மட்டக்களப்பை சேர்ந்தவர் குவைத் நாட்டிற்கான இலங்கைத் தூதுவராக நியமனம்

 மட்டக்களப்பை சேர்ந்த காண்டீபன் பாலசுப்ரமணியம்  ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன அவர்களால் குவைத் நாட்டிற்கான இலங்கைத் தூதுவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்

   ஜனாதிபதி அவர்களால் வழங்கப் பட்ட அறிமுகச் சாசனப் பத்திரத்தை  குவைத் நாட்டின் எமிர் (மன்னர்)  மேன்மை தங்கிய சபா அல் அஹமட் அல் ஜாபர் அல் சபா அவர்களிடம் கடந்த வாரம் கையளித்தார்.

இலங்கைத் தூதுவரது இல்லத்திலிருந்து கோலாகல மோட்டாரூர்திப் பவனியாக அழைத்துச் செல்லப்பட்ட தூதுவருக்கு
மன்னரது மாளிகையில் இலங்கை தேசிய கீதம் முழங்க இராணுவ அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.



கையளிப்பு வைபவத்தைத் தொடர்ந்து இடம்பெற்ற கலந்துரையாடலின்போது  ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன அவர்களது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்ட தூதுவர், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மென்மேலும் பலப்படுத்துதற்கான  வழிவகைகள் பற்றி அளவளாவினார்

இலங்கை ஜனாதிபதி அவர்களுக்கும் தமது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்ட எமிர் அவர்கள் பதவியேற்றுள்ள புதிய  அரசு பல்லின, மத, இன, மொழி சார்ந்த ஒரு சமூகத்தை கட்டியெழுப்ப முயலும் என தாம் நம்புவதாக குறிப்பிட்டார். அத்துடன் தொடர்ந்தும்  இலங்கைக்கான  பொருளாதார, மற்றும் அரசியல் ரீதியான உதவிகளை முன்னெடுக்கவுள்ளதாக எமிர் அல் ஜாபர் அவர்கள் உறுதியளித்தார்.

புதிய அரசாங்கத்தின் கொள்கைகள் பற்றியும் நீண்ட காலமாக புரையோடிப்போயுள்ள சர்ச்சைகளை  தீர்ப்பதற்கான அரசின் உறுதிப்பாடு பற்றியும் எடுத்துரைத்த தூதுவர் காண்டீபன் தற்போது தமது தாய்நாட்டில் உதயமாகியுள்ள முன்னேற்றகரமான அரசியல் கலாச்சாரம் நீடித்து நிலைக்க குவைத் பொருளாதாரரீதியாக உதவ முன்வரவேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். குறிப்பாக தொழிலசார், தி்றமைசார் வேலைவாய்ப்புகள் மற்றும் நேரடி முதலீடுகள் மூலமாக உதவிகளை எதிர்பார்ப்பதாக கூறினார்.

இருதரப்பு உறவுகள் பற்றி மிகவும் திருப்தி தெரிவித்த அரசு தலைவர் அல் சபா, புதிய தூதுவரது பதவிக்காலத்தில் இவ்வுறவு மென்மேலும் வளமுறும் எனத் தாம் நம்புவதாக குறிப்பிட்டார். அத்துடன் இதன் பொருட்டு தனது அரசின் முழு ஒத்துழைப்பையும் உதவியையும் வழங்கத் தயாராக உள்ளதாக எமிர் அவர்கள் குறிப்பிட்டார்.

இலங்கை வெளிவிவகார சேவையில் சுமார் இருபது வருட கால அனுபவமுள்ள  தூதுவர் காண்டீபன் அவர்கள்,நெதர்லாந்து, பிலிப்பைன்ஸ், சீனா, எகிப்து ஆகிய  நாடுகளிலும் பல்வேறு சர்வதேச அமைப்புகளிலும் ராஜதந்திரியாக இலங்கையைப் பிரதிநிதித்துவப் படுத்தியவர்.

மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியில் பயின்று, விவசாயப் பொருளியலில் எம் எஸ்சி முதுமானிப் பட்டம் பெற்றுள்ளார்