தப்பட்டது.
கரகத்தின் முழுப் பரிமாணமும் இதனுள்
நிறைந்திருந்தது. கதையை எடுத்துச் செல்லும்
முறைமை பாட்டு, ஆட்டம், நடிப்பு
என்பவற்றிக்கூடாக அமைந்தது. பாடலின் இனிமை அதில்வரும்
தாளம், அதற்கேற்ப வெளிப்பட்ட ஆட்டக் கோலங்கள் அற்புதமானது.
இதனைச் சிறுவர்கள் செய்து காட்டும் போது
அதன் தரம் இரட்டிப்பாக உயர்ந்திருந்தது.
கரகத்தின் வரையறைக்கேற்ப கதை நகர்த்தப்பட்டமை சிறப்பம்சமாகும்.
நிகழ்துகையினூடாக கதை கூறும் மரபு
(Story
telling through the performance) நிகழ்த்துகையில்
சிறுவர்கள் சிறப்பாகப் பழக்கப்பட்டிருந்தார்கள் என்பது தெரிந்தது. அரங்கியல்
தன்மையின் அமைப்பும் வெளிப்பாடும் அர்த்தபுஸ்டியுடன் வெளிப்பட்டது. ஆடல் பாடல் ஊடாகக்
கதையை நகர்த்தல், அதில் வரும் நடிப்பு,
பாத்திரவார்ப்பு அதற்கான ஆட்டத்துடனான நடிப்பு,
உடை ஒப்பனை, ஆடுகளத்தைப் பயன்படுத்தும்
முறைமை என்பன காத்திரமாக வெளிப்பட்டன.
அலங்காரமான களரியில் பார்த்தால்தான் அதன் பிரமாண்டம் விளங்கும்.
மாரி, செட்டி, கிழவன் தோழி
என வரும் பாத்திரங்கள் சமூகத்தில்
அப்பாத்திரங்களின் அசைவுகளுக்கேற்ப நடித்துக்காட்டப்பட்டன.
கரக
நிகழ்த்துகையில் சம்பவங்களை அழுத்தி ஆழமாக பாடல்,
ஆடல் மூலம் வெளிப்படுத்தியமை சிறப்பம்சமாகும்.
6 வயது தொடக்கம் 13 வயது வரையான சிறுவர்
சிறுமிகளே ஆண் பெண் பாத்திரங்களைத்
தாங்கி ஆடினர். முதலில் கரகத்துடன்
வந்து பாடலுக்கேற்ப செய்து காட்டப்பட்டது. செம்பைத்
தலையில் வைத்து ஆடுதல், சுழற்றி
ஆடுதல், முழங்காலில் நின்றாடுதல் என்பன நிகழ்த்தப்பட்டன. மாரியம்மனும்
மகன் காத்தவராயனும் சந்திக்கும்போது 'நன்ன நன்ன நான
நன்ன னனன்ன நான நன்ன,
நன்ன நானான நான நன்ன
னனன்ன நான நன்ன' எனும்
தாளக்கட்டுடனான மெட்டுக்குப் பாடி மத்தளம் அடிக்கப்படும்போது
தான் ஒரு பெண்ணைப் பார்த்தமை,
அவள் பற்றிய அழகு, அவளுடனான
விருப்பு என்பன விபரிக்கப்பட்டன. இந்த
விபரிப்புக்கேற்ப கூத்தர்கள் அபிநயித்தமை சம்பவத்தை மேலும் தெளிவுபடுத்தியது.
மாரியம்மனின் மகன் இடுப்பில் கை
குத்தி நிலத்தில் காலைப் பதித்து குதித்து
போய் வந்து திரும்பித் திரும்பி
ஆடுதல், தாய் தனது கருத்தை
வெளிப்படுத்த கையை அசைத்து தனது
விருப்பை வெளிப்படுத்துதல் என்பன ஆட்டத்துடனும் முகபாவத்துடனும்
அழகாக வெளிப்படுத்தினர்.
இவ்வாறே
செட்டி வேடம் தாங்கி வரும்
முருகனின் ஆட்டம் 20 நிமிடங்களுக்கு தொடர்ச்சியானது. வட்டக்களரியில் செட்டியின் ஆட்ட அசைவுடனான நடிப்பு
மேலும் பார்க்க உற்சாகமளித்தது. 'திந்தின்னா
தின்னா தினனா திந்தின்னா தின்னா...'
எனும் தாளத்திற்கு வலது காலை முன்னால்
வைக்கும் போது வலது கையை
முன்னாலும் நீளமாக நீட்டி ஆடுதல்,
அடுத்த தாள அடிக்கேற்ப ஆட்டத்தை
மாற்றுதல் என்பன பாட்டில் வரும்
சம்பவ வெளிப்படுத்தலுக்கேற்ப செய்து காட்டப்பட்டமை சுற்றியிருந்த
பார்ப்போரை உள்ளீர்த்துப் பங்குகொள்ளவைத்தது. தமது மன அழுத்தங்கள்
சஞ்சலங்களை மறந்து நிம்மதியாக அப்பொழுதை
அனுபவித்தமை வெளிப்பட்டது.
கிழவன்
வேடத்தில் முருகன் வந்து வள்ளியை
ஏமாற்றித் தான் யார் எனக்
காட்டும் சூழமைவும் காட்சி வெளிப்பாடும் அரங்கியல்
ஆற்றுகைத் தன்மையை ஆழப்படுத்தியது. தார்பாய்ச்சிக்கட்டி
(கொடுக்குக் கட்டி) தாடி சடாமுடியுடன்
கிழவன் வேடம் அமைந்திருந்தது. கிழவனுக்கு
சிறுமி ஒருவரே ஆடியிருந்தார். தாளத்தின்
ஒரே விதமான பாட்டுக்கேற்ப சிறுமி
களைக்காது தொடர் ஆட்டத்துடன் வந்த
சம்பவ விபரிப்புக்குரிய நடிப்பு பாரம்பரிய நிகழ்த்துகையின்
உயிர்ப்பின் ஆழத்தை பறைசாற்றியது. தாளத்திற்கு
ஏற்பவும், பாட்டுமெட்டுக்கேற்பவும், மத்தள வாசிப்பிற்கேற்பவும் காலைத்
தூக்கிவைத்து ஆடினர். அத்தோடு வயது
முதிர்ந்தவர் போன்ற பார்வை, கூன்விழுந்து
நடுநடுங்கி பொல்லூண்டி
அசைந்தாடியமை நடிப்பின் உணர்தலைக்காட்டியது. சம்பவத்தில் வரும் ஒவ்வொரு காட்சியும்
பாடல் மூலம் தாளலயத்துடன் சபையோரால்
பாடி மத்தளம் அடிக்கும் போது
அதற்கேற்ப பொல்லை ஊண்டி ஊண்டி
ஆடியமை சிறுவர்களின் ஆட்டநடிப்பை கரக ஆற்றுகையில் கொண்டுவர
முடியும் என்பதை நிரூபித்தது. அதைவிட
கிழவர் கீழேவிழுந்து ஒருபக்கம் சாய்ந்து முழங்கையை நிலத்தில் குத்தி தலையை தாங்கி
மறுகையால் கம்பைப்பிடித்து மேலுள்ள காலால் தாளத்திற்கும்
பாட்டிற்குமேற்ப முன்னாலும் பின்னாலும்
தூக்கிப்போட்டு ஆடுதல், அதற்கு தலையை
அசைத்தல் என்பன அற்புதமானவை. ஒரேநேரத்தில்
அவைதரப்பட்டது. மாரியம்மனை யானை வேடத்தில் வந்து
ஆடியவர் மறித்து மறித்து துரத்தி
ஆடுவது போன்று கொணர்ந்தமை சிறப்பானது.
அத்தோடு குறத்தியின் பாத்திரவார்க்கம் சிறப்பாக அமைந்தது. தமிழ்பாரம்பரிய ஆற்றுகைகளில் ஆடலும் பாடலும் பிரதானம்.
அதற்கு உயிர்கொடுப்பது மத்தளம், தாளம் முதலான வாத்தியங்கள்
ஆகும். இந்த பாடலுடனான ஆட்டக்கோலங்களிலே
சம்பவ விபரிப்பு, பாத்திரவார்ப்பின் தன்மை வெளிப்படும்.
இந்த
நடிப்புக்கோலம் திறந்தவெளியான வட்டக்களரிக்கேற்பவே அண்ணாவிமார் மற்றும் கூத்தரால் பழக்கப்படும்.
இது கரகத்தில் மலிந்து காணப்பட்டது. நவீன
நாடக கண்ணோட்டத்துடன் பாரம்பரிய நிகழ்த்துகைகளைப் பார்த்து அதில் நடிப்பில்லை; செம்மையில்லை
என்று எழுத்துக்களில் பரவலாக பொருத்தமற்ற முறையில்
கட்டமைப்போர் இவ்வாறான நிகழ்த்துகைகளைப் பார்க்காது விளிம்பில்
நின்று செயற்படுபவர்களாவர். பங்குகொண்டு சேர்ந்து பார்த்துப் பழகி அனுபவிக்காத புலமையாளர்களே
பாரம்பரிய நாடகம், அரங்குபற்றி பொருத்தமற்ற
கற்பிதங்களை முன்னிலைப்படுத்துபவர்களாவர்.
கரக
நிகழ்த்துகையின் ஆழமும், அதன் ஆடல்
பாடல்களின் உணர்வு வெளிப்பாடும் பொருத்தமான
உடை ஒப்பனையின் அழகும்
சிறந்ததொரு அழகியல் வெளிப்பாட்டைத் தந்தது.
சம்பவத்திற்குரிய பாட்டு மெட்டுகள், ஆட்டக்கோலங்கள்,
அதில் வரும் நடிப்புக்கள், உடை
ஒப்பனை என்பவை எமது முன்னோரின்
படைப்பாக்க வெளிப்பாட்டைக் காட்டியது.
பாரம்பரிய
நிகழ்த்துகையான கரகம் மாமாங்கப்பிள்ளையார் ஆலய
முன்றலில் அனைவரையும் முழு மனதுடன் பார்க்கக்
கூடியவாறு ஆற்றுகை செய்யப்பட்டது. அதில்
ஆடிய அம்பிளாந்துறை வைரவா கலைக்கழக சிறுமியருக்கும்
பழக்கிய அண்ணாவிமாருக்கும் அங்கு வந்த பெற்றோருக்கும்
நுண்கலைத்துறையினரின் நன்றிகள்.
திரு.சு.சந்திரகுமார்,
விரிவுரையாளர்,
நுண்கலைத்துறை,
கிழக்குப்பல்கலைக்கழகம்.













