சிறுவர்
விவகார இராஜாங்க அமைச்சின் சிறுவர் செயலகத்தின் அனுசரணையுடன் ஆலையடிவேம்பு பிரதேச
செயலகம் நடாத்திய முன்பள்ளி ஆசிரியைகளுக்கான ஒருநாள் திசைமுகப்படுத்தல்
பயிற்சிநெறி இன்று (18) பிரதேச செயலகக் கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.
ஆலையடிவேம்பு
பிரதேச செயலாளர் வி.ஜெகதீசன் தலைமையில் இடம்பெற்ற இப்பயிற்சிநெறியினை
முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் வை.உஜெயந்தன் ஏற்பாடு செய்திருந்தார்.
இதன் பிரதம அதிதியாக திருக்கோவில் கல்வி வலய ஆரம்பப் பாடசாலைகளுக்கான பிரதிக் கல்விப்
பணிப்பாளர் எஸ்.தர்மபாலன் கலந்து சிறப்பித்திருந்தார். ஆலையடிவேம்பு பிரதேச
முன்பள்ளி ஆசிரியைகள் சுமார் முப்பது பேர் பங்குபற்றிய இப்பயிற்சிநெறி மூன்று
கட்டங்களாக நடாத்தப்பட்டிருந்தது.
முதலில் உடல்மொழி
மற்றும் நடித்துக்காட்டல் முறையில் முன்பள்ளிச் சிறார்களைக் கற்பிக்கும்
வழிமுறைகள் தொடர்பில் ஆசிரியைகளுக்கு வழங்கப்பட்ட பயிற்சிகள் பிரபல நாடகமும்
அரங்கியலும் பாட ஆசிரியர் எஸ்.சுமனால் வழங்கப்பட்டன. இதில் சிறுவர் பாடல்களை அவற்றுக்கான
அபிநயத்துடன் நடித்துக்காட்டல் தொடர்பான பயிற்சிகளும், உடல்மொழிகளைக்கொண்டு சிறுவர்
கதைகளை உருவகப்படுத்தும் வழிமுறைகள் என்பன ஆசிரியைகளுக்குக் கற்றுக்கொடுக்கப்பட்டன.
அடுத்து
முன்பள்ளிச் சூழல்களில் இடம்பெறக்கூடிய எதிர்பாராத, அசாதாரண விடயங்களிலிருந்து சிறார்களைப்
பாதுகாத்தல் தொடர்பான பயிற்சியினை விளக்கப்படங்கள் மற்றும் அறிவுரைகளை உள்ளடக்கியவகையில்
பிரதேச செயலாளர் முன்னெடுத்தார்.
இறுதியாக
விவசாயத் திணைக்கள அபிவிருத்தி உத்தியோகத்தரும் கடதாசிக் கைப்பணி, அலங்காரப்பொருள்
தயாரிப்பில் தேர்ச்சி பெற்றவருமான கே.கயந்தராஜாவினால் முன்னெடுக்கப்பட்ட கடதாசி அலங்காரப்பொருள்
தயாரித்தல் தொடர்பான பயிற்சியில் வீடியோ காட்சிகள் மற்றும் செய்துகாட்டல்கள்
மூலமாக முன்பள்ளி மாணவர்களைக்கொண்டு, அவர்களின் புத்திக்கூர்மையை அதிகரிக்கக்கூடிய
வழிகளைக்கொண்ட கடதாசி அலங்காரப் பொருட்களைத் தயாரிக்கும் பயிற்சிகள் ஆசிரியைகளுக்கு
கற்றுக்கொடுக்கப்பட்டன.












