ஏரேறும் தேசத்தில் தேரேறும் எங்கள் சிவனே..........

ஏரேறும் தேசத்தில்
தேரேறும் எங்கள் சிவனே
வடமிழுக்க வலம்வரும்
விடமுண்ட எங்கள் கோவே

ஆண்டுவரும் தமிழ் மண்ணில்
ஆண்டவனாய் நிற்பவனே
அந்நியப்படையை எதிர்த்து
அலறியோடச் செய்தவனே

எமனுக்கும் உதைத்தவனே
எவருக்கும் அஞ்சாதவனே
உலகுக்கு ஒருவனே
உருகுவார்க்கினியனே

திக்கெட்டும் காத்தருளும்
கொக்கட்டிச்சோலை ஈசனே
துக்கம் போக்கிடவே என்றும்
பக்கத்தில் இருப்பவன் நீயே

கல்லான நந்தியையன்று
புல்லுண்ணச்செய்திட்ட இறையே
பொல்லாத துன்பங்கள் எல்லாமே
இல்லாத நிலையைத் தருவாயே


குடித்திருவிழா கண்டு
குதிகலமுற்ற அப்பனே
பாடித்துதிக்கும் பக்தர்களின்
பாவம் போக்கணும் நீயே

திருவேட்டை சென்று
தீர்த்தமாடிடும் இறைவா
நிருதர்கள் ஒடுங்கவே எழுவாய்
நித்தியமான எம்மிறைவா

போரோய்ந்த தமிழ் மண்
சீரோங்கிச் செழிக்கவே இன்று
தேர் ஏறும் எங்கள் சிவனே
காக்கணுமருள் செய்து எமையே

 - கவிஞர் த.மேரா