எனவே இவ்வாறான விடயங்களைக் கேள்விக்குட்படுத்தி முற்று முழுதாக சிறுவர்களினை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட அரங்க வடிவமே சிறுவர் கூத்தரங்காகும். இந்த எண்ணக்கருவினை முன்வைத்தவராக கலாநிதிசி.ஜெயசங்கர் காணப்படுகின்றார். மகிழ்வூட்டலுக்கு ஊடான அறிவூட்டலுக்கும் திறன் வளர்த்தலுக்குமான சாதனமாக சிறுவர் கூத்தரங்கு காணப்படுகின்றது.
கூத்து என்பது இரவிரவாக நிகழ்த்தப்படும் ஆற்றுகை மட்டுமல்ல. இது தொடர் செயற்பாடுகள் பலவற்றினைக் கொண்டது.சட்டம் கொடுத்தல் சதங்கையணிவிழா,அரங்கேற்றவிழா,வீட்டுக்குவீடு ஆடும் நிகழ்வு போன்ற சமூகம் தழுவிய பல்வேறு செயற்பாடுகளை உள்ளடக்கியது. இச் செயற்பாடுகள் யாவும் சிறுவர்களின் ஆளுமை விருத்திக்கும், உள்ளுறை ஆற்றல் வெளிப்படுத்தவும், தனது சமூகம் சார்ந்த சிந்தனை விருத்திக்கும்,செயற்பாட்டுத் தூண்டலுக்கும் மிகவும் பொருத்தமான கலை வழிவிளையாட்டுக் களமாகவும்,கல்விக் களமாகவும் விளங்குகின்றது.
சிறுவர் கூத்தரங்கு பற்றி கலாநிதி சி.ஜெயசங்கர் அவர்கள் குறிப்பிடும் போது''சிறுவர்கள் தங்களையும் தாங்கள் வாழும் சூழலையும் தமது சமூகத்தினரையும் விளங்கிக் கொண்டு உலகம் தழுவிய அறிவை,அனுபவத்தைபெற்றுக் கொள்வதற்கும், ஆற்றல்களை வெளிப்படுத்துவதற்கும், சவால்களை எதிர்கொள்வதற்கும்,சாதனைகளைப் புரிவதற்குமான தயார்படுத்தல்களுக்குமானதே சிறுவர் கூத்தரங்கு. இந்நிலையில் சிறுவர்களது ஆளுமை,ஆற்றல் மழுங்கடிக்கப்படாத வகையில் வளர்த்தெடுப்பதற்கான சூழலாகச் சிறுவர் கூத்தரங்கம் உருவாக்கம் பெற்றிருக்கின்றது''என்கின்றார்.
சிறுவர் கூத்தரங்கின் ஆரம்பமாக 'மழைப்பழம்'என்கின்ற வடமோடிக் கூத்தானது 2012ஆம், 2013ஆம் ஆண்டுகளில் மட்டக்களப்பு அமிர்தகழி மாமாங்கேஸ்வரர் ஆலயத் திருவிழா சூழலில் ஆற்றுகைசெய்யப்பட்டது. இதற்கானகதைக் கருவானது கலாநிதி சி. ஜெயசங்கர் அவர்களினால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட கிரிஜா எனும் சிறுவர் கதையினை அடிப்படையாகக் கொண்டு சீலாமுனை கூத்துபனுவல் ஆசிரியர் திருசெ.சிவநாயகம் அவர்களினால் 'மழைப்பழம்'எனும் பெயரில் சிறுவர் கூத்துபிரதி எழுதப்பட்டது. இக்கூத்துப் பிரதியை சீலாமுனை கிராமத்தைச் சேர்ந்ததிருசி.ஞானசேகரம் அண்ணாவியார் அவர்களால் பயிற்றுவிக்கப்பட்டது. கிழக்குபல்கலைக்கழக இரண்டாம் வருடசிறப்புக் கற்கைமாணவர்களும், மூன்றாவதுகண் உள்ளுர் அறிவுத்திறன் செயற்பாட்டுக் குழு நண்பர்களும் இணைந்துஆற்றுகைசெய்திருந்தனர்.
இதன் அடுத்தகட்டமாக 2014ஆம் ஆண்டுசித்தாண்டி மூன்றாம் குறிச்சியிலுள்ளசிறுவர்களைக் கூத்தர்களாக் கொண்டு அண்ணாவியார் வே.தம்பிமுத்து அவர்களினால் பயிற்றுவிக்கப்பட்டு மழைப்பழம் சிறுவர் கூத்தானது களரியேற்றப்பட்டிருந்தது. இது இறுதியாண்டு ஆய்வின் ஒரு பகுதியாக செயற்படுத்தப்பட்டிருந்தது. இச்சிறுவர் அரங்கச் செயற்பாடுகள் மட்டக்களப்பு மாவட்டத்தினை மையமாக்கொண்டு ஆற்றுகை செய்யப்பட்டவையாகும்.
கிழக்குப் பல்கலைக்கழக நுண்கலைத் துறையின் இறுதியாண்டு மாணவன் இ.கங்கைக்கோபாலனால் நாடகமும் அரங்கியலும் இறுதியாண்டு ஆய்வுக்கான தயாரிப்பாக யாழ்ப்பாணம் சுதுமலை சிந்மய பாரதிவித்தியாலய மாணவர்களைக் கொண்டு மழைப்பழம் சிறுவர் கூத்தானது பயிற்றுவிக்கப்பட்டுவருகின்றது. இதற்கு அண்ணாவியாராக திருசி. ஞானசேகரம் அவர்களும், ஏட்டண்ணாவியாராக திருசெ.சிவநாயகம் அவர்களும் செயற்பட்டு வருகின்றனர். இவ்வாய்வினை வழிப்படுத்துபவராக கிழக்குப் பல்கலைக்கழக முதுநிலை விரிவுரையாளர் கலாநிதிசி.ஜெயசங்கர் அவர்கள் காணப்படுகின்றார்.
இவ்வாற்றுகையின் சதங்கையணி விழாவானது எதிர்வரும் 15.09.2015 செவ்வாய்க் கிழமைபிற்பகல் 3.30 மணிக்கு யாழ் சுதுமலை சிந்மய பாரதி வித்தியாலயத்திலே பாரம்பரிய முறைப்படி நடைபெறவுள்ளது. இதன் அடுத்தகட்டமான அரங்கேற்றவிழா16.09.2015 புதன்கிழமைபிற்பகல் 5.00 மணிக்குசுதுமலை ஸ்ரீ புவனேஸ்வரிஅம்பாள் ஆலயமுன்றலில் களரியேற்றப்படவுள்ளது.
நவீனகல்வி முறையின் ஆதிக்கத்திற்கும் அப்பால் இச்சிறுவர் கூத்தாற்றுகை நிகழ்வானது சிறுவர்களிடையே போட்டித் தன்மையற்ற வகையில் மகிழ்ச்சியாகவும் ஒற்றுமையாகவும் முன்னெடுக்கப்பட்டு சமூக ஒன்றுகூடலுடன் கொண்டாடப்படுகின்றது.சிறுவர்களது பல்வகைத் தன்மைகளை வளர்க்கும் அரங்காக இது உள்ளது. ஆக்கபூர்வமான,படைப்பாற்றல் மிக்க தலைமுறையினை உருவாக்குவதற்கு இவ்வாறான அரங்கச் செயற்பாடுகள் தொடர்ச்சியாகப் பல்வேறு இடங்களில் முன்னெடுக்கப்படவேண்டியதுஅவசியமாகும்.
நவசுகன் துலக்சனா.












