தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ன செய்தது? என சிலர் கேட்கின்றனர். இதுவரையில் தமிழ் மக்களின் இருப்பிற்காகவும், உரிமைகளைப் பெற்றுக் கொள்வதற்காகவும் எத்தனை கைங்கரியங்களை தமிழரசுக் கட்சியோ, தமிழர் விடுதலைக் கூட்டணியோ, தமிழ்த் தேசியக் கூட்டமைப்போ செய்து வந்துள்ளது என்பதை இவர்கள் அறியமாட்டார்களா? இன்று தமிழிலே நீதிமன்றங்களில் வழக்காட முடிகிறதே, அரசகரும மொழிகளில் ஒன்றாக தமிழ் மொழி ஆக்கப்பட்டுள்ளதே இவற்றையெல்லாம் செய்தது யார்?. என பெரிய போரதீவு முனைத்தீவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளரான பொன். செல்வராசா கேள்வி எழுப்பினார்.
அவர் மேலும் பேசுகையில், 2010 ஆம் ஆண்டிலிருந்து எமது மக்களின் அபிலாசைகளை எழுத்து மூலமாக எழுதிக் கொடுத்து மகிந்த அரசாங்கத்துடன் பலசுற்றுப் பேச்சுவார்த்தைகளை நடத்தியிருந்தோம். ஆனால் அதனையெல்லாம் அந்த அரசாங்கம் கிழித்துப் போட்டது. அதன் பின்னர்தான் நாம் யோசித்தோம் உள்நாட்டில் எமக்கு ஒரு அரசியல் தீர்வு கிடையாது என்று, எனவேதான் நாம் சர்வதேசத்தை நாடி எமது பிச்சினையை தெளிவு படுத்தினோம். அதன்பயனாக அமெரிக்கா ஒரு தடவையல்ல 3 தடவைகள் ஐ.நாவிலே தமிழ் மக்களின் பிரச்சினையைத் தீர்க்கவேண்டுமென்ற பிரேரணையை முன்வைத்தது. இது எமக்கு கிடைத்த மாபெரும் வெற்றி இதனைச் செய்தவர்கள் யார்? இது பாலம் போடுவதைவிடவோ, கிறவல் றோட்டுப் போடுவதைவிடவோ மகத்தான விடயம் என்பது கேள்வி கேட்கும் சிலருக்கு புரியாத விடயம்.
நடைபெறவுள்ள தேர்தலின் முக்கியத்துவம் இம்முறை பெரிது. ஏனனில் விடப்பட்ட பேச்சுவார்த்தைகள், சர்வதேசத்தின் அறிக்கைகள் என்பன வருகின்ற நேரம் அந்த அறிக்கைகளை அமுலாக்கம் செய்கின்ற பொறுப்பு சனாதிபதியையே சாரும். இந்த சனாதிபதி இரு பிரதான கட்சிகளையும் சார்ந்து நிப்பதால் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அந்தக் கட்சியின் இணக்கப்பாட்டைப் பெற்று செய்யக்கூடிய திறமை இந்த சனாதிபதிக்குத்தன் உள்ளது. எனவே இது ஒரு நல்ல சந்தர்ப்பம். எந்த அரசாங்கம் வந்தாலும் ஒரு பெரும்பாண்மை அரசாங்கம் சிட்சயம் வரமுடியாது. ஆகவே 3 ஆம் தரப்பாகிய எங்களை அணுகவேண்டி நிலைமை அவர்களுக்கு ஏற்படும் என நம்புகின்றோம். எனவேதான் பேரம்பேசுகின்ற பலத்துடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பை பாராளுமன்றத்திற்கு அனுப்பவேண்டிய பொறுப்பு மக்களாகிய உங்களுக்கு உள்ளது. நீங்கள் அதைச் செய்வீர்கள் என்று நம்புகின்றோம்.
சென்ற தேர்தலில் நாங்கள் 14 உறுப்பினர்களைப் பெற்றோம். இம்முறை 15 இக்குமேல் பெறக்கூடிய நிலையை நீங்கள் ஏற்படுத்த வேண்டும். மட்டக்களப்பு மாவட்டத்தைப் பொறுத்தமட்டில் இதற்கு நீங்கள் தெரிந்தோ தெரியாமலோ, சொந்தமோ பந்தமோ என்று பார்த்து வாக்குகளை சிதறடிக்காமல் உங்கள் ஒட்டுமொத்த வாக்குகளையும் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு அளிக்கவேண்டும். இல்iயேல் 2 முஸ்லிம் உறுப்பினர்களும் 3 தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்ளும் என்ற வகையில்தான் வரமுடியும். எனவே வாக்குகளை சிதறடிக்காமல் உங்கள் ஒட்டுமொத்த வாக்குகளையும் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு அளித்தால் 4 உறுப்பினர்களை நாம் பெற்று எமது இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கான பேரம் பேசும் சக்தியை அதிகரித்துக் கொள்ளமுடியும். இது ஒரு நல்ல சந்தர்ப்பம் என்பதை தமிழ் மக்கள் புரிந்து செயற்படவேண்டும் என்றார்.












