இன்றைய உலகம் தகவலைத் தளமாகக் கொண்டே
இயங்கிக்கொண்டிருக்கிறது. கைத்தொழில் புரட்சி உலகளவில் பல்வேறு
தளங்களிலும்; உண்டுபண்ணிய மாற்றங்களை விட, தகவல்துறைப் புரட்சியானது
பன்மடங்கு மாற்றங்களை ஏற்படுத்திக்கொண்டிருக்கின்றது. ஆய்வுகள் மூலமான
கண்டுபிடிப்புக்கள் கைத்தொழில் புரட்சிக்கு வித்திட்டன. இதன் பரிணாம
வளர்ச்சி தகவல் புரட்சியாக உலகை ஆண்டுகொண்டிருக்கின்றது. உலக ஒழுங்கைத்
தீர்மானிக்கின்ற மாபெரும் சக்தியாக, மூலாதாரமாக அது தன்னை
நிலைநிறுத்திவிட்டது. சமகாலப் பேசுபொருளான அறிவுச் சமூகத்தின்
ஆய்வுகளுக்கான அடித்தளமாக தகவல் வளங்கள் தன்னை நிரூபித்து விட்டது. அத்தனை
தனித்துவம் மிக்க தகவல் வளங்களின் இருப்பிடமே தரவு தளங்கள். சமகாலத்தில்
அறிவுலக ஆய்வுகளிற்கு மூலாதாரமாக விளங்கும் தரவுதளங்களின்
பயன்பாட்டுத்தன்மையை, அதன் வகிபாகத்தை , அதன் முக்கியத்துவத்தை அறிந்திக்க
வேண்டியது ஆய்வாளர்களின் கடமை.
மனித சமுதாயம் எதிர்நோக்கும் சகலவிதமான சவால்கள் மற்றும் தடைகளைக் கட்டுப்படுத்துவதற்கும், நிகழ்கால உலகளாவிய நெருக்கடி நிலைமைகளுக்கு வெற்றிகரமாக முகங்கொடுத்து முடிவுகளை கண்டறிவதற்கும் ஆய்வுகள் அத்தியாவசியமானதாக அமைகின்றன. ஆய்வு மூலம் வெளிவரும் முடிவுகள் ஆவணங்களாக்கப்பட்டு அறிவின் விருத்திக்கு ஆதாரமாக இருந்து வருகின்றது.; அத்தகைய ஆவணங்களைச் சுமந்து அடுத்துவரும் ஆய்வாளர்களின் தேவைகளுக்காக வழங்குவது காலத்தின் நியதி. தகவல் தொழிநுட்பத்தின் வளர்ச்சி இந்த மாபெரும் பணியை இலகு வடிவத்திற்கு மாற்றி அமைத்திருக்கின்றது. அதுவே இன்று தரவுதளங்கள் எனும் பெயரில் உலக அறிவினைச் சுமந்து உலகெலாம் வலம் வரும் தகவல் பொக்கிஷமாக விளங்குகின்றது.
மனிதனின் விந்தைமிகு சிந்தனை, அறிவுலகில் தகவல் வளத்திற்கான கேள்வியை அதிகரித்துக்கொண்டே செல்கின்றது. குறிப்பாக ஆய்வுகளிற்கான அடிப்படைச் சாதனமாக தகவல் வளங்கள் தன்னை நிலைநிறுத்தி விட்டது. ஆய்வு ஓர் தொடர் நிகழ்வு. ஆய்வுச் செயற்பாட்டிற்கு ஒரு முற்றுப்புள்ளி இல்லை. அதாவது முடிவில்லாத, தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டுக்கொண்டிருக்கக்கூடிய ஓர் செயற்பாடே ஆய்வு. இந்த ஆய்வுகளின் மூலம் வெளிவரும் முடிவுகள் இன்னுமொரு ஆய்வாளரால் தக்க சான்றுகள் மூலம் மறுதலிக்கப்படலாம் அல்லது மாற்றி அமைக்கப்படலாம். இதுமட்டுமல்லாது ஆய்வாளர் ஒருவர்க்கு எழுந்துள்ள ஆய்வுப் பிரச்சினை சார்பாக கடந்த காலங்களில் ஏதாவது ஆய்வுகள' இடம்பெற்றுள்ளனவா? அப்படி ஆய்வுகள் செய்யப்பட்டிருந்தால் அதில் பயன்படுத்தப்பட்டுள்ள முறைமைகள் என்ன? குறித்த ஆய்வின் மூலம் வெளிவந்துள்ள முடிவுகள் தற்போது எழுந்துள்ள ஆய்வுப் பிரச்சினைக்கான முழுமையான தீர்வாக அமையுமா? அல்லது குறித்த ஆய்வினை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தவேண்டியுள்ளதா? முதலான ஆய்வாளர் ஒருவருக்கு அடிப்படையாக எழக்கூடிய வினாக்களிற்கு விடை காண்பதற்கு தகவல்வளங்கள் இன்றியமையாச் சாதனங்களாக விளங்குகின்றன.
இலங்கை ஒரு சிறிய நாடாக விளங்குகின்றபோதிலும் ஆய்வு முயற்சிகள் மற்றும் ஆய்வு வெளியீடுகள் சார்பாக ஒப்பீட்டளவில் சிறந்த இடத்தில் உள்ளமையினை சில ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். மொத்த உள்நாட்டு உற்பத்தியில் குறைந்தளவான ஒதுக்கீடே ஆராய்ச்சித் துறைக்காக ஒதுக்கப்பட்டுள்ள போதிலும் இலங்கையின் ஆய்வுகளுக்கு சர்வதேச ரீதியாக உள்ள செல்வாக்கு இந்திய துணைக்கண்ட நாடுகளோடு ஒப்பிடுகையில் உயர்ஸ்தானத்தில் உள்ளமையை ரொனால்ட் ரூசோ மற்றும் டில்றுபா மகுறுபா ஆகியோர் தங்கள் ஆய்வில் சுட்டிக்காட்டியுள்ளனர். ஆனால் இலங்கை ஆய்வாளர் பெத்தியாகொட குறிப்பிடுகையில் இலங்கையில் ஆய்வு முயற்சிகள் ஏற்றுக்கொள்ளக்கூடிய நிலையில் இல்லை என கூறுகின்றார். இந்த இரண்டு விடயங்களும் கவனத்தில் எடுக்கப்படவேண்டியவை. மேலும் இவை இரண்டும் வெவ்வேறு காலப்பகுதிகளில் சொல்லப்பட்ட கருத்துக்கள் என்பதும் கவனத்தில் கொள்ளப்படவேண்டிய விடயங்களாகும்
உண்மையில் சர்வதேச ஆய்வு வெளியீட்டுத் தரநிர்ணயத்தின் அடிப்படையில் இலங்கை ஏற்றுக்கொள்ளக்கூடிய நிலையில் இருப்பினும் வருடாந்த ஆய்வுவெளியீடுகளின் எண்ணிக்கை சார்பாக கூடிய அக்கறை செலுத்த வேண்டிய நிலைமையில் உள்ளமை புலனாகின்றது. மேற்படி, ஏனைய நாடுகளோடு ஒப்பிட்டு மதிப்பீட்டாய்வினை மேற்கொள்வதற்கு தரவுதளங்களின் தேவை இன்றியமையாதது.சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்டு பின்பற்றப்படுகின்ற தரவுதளங்கள் பலவற்றின் பயன்பாட்டுத் தன்மை ஆய்வுவெளியீடுகளை திட்டமிடுவதில் செல்வாக்குச் செலுத்த வல்லன.
துரையப்பா பிரதீபன்
ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகம்
அடுத்த ஞாயிறு தொடரும்













