கிழக்கு
மாகாண முதலமைச்சரின் செயலக நிதி அனுசரணையுடன், அம்பாறை மாவட்ட கிராம அபிவிருத்தித்
திணைக்களத்தினால் நடாத்தப்படவுள்ள பனை மூலப்பொருட்களைக் கொண்டு அலங்காரப்
பொருட்களைத் தயாரிப்பது தொடர்பான நான்கு நாள் பயிற்சிநெறியின் உத்தியோகபூர்வ ஆரம்ப
வைபவம் இன்று (07) காலை மாவட்ட கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் எச்.கலீலுல்
ரஹ்மான் தலைமையில் அக்கரைப்பற்று வை.எம்.சி.ஏ. மண்டபத்தில் இடம்பெற்றது.
ஆலையடிவேம்பு
பிரதேச செயலாளர் வி.ஜெகதீசன் பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்த இந்நிகழ்வில் ஆலையடிவேம்பு
பிரதேச கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.ரி.ஏ.நாஹிப், அம்பாறை மாவட்ட கிராம
அபிவிருத்தித் திணைக்களத்தின் அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.ஏ.எம்.பஷீர் மற்றும் பிரதேச
செயலாளரின் வெகுஜனத் தொடர்பு உத்தியோகத்தர் எஸ்.ஜே.பிரேம் ஆனந்த் ஆகியோரும் கலந்து
சிறப்பித்தனர்.
அம்பாறை
மாவட்டத்தின் ஆலையடிவேம்பு, திருக்கோவில், பொத்துவில் மற்றும் இறக்காமம் ஆகிய
நான்கு பிரதேச செயலாளர் பிரிவுகளிலிருந்தும் தெரிவு செய்யப்பட்ட தமிழ், முஸ்லிம்
யுவதிகள் சுமார் 50 பேர் இன்று முதல் எதிர்வரும் பத்தாம் திகதிவரை நான்கு நாட்கள் குறித்த
வை.எம்.சி.ஏ. மண்டபத்தில் இடம்பெறவுள்ள பனை மூலப்பொருட்களைக் கொண்டு எவ்வாறு
விலைமதிப்புள்ள அலங்காரப் பொருட்களான பூக்கள், பூங்கொத்துகள் என்பவற்றைத்
தயாரிப்பது தொடர்பாகப் பயிற்றுவிக்கப்படவுள்ளதுடன், இத்துறையில் சிறப்புப்பயிற்சி
பெற்ற திருமதி. எம்.எஸ்.முமீனுமா குறித்த பயிற்சிகளுக்கு போதனாசிரியையாகவும்
பணியாற்றவுள்ளார்.






















