காத்தான்குடி மற்றும் ஆரையம்பதி பிரதேசங்களில் தேர்தல் சட்டங்களை மீறும் வகையில் வேட்பாளர்களின் உருவப்படங்கள் தாங்கிய சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதாக பெப்ரல் அமைப்புக்கு முறைப்பாடு கிடைத்துள்ளதாக பெப்ரல் அமைப்பின் காத்தான்குடி மற்றும் ஆரையம்பதி பிரதேசங்களுக்கான இணைப்பாளர் எம்.ஐ.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.
தேர்தல் வன்முறைகள் தொடர்பில் அவரிடம் வினவிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
காத்தான்குடி மற்றும் ஆரையம்பதி பிரதேசங்களில் தேர்தல் சட்டங்களை மீறும் வகையில் வேட்பாளர்களின் உருவப்படங்கள் தாங்கிய சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதாக சிலர் எமது பெப்ரல் அமைப்பிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.
அதே போன்று இப்பிரதேசங்களில் வீடு வீடாக பிரசாரத்திற்கு செல்லும் வேட்பாளர்களின் ஆதரவாளர்கள் வீட்டு உரிமையாளர்களிடம் அனுமதி பெறாமல் வேட்பாளர்களின் தேர்தல் பிரசார சுவரொட்டிகள் மற்றும் ஸ்டிக்கர்களை வீட்டுச்சுவர்களில் ஒட்டுவதாகவும் சிலர் எம்மிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.
இது தவிர இப்பிரதேசங்களில் பாரிய தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் எதுவும் நடைபெற்றதாக எமக்கு தெரிவிக்கப்படவில்லை.
பெப்ரல் அமைப்பு தேர்தல் வன்முறைச்சம்பவங்கள் மற்றும் தேர்தல் சட்டங்களை மீறும் நடவடிக்கைகள் தொடர்பிலும் தேர்தல் தொடர்பிலும் அவதானித்து வருவதாகவும் அதற்காக பெப்ரல் அமைப்பு உத்தியோகத்தர்களை நியமித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.













