தவறிக் கற்பதிலிருந்து விடுபடுதலை நோக்கி....: ப.ராஐதிலகனின் 'இருவேறு அரங்குகளின் இரு ஆளுமைகள்' நூலிற்கான முன்னுரையிலிருந்து.......

ஈழத்தமிழர் மத்தியில் அரங்கு கல்விக்குரிய விடையமாகி இருக்கிறது, ஆய்வுக்குரிய விடையமாகியும் இருக்கிறது. ஆனால் தற்பொழுது நவீன அரங்க ஆற்றுகை என்பது கேள்விக்குரியதாகி இருக்கிறது. இதற்கு பல்வேறு காரணங்களும், சாட்டுக்களும் சொல்லப்பட்டு வருகின்றன.நாடகமும் அரங்கியலில் உயர் கல்வி கற்றுத் தேறுபவர்களின் எண்ணிக்கை வருடா வருடம் நூறையும் தாண்டியதாக இருந்து வருகின்றது. ஆயினும் இவர்களுள் நாடகக் காரர்களாக எத்தனை பேர் பரிணமித்திருக்கிறார்கள் என்பதும் கேள்விக்குரியதாகி இருக்கிறது. 

பாடசாலைகளில் ஆசிரியர்களாகவும் அரச அலுவலகங்களின் அலுவலர்கர்களாகவும் நாடகமும் அரங்கியலும் உயர்கல்வி கற்றவர்கள் அமைதி கண்டு விடுகின்றனர். பல்வேறு துறைகளில் இருந்தும் ஆர்வம் காரணமாக நாடக அரங்கத் துறையில் ஈடுபட்ட காலம் மாறி, நாடகமும் அரங்கியலைப் படித்துவிட்டு பல்வேறு துறைகளிலும் தொழிலுக்காகத் தக்கவைத்து கொள்ள வேண்டிய நிலை உருவாகி இருக்கிறது. நாடகமும் அரங்கியலும் பாடநெறி ஆகிய பின்னர் ஆர்வம் காரணமாக நாடகத் துறைக்கு வருபவர்களையும் காணமுடிவதில்லை. இது மிகவும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய விடயம்.
ஈழத்தமிழர்தம் நவீன நாடக அரங்க வரலாற்று உருவாக்கமும் வளர்ச்;சியும் வௌ;வேறு துறைகளைச் சேர்ந்த ஆனால் நாடகத்துறையில் கொண்ட ஈடுபாடு காரணமாக உழைத்தவர்களால் ஆக்கப்பட்டிருக்கிறது. நவீன அரங்கப் பரப்பில் எப்பொழுதும் பாரம்பரிய அரங்குகள் அருகிப்போகின்றன. அவை பேணப்பட வேண்டும் எனக் கற்ப்பிக்கப்பட்டு வருகின்றது. ஆயினும் பாரம்பரிய அரங்குகள் பற்றிய தேடலும் அறிதலும் உள்ளவர்கள் இதனை ஏற்றுக் கொள்வதில்லை.
இலங்கையில் தமிழர் வாழும் பல்வேறு பகுதிகளிலும் பாரம்பரிய அரங்குகள் ஆடப்பட்டு வருவது யதார்த்தமாக இருக்கிறது. ஆனால் நூற்றுக்கணக்கான அளவில் உயர்கல்வி பயிலும் நாடக அரங்கியல் மாணவர்களும் அவர்களுக்குக் கற்ப்பிக்கும் ஆசான்களும் உள்ள சூழலில் எத்தனை நவீன நாடகங்கள், சிறுவர் நாடகங்கள் என்பன அரங்கேறுகின்றன?அரசசார்பற்ற நிறுவனங்களது விழிப்புணர்வுத் திட்டங்களும், தமிழ்த்தினப் போட்டிகளும் இல்லையெனில் நிலை இன்னும் பரிதாபகரமானதாகவே இருக்கும்.  ஆனால் எங்கும் எவரும் நவீன அரங்குகள் அருகி விட்டதாகக் கற்ப்பிப்பதுமில்லை, கற்பதுமில்லை. இருப்பதை இல்லாததாகவும் இல்லாததை இருப்பதாகவும் கனவு காணும் நிலையை கற்கை நெறியாகிய நாடகமும் அரங்கியலும் ஆக்கிவிட்டிருக்கிறது.
அடிப்படையில் தெரிவுக்குரிய இலகுவான பாடமாகவும் பரீட்சைக்குரிய மற்றுமொரு பாடமாகவும் நாடகமும் அரங்கியலும் கலைத்துறையில் நிலைநிறுத்தப் பட்டிருப்பது 'உண்மை வெறும் புகழ்ச்சியில்லை' என்றுதான் கூறவேண்டி இருக்கிறது. 
இந்த நிலமைக்கான காரணங்களும் புதிரானவை அல்ல. நடைமுறையிலுள்ள பரீட்சை மையக் கல்வி முறைமை உயர்கல்வி நிறுவனங்களில் கற்ப்பிக்கும் ஆசிரியர் அவர்தம் தெரிவுகளில் நிகழும் பாராபட்சங்கள் என்பன வாய்ப்பான சூழ்நிலைகளைச் சிதைவடையச் செய்திருக்கின்றன எனச் சுருக்கமாகக் குறிப்பிடலாம்.
இந்தப் பின்னணியில் ப.ராஜதிலகனின் 'இரு வேறு அரங்குகளின் இரு ஆளுமைகள்' நூல் புலப்படுத்துவது பற்றிச் சிந்திப்பது பொருத்தமானதாக இருக்கும். 
அண்ணாவியார் பாலகப்போடி ஈழகூத்தரங்கின் ஆளுமை. பேராசிரியர் சே.இராமானுஜம் தமிழக நவீன அரங்கின் ஆளுமை இந்த இருவருமே அரங்கைத் தங்களுக்குள் சுமந்திருப்பவர்கள். அதன் காரணமாக ஆளுமைகளாகப் பரிணமித்திருப்பவர்கள். நாடகமும் அரங்கியலும் பாடத்தைக் கற்ப்பிப்பவர்களும் கற்பவர்களும் அறிந்துணர்ந்து கொள்ள வேண்டிய ஆளுமைகள் இவர்கள். பரீட்சைக்கு வரும் சிறுகுறிப்புக்களாக பாடக்குறிப்புக்களில் சுருக்கப்பட்டு விநியோகப் படுத்துவதற்கு உரியவர்கள் அல்லர். 
அண்ணாவியார் பாலகப்போடி மற்றும் பேராசிரியர் சே.இராமானுஜம் ஆகிய இரு ஆளுமைகளது அறிவும் உணர்வும் நாடக அரங்காக இயங்கிக் கொண்டிருப்பவை. இந்த நிலையை எவ்வாறு அறிய வைப்பது, உணர வைப்பது? இதை எவ்வாறு பரீட்சிப்பது? நாடகம் செய்வதினூடாகவே நாடகத்தைக் கற்க முடியும். அண்ணாவியார் பாலகப்போடியும் பேராசிரியர் சே. இராமானுஜமும் கூத்தரங்கிலும், நவீன அரங்கிலும் எவ்வாறு இயங்கி இருக்கின்றனர்? 
இது தேடல், அறிதல் உணர்தல், செயற்ப்படுதல், மதிப்பிடுதல் என நடைமுறைக்கு வரும்பொழுது அரங்கு பற்றிய கற்றல் நிகழத் தொடங்குகிறது. இந்த வகையான பயணத்தை தொடங்கி இருக்கும் ப.ராஜதிலகன் ஆக்கியிருக்கும் இந்நூல் அதற்குச் சாட்சியாக இருக்கிறது.
பாரம்பரிய அரங்கின் நுண்மான் நுழைபுலம் அறிந்த ஆளுமைகளில் ஒருவர் அண்ணாவியார் பாலகப்போடி. அண்ணாவிமார்களையும் பாரம்பரிய அரங்கையும் சிறுமைப்படுத்தியதில் நவீன அரங்கக் கற்கைக்கும் முக்கிய பங்குண்டு. கூத்துப் பற்றிய பல ஆய்வுகள், நூல்கள் என்பன இதற்குச் சான்றுகளாக இற்றைவரை இருந்து வருகின்றன.
    
காலனியம் அறிமுகப்படுத்திய நவீன அறிவு அதற்கு முன்னிருந்த அறிவு முறைகள், திறன்கள் எல்லாவற்றையும் பிற்போக்கானவையாகவும், மூடநம்பிக்கைகளாகவும் கற்ப்பித்துக் கைவிடச் செய்திருப்பதில் பெருவெற்றி கண்டிருக்கிறது என்பது மிகவும் மெதுவாகவே உணரப்பட்டு வருகிறது. விழிம்புநிலை, பெண்ணிய, சுற்றுச்சூழல், பூர்விகக் குடிகள் சார்ந்த சிந்தனைகள் செயற்பாடுகள் என்பன இதற்கு வழிதிறந்து விட்டிருக்கிறது. 
ஆயினும் நவீன கல்வி முறையும், வெகுசன ஊடகங்களும் இத்தகைய நிலைமைகளை மூடி மறைத்து தொடர்ந்து ஆதிக்க நிலைகளைத் தக்க வைப்பதையே நோக்காகக் கொண்டு இயங்கி வருகின்றன. 
இந்நிலையில் நாடக அரங்கியலை எவ்வாறு அணுகப்போகின்றோம்? இரு வேறு அரங்குகளின் இரு ஆளுமைகளை எவ்வாறு புரிந்து கொள்ளப் போகின்றோம்? என்ற கேள்விகளை எழுப்பி ஈழத்து நாடக அரங்கப்பரப்பில் ஆற்றலும் அர்ப்பணிப்பும் மிக்க துளிராக முளைவிட்டிருக்கும் ப.ராஜதிலகன் உயிர்ப்பை விளைவிக்கும் உயிரியல் பன்மை போல் நாடக அரங்கப் பன்மையின் வளர்சிக்கு வாழ்வாரென வாழ்த்துகிறேன். 
கலாநிதி சி.ஜெயசங்கர்,
முதுநிலை விரிவுரையாளர்,
நுண்கலைத்துறை,
கிழக்குப் பல்கலைக்கழகம்

 sjeyasankar@gmail.com