கடந்த செப்டெம்பர்,
10 முதல் 16 (இன்று)வரை இலங்கை அரசினால் நாடளாவிய ரீதியில்
பிரகடனப்படுத்தப்பட்டுள்ள தேசிய நுளம்புகள் ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு
ஆலையடிவேம்பு பிரதேச பொதுத்துறை ஸ்தாபனங்களான பிரதேச செயலகம், சுகாதார வைத்திய
அதிகாரியின் பணிமனை, பிரதேச சபை, அக்கரைப்பற்று பொலிஸ் நிலையம் மற்றும் இராணுவ
முகாம் அதிகாரிகளால் ஒன்றிணைந்து முன்னெடுக்கப்பட்டுள்ள பொதுமக்களினதும், அரச,
தனியார் காணிகளிலும் உயிர்கொல்லி நுளம்புகள் பெருகும் இடங்களைக் கண்டறிந்து சுத்தப்படுத்தும்
பரிசோதனைகள் பரவலாக முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
அதன்
தொடர்ச்சியாக இன்று (16) காலை ஆலையடிவேம்பு பிரதேசத்திலுள்ள எல்லா கிராமசேவகர்
பிரிவுகளிலுமுள்ள பொதுமக்களின் வீட்டுச் சூழல்களில் நடாத்தப்பட்ட பரிசோதனைகளில்
ஆலையடிவேம்பு பிரதேச செயலக டெங்கு கட்டுப்பாட்டு வேலைத்திட்டங்களுக்குப் பொறுப்பான
உத்தியோகத்தர் கே.கிரிஷாந்தன் தலைமையில் கிராம உத்தியோகத்தர்களும், பொருளாதார
அபிவிருத்தி உத்தியோகத்தர்களும், திவிநெகும அபிவிருத்தி உத்தியோகத்தர்களும்
கலந்துகொண்டதோடு, குறித்த கிராமசேவகர் பிரிவுகளுக்குப் பொறுப்பான பொதுச் சுகாதாரப்
பரிசோதகர்கள், மருத்துவ மாதுக்கள் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களும், இராணுவ
சிப்பாய்களும் பங்குபற்றியிருந்தனர்.
இன்றைய
பரிசோதனைகளின்போதும் நுளம்புகள் பெருகக்கூடியவகையில் பொதுமக்களின் குடியிருப்புகளை
அண்டிய சூழலைக் கொண்டிருந்த ஆபத்தான இடங்கள் அடையாளம் காணப்பட்டு அவற்றின்
உரிமையாளர்களைக் கொண்டு உடனடியாகச் சுத்தம் செய்யப்பட்டதுடன், கவனிப்பாரற்ற காணிகள்
தொடர்பில் அவற்றின் உரிமையாளர்களுக்கு எழுத்துமூல எச்சரிக்கைக் கடிதங்களும்
கையளிக்கப்பட்டுள்ளன.












